முத்துன கத்தரிக்காய்! (சிறுகதை)
- விகடபாரதி
சில
நேரங்கள் வித்தியாசமாகத்தான் அமைகின்றன. சாயுங்காலம் நான்கே முக்கால் மணியிலிருந்து
காய்கறி வாங்கச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் இருப்பவள்
திட்டிக் கொண்டிருக்கிறாள். எந்த வேலையைச் சொன்னாலும் இப்படித்தான் மச மசன்னு. எப்போ
பார்த்தாலும் யோசனைன்னா என்னத்தான் சொல்றது? கௌம்புனோம்ன்னு வந்தோமான்னு இருந்தாத்தான்
என்ன? இதெ என் தலையில கட்டி வெச்சு, எல்லாம் தலையெழுத்து. என்னத்தெ சொல்றது? இனி கிளம்பும்
வரை அவள் திட்டு நிற்காது.
வானம்
மேக மூட்டமாக இருக்கிறது. மழை இப்போதோ, அப்போதோ என்று வானம் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
கிளம்பினால் மழை வந்து விடுமோ என்று கிளம்பாமல் இருக்கிறேன். மணி ஐந்தே காலைத் தாண்டியும்
மழை வராததைப் பார்த்து சரிதான் கிளம்பிப் போய் சட்டென்று காரியத்தை முடித்து விட்டுப்
பட்டென்று திரும்பி விடுவோம் என்று கிளம்புகிறேன். சரியாகக் காய்கறிக் கடையை அடைந்த
நேரம் பார்த்து மழைப் பொழிகிறது.
மழைக்கு
ஒதுங்க முடியாத காய்கறிக் கடை. நான் பக்கத்து சபாபதி டைலரின் கடைக்குள் ஒண்டிக் கொள்கிறேன்.
அவரது கடையும் ஒதுங்க முடியாத கீற்றுக் கொட்டகைத்தான். ஒதுங்கினாலும் கூரை ஓட்டைகள்
வழியே மழையை உள்ளே பொழியும் கடைதான். மழை ஒழுகாத ஓரமாகப் பார்த்து நின்று கொள்கிறேன்.
என்னடா
இப்படி மழையில் வந்து மாட்டிக் கொண்டு விட்டோமே என்ற எரிச்சல்.
சபாபதியும்
பெரியசாமியும் கேரளத்தான் டீக்கடையிலிருந்து வாங்கி வந்த டீயையும் மெதுபகோடாவையும்
குடித்தபடியும் தின்றபடியும் இருந்தனர். நானும் பகிர்ந்து கொடுப்பதை வாங்கிக் கொள்ள
வேண்டும் என்று விரும்பினர். நான் அந்தப் பழக்கத்தை விட்டு மாமாங்கத்தைக் கடந்து விட்டது.
இப்போது
நடந்து கொண்டிருக்கும் விவசாயத்தைப் பற்றி பெரியசாமி பேசினார். தண்ணீர் வைக்க முடியவில்லை
என்பது பெரிய பிரச்சனை. நூறு நாள் வேலைத்திட்டத்தால் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்க
மாட்டேன்கிறார்கள் என்பது அடுத்தப் பிரச்சனை. இப்படி பிரச்சனை மேல் பிரச்சனையாகச் சொல்லிக்
குறைபட்டுக் கொண்டார்.
இருக்கும்
ஆட்களும் மது குடியர்களாய் மாறி விட்டதை வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார் பெரியசாமி.
அவரும் மது குடிப்பவர்தான். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை என்று வைத்துக் கொள்பவர்.
யாருக்கும்
உழைக்கணும், பிழைக்கணுங்ற எண்ணமே இல்லைங்க என்றார் விரக்தியாக. பஞ்சம் வந்தாத்தான்
மனுஷன் குடிக்கிறதை நிப்பாட்டி, சோத்துக்கு வழி தேடுவான் போலிருக்கு என்றார். உணவுப்
பஞ்சம் வர வேண்டும் என்பதில் அவர் ரொம்ப உறுதியாகப் பேசினார்.
கொஞ்ச
நேரத்துக்கு எல்லாம் அவர் கிளம்பி விட்டார். மழை அரைகுறையுமாகப் பெய்து கொண்டுதான்
இருந்தது. மழைக்கெல்லாம் ஒதுங்குகிற ஆசாமியில்லை அவர். நீ பாட்டுக்குப் பெய்து கொண்டிரு,
நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்ற போய்க் கொண்டிருந்தார்.
அவர்
கிளம்பிய பிறகுதான் சபாபதியிடம் கேட்டேன், பெரியசாமிக்கு வயசு எப்படியும் நாற்பதுக்கு
மேல் இருக்கும்தானே?
நாற்பத்தேழு
ஆகிறது என்றார் சபாபதி. என்ன ஒரு துல்லியமான கணக்கு.
எனக்கு
ஐம்பது ஆகிறது. அவனுக்கு மூன்று வயது குறைவாக இருக்கும். தன் அனுமானத்தை அவர் உறுதிபடுத்திச்
சொன்னார்.
இன்னும்
கல்யாணம் ஆகலத்தானே என்றேன் நான்.
ம் என்றபடி
தலையைக் குனிந்து கொண்டார். குனிந்த தலை நிமிராமலே சன்னமாகப் பேசத் தொடங்கினார். அது
அதெல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தாத்தான் உண்டு. வீட்டில் இருப்பவர்கள் பார்த்துச்
செய்து வைத்தால்தான் உண்டு. இல்லையென்றால் இல்லை. வீட்டுல இருக்குறவங்க அதுல பொறுப்பானவங்களாவும்
இருக்கணும். இல்லேன்னா ஒண்ணும் நடக்காது. உதவாத கதைத்தான்.
நான்
ஒரு பட்டியல் சொல்லட்டுமா என்றார். நீங்க மேற்கே புனவாசலில் இருந்து கணக்கெடுத்து கிழக்கே
ஊட்டியாணி வரை வந்தால் நிறைய பேரு அப்படி இருக்காங்க. இதுக்கு இடையில நாலு பேருந்து
நிறுத்தங்க இருக்கு. அங்கங்க காலையில வந்து பார்த்தீங்கன்னா ஒரு கும்பல் இருக்கும்.
அதுல கல்யாணம் ஆகாத டிக்கெட்டுங்க கணிசமா இருக்கும். உதாரணத்துக்குச் சொல்றேன் பாருங்க.
அமுதலிங்கத்துக்கு நாலு பிள்ளைங்க. ஒருத்தன் காதல் கல்யாணம் பண்ணவாசி தப்பிச்சான்.
அந்தப் பொண்ணும் பாருங்க. பாக்குறதுக்கு ஒரு மாதிரியா கேணச்சியப் போலத்தான் இருக்கும்.
நல்ல வேளையா ஒருத்திய கல்யாணத்தப் பண்ணான். இப்போ குடும்பத்தோடு இருக்கான். அவரோட ஒரு
பையன் செத்துப் போன கதைத்தான் உங்களுக்குத் தெரியுமே. மத்த ரெண்டு பேத்துக்கும் இன்னும்
கல்யாணம் ஆகல. அதுல ஒருத்தன் லாரிக்குப் போறான். பதினைஞ்சு நாளைக்கு ஒருக்காத்தான்
வருவான். வந்தான்னா வெச்சுக்குங்க, பதினைஞ்சாயிரத்தோடு வருவான். அவன் வந்த நாள்லேர்ந்து
நாலு நாளைக்கு எவனும் வீட்டை விட்டு வர மாட்டானுங்க. சிக்கன், மட்டன், மீனுன்னு வாங்கி
வந்து அத்தோடு சரக்கையும் வாங்கியாந்து குடிச்சுக் கூத்தடிச்சு தின்னு முடிச்சிட்டுக்
காசு தீர்ந்து போன பின்னாடித்தான் வீட்டை விட்டு வெளியில வருவானுங்க. இன்னும் ரெண்டு
பேத்துக்கும் கல்யாணம் ஆகல. வயசு எப்படியும் ரெண்டு பயலுகளுக்கும் நாற்பதைக் கடந்துடுச்சு.
இனுமே எவன் பொண்ணைக் கொடுத்து, அவனுங்களுக்குக் கல்யாணம் ஆயி. நினைச்சுப் பார்க்கவே
பயங்கரமா இருக்குது.
சண்முகநாதன்
பையனோட கதையைப் பத்தி என்னத்தெ சொல்றது? எப்படி இருந்த குடும்பம். இந்தப் பகுதிக்கு
அவுங்கத்தானே காய்கறிக் கடை. சேந்தங்குடியிலேர்ந்து என்ன, செருவாமணியிலேந்து என்ன,
வடபாதிமங்கலத்துலேந்து என்ன, எங்கே இருந்து எல்லாமோ வந்து காய்கறிங்க வந்து வாங்குன
கடை. சில்லரை வியாபாரம்ங்றது பேருக்குத்தான். மொத்த வியாபாரம்தான் அவுங்களுக்கு முக்கியம்.
அப்படி இருந்த கடை. டிராக்டர் இருந்துச்சு. டாடா ஏஸ் இருந்துச்சு. நெல்லு பிடிப்பாங்க.
உளுந்து பயிறு பிடிப்பாங்க. இன்னிக்கு எல்லாம் போன கதை தெரியல. தவணை கட்டலேன்னு ஒவ்வொண்ணா
பிடிச்சிட்டுப் போனானுங்க. இன்னிக்கு அந்தப் பையன் லாரியில ஓடிட்டு இருக்கான்.
முப்பத்தைந்த
கடந்து நிறைய பேரு இருக்காங்க. ஒருத்தனுக்கும் கல்யாணம் ஆகல. இனுமே ஆகணும்ன்னும்ன்னு
நெனைக்க முடியல. ஆகும்ன்னு சுத்தமாவே தோணல. ஏதோ இருக்கானுங்க. சம்பாதிக்கிறானுங்க.
குடிக்குறானுங்க. என்னமோ பண்ணிக்கிட்டுக் கிடக்குறானுங்க போங்க.
பொண்ணுங்களும்
முன்ன மாதிரியில்லாம் இல்லீங்க. அப்பா அம்மா சொல்றாங்கன்னு எந்தப் பொண்ணும் கல்யாணம்
பண்ணிக்கிறதில்ல. பிடிக்கலன்னா மூஞ்சுல அடிச்சாப்புல சொல்லிப்புடுதுங்க. பெத்தவங்களும்
வற்புறுத்த முடியல. பசங்க முப்பது முப்பதைஞ்சு கடந்து கல்யாண்ம ஆகாம கிடக்குறது போல,
அதுங்களும் முப்பதெ கடந்தது, நாப்பதெ கடந்ததுன்னு கல்யாணம் ஆகாம கிடக்குதுங்க.
நம்ம
பயலுங்க மாசம் இருபதினாயிரம் சம்பாதிக்குறானுங்களா, அதுங்களும் சம்பாதிக்குதுங்க. நம்ம
பசங்கள விட படிச்சிருக்குங்க. இதெல்லாம் எங்கப் போயி நிக்கும்ன்னு தெரியல.
நம்ம
மொரட்டு செந்தில் இருக்கானே. அவனுக்கு என்ன கொறைச்சல்? மாசம் எண்பதினாயிரம் சம்பாதிக்கிறான்.
என்னமோ கம்ப்யூட்டரு வேலைங்றான். சம்பாத்தியம் எல்லாம் நிசம்தான். நம்ம பகுதியில் இவ்ளோ
எவன் சம்பாதிக்கிறான்? ஆனா அவனுக்குப் பொண்ணு கிடைக்கணுமே. சம்பாதிக்கிறான், ஆனா சொத்து
இல்லைன்னு ரெண்டு மூணு வரன் வந்து தட்டிப் போயிடுச்சுங்க. நெனைச்சுப் பாருங்க. கல்யாணம்
நடக்குறதெல்லாம் எந்தக் காரணத்துல தட்டிகிட்டுப் போகும்ன்னு தெரியல.
என்னவோ
என் ராசியப் பாருங்க. ஒண்ணுக்கு ரெண்டா கல்யாணம். மொதது செத்துப் போச்சு. நல்ல வேளையா
டக்குன்னு ரெண்டாவதா ஆச்சு. ஆனா அன்னிக்குப் பாருங்க, அய்யர் சமாது பெட்ரோல் பங்குல
பெட்ரோல் போட்டுக்கிட்டு நிக்கிறேன். அதாங் ரெண்டாவத கட்டிக்கிட்டேன்னேல்ல அவளோடதான்.
அங்க
ஒருத்தி கேக்குறா, இது ஆரு ஒங்க சித்தப்பாவான்னு. எங் காதுலயும் விழுந்துச்சுத்தான்.
அவ ஒண்ணுத்தையும் பதில சொல்லல.
வீட்டுக்கு
வந்ததும் கேட்டா அங்க என்ன கேட்டாங்கன்னு தெரியுமான்னு. நமக்குத்தான் கோபப்படுற கொணம்
இல்லையே. கேட்டேன் சித்தப்பாவான்னு கேட்டாங்கன்னு சொன்னேன். அப்போ நீங்க என்ன நெனைச்சீங்கன்னு
கேட்டா. இல்ல மாமான்னு சொல்வேன்னு எதிர்பார்த்தேன். நீதான் சொல்லலயேன்னேன். அவ சிரிச்சிக்கிட்டா.
இப்படி ஓடுது நம்ம வாழ்க்கை.
கல்யாணங்கறது
மேலயிருந்து எழுதப்படுதுங்கறாங்களே. அங்க சில பேத்துக்கு எழுதப்படல போலருக்கு.
தூவானம்
விட்டாலும் சபாபதி விட மாட்டார் போல இருந்தது. அவருக்கு நிறைய பேச வேண்டும் போலிருந்தது.
நான்
கடையிலிருந்து தலையை வெளியே விட்டு வானத்தைப் பார்த்தேன். சுற்றிலும் தலையை ஒரு சுழற்றிச்
சுழற்றிப் பார்த்தேன். வானம் மேக மூட்டமாகத்தான் இருந்தது. மழை விட்டிருந்தது. நான்
காய்கறியை வாங்கி விட்டு கிளம்பலாம் என்று வெளியேற எத்தனித்தேன்.
என்னங்க
ரொம்ப போட்டு அறுத்து எடுத்துட்டேன்னா என்றார் சபாபதி.
ச்சேச்சே
இல்ல. பேச வேண்டிய விசயந்தான் என்றேன்.
சமுதாயத்தையும்
கவனிக்க வேண்டி இருக்குதுல்ல என்றார்.
நிசந்தான்
என்றேன்.
மழைக்காகக்
காய்கறிகளை உள்ளே எடுத்து வைத்திருந்த கடைக்காரர் இப்போது ஒவ்வொன்றாக வெளியே எடுத்து
வைக்கத் தொடங்கியிருந்தார்.
ஒரு
பெண்மணி கத்தரிக்காய் தட்டிலிருந்து பிஞ்சுகளாகப் பார்த்துப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.
முற்றின கத்தரிக்காய்கள் ஒதுக்கிக் கொண்டே இருந்தார்.
இது
என்னவோ தற்செயலாகவோ, தற்குறிப்பேற்றமாகவோ நடப்பது போலத் தோன்றவில்லை. எனக்கு காய்கறி
வாங்காமல் திரும்பி விடலாமோ என்று தோன்றியது. வீட்டில் ஒருத்தி இருக்காளே. அவளை நினைத்ததும்
பக் என்று இருந்தது.
என்ன
பாத்துக்கிட்டே இருக்கீங்க. ஒண்ணு காய்கறியப் பாத்து எடுங்க. இல்ல என்ன வேணும்ன்னு
சொல்லுங்க என்றார் கடைக்காரர்.
அவுங்க
வாங்கிட்டுப் போகட்டும் என்றேன் நான் கத்தரிக்காய் பொறுக்கும் பெண்ணைக் காட்டி.
மறுமழை
வர்றதுக்கு முன்னாடி வாங்கிட்டுக் கிளம்புங்கன்னேன் என்றார் கடைக்காரர்.
நல்லவேளை
எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு என்றேன் நான் என்னையும் அறியாமல் வாய் விட்டு.
கடைக்காரருக்கு
எப்படிக் காதில் விழுந்ததோ, அந்தக் கல்யாண முருங்கை மரத்தைச் சொல்றீங்களா என்றார்.
நான்
ம் என்பது போல தலையாட்டியபடி முருங்கைக் காயைப் பார்தேன். கடைக்காரரைப் பார்த்தேன்.
இங்கே
மரத்துக்குக் கூட கல்யாண முருங்கைன்னு பேரு இருக்கே என்றேன். பேரு கூடத்தான் மனுஷனுக்குக்
கல்யாணராமன்னு இருக்கு. அந்த அம்மா போயிடுச்சு. என்ன கறிகாயி வேணும்ன்னு சொல்லித் தொலையும்வே
என்றார் கடைக்காரர்.
கடையை
நோக்கி இன்னும் கல்யாணம் ஆகாத கல்யாணராமன் வந்து கொண்டிருந்தார் முன் வழுக்கைத் தலையில்
விழுந்திருந்த மழைத்துளிகளை சுண்டி விட்டப்படி. இதற்கு மேல் இந்தத் தற்செயல்களைப் பொறுக்க
முடியாத விரக்தியில் அவரைக்காய் கால் கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, உருளை அரை கிலோ,
தக்காளி அரை கிலோ, பச்சை மிளகாய் நூறு, கொத்துமல்லி பத்து ரூவா என்று கடகடவென்று சொல்ல
ஆரம்பித்தேன்.
ஒவ்வொண்ணா
போடப்போட சொல்லும்வே. என்னவோ கழிசல் கண்ட கன்னுக்குட்டியாட்டம் என்றார் கடைக்காரர்.
*****
No comments:
Post a Comment