பாரதியின் கனவு நினைவாக…
முதல்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் பயிலும் முதன்மை
மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இப்படிப்பட்ட
நிலை இல்லை. இந்த விவரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டறிக்கையில்
இடம் பெற்றுள்ளது.
இதற்குப்
பின்புலமாக அமைந்தது 1986 இல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையும், அக்கொள்கையைத்
தமிழகம் முழுமையாக அமல்படுத்தியதும்தான்.
2000
- 2001 இல் அனைவருக்கும் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஒரு கிலோ மீட்டருக்குள்
தொடக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்குள் நடுநிலைப் பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்குள்
உயர்நிலைப் பள்ளி, ஏழு கிலோ மீட்டருக்குள் மேனிலைப் பள்ளி என்கிற அத்திட்டத்தின் வலுவான
அடிப்படைகளைத் தனக்கான பலமான அஸ்திவாரமாகத் தமிழக அரசு செய்து கொண்டது என்றால் அதில்
மிகையேதும் இல்லை.
2010
இல் அமல்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் காட்டிய
முனைப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் கல்வித் துறை அதற்காகத் தனிக்கவனம் செலுத்திச்
செயல்பட்டது.
பள்ளிக்
கல்வியில் தமிழகத்தின் வெற்றி என்பது, கல்வியளிக்கும் பொறுப்பை அரசுப் பள்ளிகள் மூலமாக
இடைவிடாது செயல்படுத்துவதன் விளைவாகும். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள்
அதிகரித்து, அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறைந்த போதிலும் பல பள்ளிகளை இழுத்து
மூடி விடாமல் இயக்கிக் கொண்டிருக்கும் தார்மீக பொறுப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றும்
இதை சொல்லலாம்.
மேலும்,
ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கையுள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் தமிழகத்தில் இழுத்து
மூடப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஓராசிரியர்
பள்ளிகளும் ஈராசிரியர் பள்ளிகளும் கல்வித் தரத்தைப் பாதிக்கும் என்றாலும் இடைநிற்றல்
இல்லாமல் செய்வதற்கு உதவியிருக்கின்றன.
மாணவர்
எண்ணிக்கையைப் பொருட்படுத்தாது பள்ளிகளை இயக்க அரசு தயாராக இருக்கும் போதுதான் இத்தகைய
நல்ல மாற்றம் நிகழும் என்பதை மறுக்க முடியாது.
தனியார்
பள்ளிகளை விட வலுவான கட்டமைப்பும் முறையான கண்காணிப்பு நிர்வாகம் கொண்ட வரலாறும் தமிழகத்தில்
அரசுப் பள்ளிகளுக்கே இருக்கின்றன. லாப நோக்கின்றி செயல்படவும் அரசுப் பள்ளிகளால் மட்டுமே
முடியும். நிலைமை இப்படியிருக்க தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பதைப் போல அரசுப்
பள்ளிகளும் அதிகரிக்க வேண்டும். ஆனால், எதார்த்தம் அவ்வாறாக இல்லை. ஒவ்வொராண்டும் புதிதாகத்
திறக்கப்படும் அரசுப் பள்ளிகளை விட, புதிதாகத் திறக்கப்படும் தனியார் பள்ளிகள் அதிகமாகிக்
கொண்டு போகின்றன.
இடைநிற்றல்
இல்லாமல் போனதற்குக் காரணமே அண்மைப் பள்ளிளும் அண்மைப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக
அமைந்ததும்தான். அரசுப் பள்ளிகளே அண்மைப் பள்ளிகளாக, விலையில்லாமல் கல்வியை வழங்கிக்
கொண்டிருக்கின்றன.அண்மைப் பள்ளிகள் மற்றும் விலையில்லாக் கல்வி ஆகிய இரண்டு அம்சங்களும்
குழந்தைகளின் கல்வியில் முக்கிய பங்கு வகிப்பவை. நிலைமை இப்படி இருக்க, அண்மை பள்ளி
என்ற வசதியும், விலையில்லாக் கல்வி என்ற வாய்ப்பும் அரசுப் பள்ளிகளில் இருந்தும், பெற்றோர்கள்
ஏன் தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள் என்கிற ஆத்ம பரிசோதனையைத் தமிழகப் பள்ளிக்
கல்வித் துறை செய்து கொண்டால், தமிழ்நாட்டில் கல்வியில் புதிய மலர்ச்சி, புதுப்புரட்சியே
ஏற்படும்.
எவ்வளவு
செலவு ஆனாலும், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டாலும் தன் மக்களுக்கான கல்வியையும் மருத்துவத்தையும்
ஒரு மக்கள் நல அரசு தனியார்களிடம் ஒப்படைக்கவே கூடாது. இராணுவத்தைத் தனியார்களிடம்
ஒப்படைப்பது எந்த அளவுக்கு ஒரு நாட்டுக்கு ஆபத்தோ, அதைப் போன்ற ஆபத்தே கல்வியையும்
மருத்துவத்தையும் தனியார்களிடம் ஒப்படைப்பது. அரசு இந்த அபாயத்தை உணர்ந்து இன்றே கல்வியையும்
மருத்துவத்தையும் தனியார்களிடமிருந்து மீட்டெடுத்து தன்னுடைய பொறுப்பில் தரமாகவும்
விலையில்லாமலும் வழங்க வேண்டும்.
அப்படி
தமிழ்நாடு அரசு கல்வியை வழங்கும் பட்சத்தில் இந்தியாவில் என்ன, உலக அளவில் தமிழ்நாடே
கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பாரதி கண்ட
கனவும் நினைவாகும்.
*****
No comments:
Post a Comment