ஔவை பேசும் கல்வி உளவியல்!
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு திறமை இருக்கிறது.
ஒவ்வோர்
உயிருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது.
இந்த
உலகில் திறமை இல்லாத உயிர்கள் ஏது?
ஆனால்,
நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?
மீனிடம்
வானில் பறக்கும் பறவையைப் போல் பிரமாதமாகப் பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பறவையிடம்
நீருக்குள் நீந்தும் மீனைப் போல் பிரமாதமாக நீந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மீனைப்
போல் நீருக்குள் பிரமாதமாக வேறு ஏது நீந்த முடியும் என்று யோசிப்பதை மறந்து விடுகிறோம்.
அதே போல, பறவையைப் போல வானில் வேறு ஏது பிரமாதமாகப் பறக்க முடியும் என்பதையும் சிந்திக்க
மறந்து விடுகிறோம்.
ஒவ்வொன்றின்
திறமையும் உச்சமானது. அந்தத் திறமையை விட்டுப் பிறிதொரு திறமையை அதனிடம் எதிர்பார்க்கும்
போது அது திறமையற்றதாக நமக்குத் தெரியலாம். ஆனால் நம் கண்களுக்குத் தெரிய வேண்டியது
அதன் இயல்பான திறமை அல்லவா?
உதாரணமாக,
ஆமையைப் பார்க்கும் போது, அது ஓட்டப் பந்தயத்துக்கு லாயக்கில்லை என்று நினைக்கலாம்.
ஆனால் வள்ளுவர் ஆமையை “ஒருமையுள் ஆமை போல்” என்று அடக்கத்துக்கு உதாரணமாக
எவ்வளவு உயர்த்திச் சொல்கிறார்.
இப்படித்தான்
நாம் குழந்தைகளையும் தவறாகக் கணித்து விடுகிறோம். விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தையை
மருத்துவராக்க ஆசைப்படுகிறோம். மருத்துவத்தில் ஆர்வமுள்ள குழந்தையை ஆட்சியராக்க (கலெக்டர்)
ஆசைப்படுகிறோம்.
குழந்தைகளின்
ஆர்வமறிந்து, அவர்களின் இயல்பான திறனறிந்து அவர்களை வளர்க்கும் போது அவர்கள் தங்களுக்கு
ஈடுபாடுள்ள துறையில் முத்துகளாக, ரத்தினங்களாக, வைரங்களாக ஒளி வீசுவார்கள்.
இந்த
இயற்கை உண்மையை ஔவையார் என்ன அழகாகப் பாடுகிறார் தெரியுமா?
“வான்குருவி யின்கூடு வல்லரக்குத்
தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்
– யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”
தூக்கணாங்குருவியின்
கூட்டை எந்தப் பொறியாளர் கட்ட முடியும் சொல்லுங்கள்!
உறுதியான
அரக்கை யார் உருவாக்க முடியும் சொல்லுங்கள்.
கரையான்
புற்றை, தேன் கூட்டை, சிலந்தியின் கூட்டை அவையவையன்றி வேறு யார் சிறப்பாகச் செய்திட
முடியும் சொல்லுங்கள்.
நம்
துறையில் நாம்தான் வல்லவர் என்று இறுமாப்பு எப்போதும் வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று
எளிது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் வல்லவர். நமக்கு இத்துறையில் எளிமையாகச் செய்ய ஆர்வமும்
திறமையும் வல்லமையும் வாய்த்திருப்பதால் இத்துறையில் வல்லவராக இருக்கிறோம். அது போல
நாம் குறைத்து மதிப்பிடும் ஒருவர், அவருக்கு எளிமையாக இருக்கும் இன்னொரு துறையில் வல்லவராக
இருப்பார். இதை எப்படி, எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறார் பாருங்கள் ஔவையார்.
ஒரு
வகையில் இந்தப் பாடல்,
“பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே”
என்கிற
கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறது அல்லவா.
பதவியும்
பெருமையும் வரும் போது பணிவு வர வேண்டும் என்பதையும் சேர்த்து நினைவூட்டுகிறது அல்லவா!
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கிற
வள்ளுவத்தையும் சூசகமாகக் கோடிட்டுக் காட்டுகிறது அல்லவா!
அத்துடன்
யார் யார்க்கு எது எளிதாக வருகிறதோ அதில் அவரவர்களை வல்லவராக்குவதே சரியானது என்ற கல்வி
உளவியல் குறித்த ஓர் உயரிய உண்மையையும் கூறுகிறது அல்லவா!
*****
No comments:
Post a Comment