17 Dec 2024

அலைபேசியில் அலையும் மோசடிக்காரர்கள்!

அலைபேசியில் அலையும் மோசடிக்காரர்கள்!

அலைபேசி மூலமாக வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கப்படுவதாக அழைக்கப்படும் அழைப்புகள்தான் சமீபத்திய மோசடிகளில் முதன்மையாக உள்ளது.

உங்கள் வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி புதுப்பிக்கப்படாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்து சேராது என்றும் எச்சரித்தல் மற்றம் மிரட்டல் தொனியில் இந்த அழைப்புகள் செய்யப்படுகின்றன.

நீங்கள் மாதாந்திர சம்பளதாரராக இருந்தாலோ, ஓய்வூதியராக இருந்தாலே இந்த மாத சம்பளமோ, ஓய்வூதியமோ எப்படி வரும் என்ற அச்சம் உங்கள் மனதைச் சூழ ஆரம்பிக்கும்.

இருக்கும் வேலை நெருக்கடியில் வங்கிக்குப் போய் நாள் முழுவதும் காத்திருந்து வங்கிக் கணக்கைப் புதுப்பிப்பது எப்படி என்ற கவலை உங்கள் மனதைச் சூழ ஆரம்பிக்கும்.

இந்தப் பயமும், கவலையும்தான் மோசடிக்காரர்களின் வலையில் விழுவதற்குக் காரணமாகி விடுகிறது.

நீங்கள் வங்கிக்குச் செல்லாமலே அலைபேசியில் சில தகவல்கள் சொல்வதன் மூலமாக உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பித்து விடலாம் என்று அந்த அழைப்புகள் கூறுவது உங்களுக்கு அனுகூலமாகத் தெரியும்.

அந்த அனுகூலம்தான் மோசடிக்கார்களுக்கும் அனுகூலமாகப் போய் விடுகிறது.

உங்கள் வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் பண அட்டையின் (ஏடிஎம் கார்டு) எண்ணைக் கேட்பார்கள்.

உங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறைப் பயன்படுத்துவதற்கான கடவுச்சொல் அல்லது ரகசிய எண்ணைக் கேட்பார்கள்.

நீங்களும் வேலை இவ்வளவு சுலபமாக முடிகிறதே என்ற சந்தோசத்தில் கொடுப்பீர்கள்.

அதைக் கொடுத்த பின்பு நீங்கள் உங்கள் சந்தோசத்தை இழப்பீர்கள். ஆம். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணமானது உருவப்பட்டிருக்கும். எல்லாம் சில நொடிகளில் அடுத்தடுத்து நடந்தேறி இருக்கும். இது போன்று மோசடிக்காரர்களிடம் இழக்கப்பட்ட பணத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு நேரம் பிடிக்கும். பணத்தை இழந்து விட்டோம் என்பதை நம்புவதற்குள் எல்லாம் நடந்து போயிருக்கும்.

இழந்த பணத்தை மீட்பதும் சாதாரணமில்லை.

ஆகவே அலைபேசி மூலமாக வங்கிக் கணக்கைப் புதுப்பிக்கிறோம் என்றோ, வங்கிக் கணக்கிற்குத் தேவையான விவரங்களைக் கேட்கிறோம் என்றோ யாரேனும் சொன்னால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனென்றால் அது போன்ற நடைமுறைகளை எந்த வங்கியும் பின்பற்றுவதில்லை. அப்படியான வங்கி நடைமுறைகளும் இந்தியாவில் கிடையாது.

வேறு காரணங்களால் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்தாலும் அதனால்பாதகம் வந்து விடப் போவதில்லை. ஒரு நாள் செலவானாலும் உங்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று, காரணம் அறிந்து, அதை நிவர்த்தி செய்வதே சரியானது.

நேரடியாக வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு யோசனை செய்து கொண்டு சில நொடிகளில் காரியம் முடிகிறதே என்று நினைத்தால் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழப்பது நிச்சயம்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...