சமமான கல்வியைத்தான் வழங்குகிறோமா?
அனைவரும்
சமம் என்பதே சமத்துவத்தின் குரல். மக்களாட்சியின் கோட்பாடு.
சமத்துவத்தை
உயர்த்திப் பிடிக்கும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் அனைவருக்கும்
சமமான கல்வி வழங்கப்படுகிறதா?
இங்கு
வழங்கப்படும் கல்வியானது ஒரே மாதிரியான கல்வியே கிடையாது.
பணம்
இருப்பவர்களுக்கு உயர்தரமான கல்வியும், அஃதில்லார்க்குத் தரம் குறைந்த கல்வியுமே கிடைக்கிறது.
நம் நாட்டில் கல்வியில் நிலவும் பாகுபாடுகள் அப்பட்டமானவை.
பள்ளிகளின்
அடிப்படைக் கட்டமைப்புகளில் பாகுபாடுகள், பாடத்திட்டங்களில் பாகுபாடுகள், ஆசிரியர்களில்
பாகுபாடுகள், கிராமம் மற்றம் நகரம் சார்ந்த பாகுபாடுகள் என்று பல்வேறு பாகுபாடுகள்
இந்தியக் கல்வியில் நிலவுகின்றன.
குறிப்பாக,
மத்திய அரசு பாடத்திட்டம் ஒரு மாதிரியாகவும், மாநில அரசுகளின் பாடத்திட்டம் வேறு மாதிரியாகவும்
இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாட
போதனை முறைகளும் கூட ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது கவனிக்கத்தக்கது.
ஒரு பள்ளியில் கிடைக்கும் உயர்தர வசதிகள் மற்றொரு பள்ளியில் கிடைக்காமல் போவதும் கருதத்தக்கது.
நகர்ப்புற
பள்ளிகளை விட கிராமப்புற பள்ளிகளின் நிலை தரம் குறைந்தே காணப்படுகிறது. போதிய அடிப்படைக்
கட்டமைப்புகள் இல்லாமலும் போதிய ஆசிரியர்கள் இல்லாமலும் பல பொதுப் பள்ளிகள் இயங்கிக்
கொண்டு இருக்கின்றன.
தரத்தில்
நிலவும் வேறுபாடுகள் பொதுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைத்திருக்கிறது.
கல்வி மறுக்கப்பட்ட மற்றும் கல்வியிலிருந்து ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும்
பணியைத் தவிர வேறு எதற்கும் தேவையில்லை என்ற மனப்பான்மையுடனே பொதுப் பள்ளிகள் அணுகப்படுகின்றன.
பொதுப்
பள்ளிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. ஒரு கல்வி நிர்வாகத்துக்கு
இருக்க வேண்டிய வலிமையோ, திறமையோ சுத்தமாக இல்லாமலே பெரும்பாலான பொதுப் பள்ளிகள் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
பொதுப்பள்ளிகளை
எப்படியோ இயக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களே அங்கு இருக்கின்றனர். உடற்கல்வி
ஆசிரியர், கலை ஆசிரியர், தொழில் ஆசிரியர் இல்லாத ஏரளமான பொதுப் பள்ளிகளை நீங்கள் பட்டியலிட்டால்
அது மிக நீளமானதாகும். இவ்விடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேரமாக நிரப்பப்படுகின்றன.
அல்லது கண்டு கொள்ளாமலும் விட்டு விடப் படுகின்றன. தலைமை ஆசிரியர்கள் இல்லாத பொதுப்
பள்ளிகளும் அண்மைக் காலமாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. பிற உதவி ஆசிரியர்களின்
பற்றாக்குறைகளும் கணிசமாக அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
பற்றாக்குறை
நிலவும் பொதுப் பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன.
இந்த அனுமதியும் பருவத்தோடு பயிர் செய்ய முடியாத அளவுக்குக் காலம் தாழ்ந்தே வழங்கப்படுகின்றன.
பாடத்திட்டத்திலும்
சமமில்லை, கட்டமைப்பு வசதிகளிலும் சமமில்லை, கற்பித்தல் நிலைகளிலும் சமமில்லை என்றால்
ஏதோ கடமைக்கு என்றே பொதுப் பள்ளிகளில் கல்வி வழங்கப்படுகிறது. இதில் ஆர்வமும் திறமையும்
உள்ளவர்கள் சாதிக்கிறார்கள். ஏனையோர் பின்னடைந்து விடுகின்றனர். ஆர்வத்தாலும் திறமையாலும்
சாதித்தவர்களை வைத்துக் கொண்டு நாம் இன்னும் எத்தனை காலம் பொதுப்பள்ளிகளை விதந்தோதிக்
கொண்டிருக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன் நிற்கும் மிகப் பெரிய கேள்வி.
பொதுப்பள்ளிகளை
நோக்கி வரும் வேறு வழியற்ற ஏழை மற்றும் விளிம்பு நிலை குழந்தைகள் அனைவரையும் எப்போது
வழங்குகின்ற கல்வியால் திறமையானவர்களாக மாற்றப் போகிறோம்?
*****
No comments:
Post a Comment