எறும்புகள்
(சிறுகதை)
-
விகடபாரதி
ஏதோ உடலெங்கும் ஊர்வது போலிருந்து.
விழிப்பு தட்டி எழுந்து பார்த்த போது சிவப்பு நிற எண்களால் ஒளிரும் மின்கடிகாரம் இரவு
2 மணியைக் காட்டியது. விளக்கைப் போட்டேன். உடலெங்கும் பெரிய பெரிய எறும்புகள் ஊர்ந்து
கொண்டிருந்தன. கடிக்காத எறும்புகள் என்பது போன பிறவியில் செய்த பயனாகத்தான் இருக்க
வேண்டும். கைகளால் தட்டி விட்டுப் படுத்தேன். தள்ளிப் போய் விழுந்த எறும்புகள் மீண்டும்
உடல் மீது ஏறி ஊர்ந்து வருவதற்குப் பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டன. மீண்டும் விளக்கைப்
போடுவதும் எழுந்து அமர்வதுமாக இது தொடர்ந்தது. பிறகு தூக்கமில்லை.
மனைவி விழித்துக் கொண்டாள்.
என்னங்க இது நல்லா அசந்து தூங்குற நேரத்துல லைட்டைப் போடுறதும் நிறுத்துறதுமா? தூக்கம்
கெடுதுல்ல, என்று முணுமுணுத்தாள். நான் எறும்பு ஊர்வதைப் பற்றிச் சொன்னேன். அதென்னங்க
ஒங்க மேல மட்டும் ஊருது, எங்களையெல்லாம் விட்டுடுது என்றாள். எனக்கு எரிச்சலாக இருந்தது.
நீ இந்தப் பக்கம் படு, நான் அந்தப் பக்கம் படுக்கிறேன், பிறகு எறும்பு யார் மேல் ஏன்
ஊருதுங்றது தெரியும், என்றேன். நான் மாட்டேன்ப்பா, என்று அவள் திரும்பிப் படுத்துக்
கொண்டாள். கட்டில்ல மெத்தையைப் போட்டுப் படுக்காம, தரையில போட்டுப் படுத்தா இப்படித்தான்
என்று முணுமுணுத்தாள். அடுத்த சில நிமிடங்களிலேயே அவள் அசந்து தூங்கத் தொடங்கினாள்.
குறட்டை ஒலி சன்னமாக எழ ஆரம்பித்தது. இனி எத்தனை முறை விளக்கைப் போட்டாலும் எழ மாட்டாள்
என்பது தெரிந்தது.
எறும்புகளை எத்தனை முறை தட்டி
விட்டாலும் பிடிவாதமாக என் மேல் ஏறி ஊர்வதாகப் பட்டது. நான் அறையை விட்டு வரவேற்பறைக்கு
வந்தேன். ஒரு போர்வையை விரித்துத் தரையில் படுத்தேன். தூக்கம் பிடிக்கவில்லை. ஒரே வீட்டின்
இரண்டு இடங்கள்தான் படுக்கையறையும் வரவேற்பறையும். என்னவோ புதிய இடத்தில் படுத்துக்
கிடப்பது போலத் தூக்கம் வர மறுத்தது. இந்தத் தூக்கம் என்னை வஞ்சிக்க வேண்டுமா என்று
எரிச்சலாக இருந்தது. துணைக்கு யாருமில்லாமல் எவ்வளவு நேரம் விழித்துக் கொண்டிருப்பது.
திடீரென்று ஆடுகளின் கனைப்பு
ஒலிப்பு கேட்டது. அத்துடன் மணிச் சத்தம். பிரமையோ என்று தோன்றியது. நிலைக்கதவைத் திறந்து
வந்து வெளியே பார்த்தேன். செம்மறியாடுகள் தெருவில் வரிசையாகச் சென்று கொண்டிருந்தன.
த்தா த்தா, ட்ரிக்கு ட்ரிக்கு என்ற சத்தத்தோடு கீதாரிகள் ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்.
தெரு பெரிய தெருதான். ஆடுகள் விசாலாமாகச் செல்லக் கூடிய அளவுக்கு இடமிருந்தாலும் செம்மறிகள்
ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு தெருவில் இருக்கும் இடம் போதாது என்பது போலச் சென்று
கொண்டிருந்தன. இந்தக் கீதாரிகளுக்குத் தூக்கம் வராதா? செம்மறிகளுக்குத் தூக்கம் வராதா?
என்று எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. சில
நிமிடங்களில் செம்மறிகள் தெருவின் முனைக்குச் சென்று விட்டன. அவற்றின் ஓசைகளும் அடங்கி
விட்டன.
தூக்கம் வராத போது இந்தச்
செம்மறிகளைப் போல, கீதாரிகளைப் போலத் தெரு தெருவாக நடந்தால் தேவலாம் போலிருந்தது. வாயிற்கதவின்
பூட்டைத் திறந்து விட்டு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். தெருவின் நிசப்தம் மனதுக்குச்
சுகந்தமாகவும் அதே நேரத்தில் அச்சமூட்டுவதாகவும் இருந்தது. மயிர்க்கால்கள் சிலிர்த்துக்
கொண்டன. தெருவின் இரண்டு முனைகளுக்கும் மாறி மாறி நடந்தேன். பகல் பொழுதில் எவ்வளவு
பரபரப்பாக இருக்கும் தெரு, இப்படி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். இந்தத் தெரு
தரும் அமைதியையும் நிம்மதியையும் வீடு தர முடியவில்லை என்று ஆற்றாமையாக இருந்தது. பகல்
பொழுதில் அலுவலகத்திலும் இரவுப் பொழுதில் இந்தத் தெருவிலும் கழித்து விடலாமோ என்று
தோன்றியது.
எத்தனை முறை தெருவின் இந்த
முனைக்கும் அந்த முனைக்கும் நடந்தேன் என்பதை எண்ணிக் கொள்ளவில்லை. அதன் பிறகு என்ன
தோன்றியது, எப்போது வந்து படுத்தேன் என்பதும் நினைவில்லை. எல்லாம் கனவில் நடப்பது போல,
கனவில் நடந்தது போல இருந்தன.
காலையில் எப்படியும் ஐந்து
மணிக்கு எழுந்து விடும் நான், ஆறு மணிக்கு மனைவி வந்து எழுப்பி விட்ட பிறகுதான் எழுந்தேன்.
இங்க வந்து எப்போ படுத்தது? ஏன் இவ்வளவு நேரம் தூங்குறது? என்றாள்.
நான் எறும்பு ஊர்ந்த கதையைச்
சொன்னேன். ஆமாம் ராத்திரி ஏதோ சொன்னீங்கலே, என்றாள் மனைவி எதுவுமே நினைவு இல்லாதது
போல. நான் ஆம், என்று உச் கொட்டினேன். உனக்குதான் எவ்வளவு ஞாபக சக்தி என்றேன் சிரிப்பை
அடக்கிக் கொண்டபடி. அட போங்க, என்று சிரித்து கொண்டே உள்ளே போனாள்.
எப்படி அந்த அறையில் இவ்வளவு
எறும்புகள் வந்தன என்று யோசிக்கத் துவங்கினேன். அறைக்குள் சென்று பார்த்தேன். மெத்தை
சுருட்டி வடக்குப் பக்கத்தின் சுவரோரமாக வைக்கப்பட்டிருந்தது. படுக்கைக்கு அருகில்
இருக்கும் அலமாரிக்குள் அவ்வளவு எறும்புகள் போவதும் வருவதுமாக இருந்தன.
அலமாரியைத் திறந்தேன். இங்கிலீஷ்
படம் பார்ப்பது போல ஏகப்பட்ட எறும்புகள். எனக்கென்னவோ எறும்புகளின் கூட்டத்தைக் கிராபிக்ஸ்ஸில்
பார்ப்பது போலிருந்து. அவ்வளவு எறும்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்ததில்லை. பிரமிப்பாக
இருந்தது. இந்த எறும்புகளை அழிப்பதே முதல் வேலை என்று தீர்மானித்துக் கொண்டேன். இந்த
வேலை அநேகமாகப் பெரிய வேலையாக இருக்கும் என்று தோன்றியது. எப்படியும் அரை நாள் பிடிக்கும்
வேலை. சாப்பிட்டு விட்டுத் தொடங்குவதுதான் உத்தமம் என்று தோன்றியது.
காலை உணவை முடித்துக் கொண்டு
ஆயத்தமானேன். முதலில் எறும்பு மருந்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்
கடைக்குக் கிளம்பினேன். உள்ளூரில் இருக்கும் சாதாரண பெட்டிக்கடைதான் அது. எறும்பு மருந்து
இருக்கிறதா என்று கேட்டதற்கு நான்கைந்து மருந்துகள் அங்கே இருந்தன. நாட்டில் எறும்பினால்
நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஏன் இவ்வளவு எறும்பு
மருந்துகளை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு நாளைக்கு எப்படியும் நான்கைந்து
டப்பாக்கள், நான்கு பிராண்டுகளிலும் விற்பனை ஆகிறது சார், என்றார் கடைக்காரர்.
எறும்பு பிரச்சனை அவ்வளவு
இருக்கிறதா என்றேன். எறும்பு, கறையான், கரப்பான் பூச்சி எல்லாத்துக்கும் இதுதான் மருந்து.
எல்லா வீட்டுலயும் இருக்குற பிரச்சனைதானே. அதனால் நல்ல போவுது சார், என்றார் கடைக்காரர்.
நான்கு மருந்துகளில் எதை
வாங்குவது என்ற குழப்பத்தை அவரே தீர்த்து வைத்தார். முதல்ல இந்த எறும்பு சாக்பீஸை வாங்கிட்டுப்
போங்க. இது சரிப்பட்டு வரலன்னா ஸ்பிரேயர் மருந்ததை வாங்கிக்கலாம் என்றார்.
எனக்கென்னவோ ஸ்பிரேயர் மருந்து
சரியாக இருக்கும் என்று தோன்றியது. நான் ஸ்பிரேயர் மருந்தைக் கேட்டேன். எடுத்த உடனே
இது வேண்டாம் சார், இது கொஞ்சம் பாய்சன் ஜாஸ்தி. அது சரிபட்டு வரலென்னா இதெ பாக்கலாம்.
எல்லாரும் இப்படித்தான் வாங்கிட்டுப் போறாங்க. அதுக்கு மேல ஒங்க விருப்பம், என்றார்
கடைக்காரர்.
அனுபவஸ்தர் சொல்லும் போது
வேறு மறுப்பேது என்று, நான் எறும்பு சாக்பீஸை வாங்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும் எறும்புகள்
நிறைந்திருக்கும் அலமாரியைத் திறக்கவே இப்போது யோசனையாக இருந்தது. இவ்வளவு எறும்புகளையும்
சமாளித்து என்னால் சுத்தம் செய்து விட முடியுமா என்று தோன்றியது. இதை உடனடியாகச் சரி
செய்யாவிட்டால் ராத்தூக்கம் போய் விடும் என்ற உணர்வு என்னைப் பின்வாங்காமல் முன்னோக்கிச்
செலுத்தியது. அலமாரிகளின் கதவைத் திறந்தேன். இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்து வெளியில்
போட்டேன். புத்தகங்களில் கால் வாசி எறும்பு அரித்துக் கிடந்தன. இன்னும் சில புத்தகங்களை
எடுத்து வெளியில் போட்ட போது எறும்புகள் கொய்ங் என்று புறப்பட்டு வந்தன. நான் புத்தகங்களைக்
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட எறும்புகள் நிறைய நிறைய வர ஆரம்பித்தன. என் கால்களைச்
சுற்றி ஏற ஆரம்பித்த எறும்புகளின் ஊர்தல் எனக்கு ஒரு வித உடல் கூச்சத்தைத் தந்தது.
வேக வேகமாக நான் புத்தகங்களை
எடுத்து வெளியில் போட எறும்புகளும் வேக வேகமாக வெளியே வர ஆரம்பித்தன. அலமாரியின் அடியில்
ஏகப்பட்ட எறும்புகள். தேன் கூட்டில் அப்பியிருக்கும் தேனீக்கள் போல அப்படி அப்பியிருந்தன.
நான் அறையோரத்தில் இருந்த விளக்குமாற்றை எடுத்து அவற்றையெல்லாம் தட்டி விட்டேன். அலமாரியின்
கீழ், இடது ஓரம், வலது ஆரம் என்று பல இடங்களில் எறும்பு சாக்பீஸால் கோடுகளைப் போட்டேன்
.நேராக, நெளி நெளியாக என்று பலவிதமான கோடுகளைப் போட்டேன். எறும்புகள் அலமாரியை விட்டு
அகல அகல அதற்குள் ஏகப்பட்ட அரைகுறை அரிசியாகி விட்ட நெல்மணிகள். குவித்து அள்ளினேன்.
இரண்டு கைப்பிடியளவு தேறியது. அதை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டு எறும்புகளையும்
விளக்குமாற்றால் கூட்டித் திரட்டி அவற்றையும் குப்பைத் தொட்டிக்குள் போட்டேன்.
ஏ அப்பாடி எவ்ளோ எறும்புகள்,
எப்படி வந்துச்சு இதெல்லாம்? எங்கேருந்து வந்துச்சாம் இதெல்லாம்! என்றாள் அறைக்குள்
உள்ளே வந்த மனைவி. அவளுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. நான் மௌனமாக வேலையைப்
பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பதிலையே காணும், என்றாள் அவள்.
நீயே கேளேன் இந்த எறும்புககிட்டே
என்றேன். ம்ஹூம்! அது ஒண்ணுத்தான் கொறைச்சல்.
இவ்வளவு எறும்புகளையும் அழிக்கத்தான் போறீங்களா? என்றாள்.
வேறென்ன பண்ணுறது? நீ வேணும்ன்னா
வனத்துறைக்குப் போன் பண்ணி எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லேன், என்றேன்.
இந்த குசும்புக்கு ஒண்ணும்
கொறைச்சல் இல்ல. பாவம் அதுக. எவ்ளோ கஷ்டப்பட்டு எவ்ளோ அரிசி மணிகளைக் கொண்டு வந்து
சேர்த்திருக்கு. அதையெல்லாம் இப்படி குப்பைத் தொட்டியில் போட்டு… நெனைக்கவே மனசுக்கு
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா, என்றாள்.
நீ வேணும்ன்னா ஒன்னோட சமையலைறையில
வெச்சுக்கோயேன் என்றேன் நான்.
ஐயோ நான் மாட்டேம்ப்பா. நீங்க
ஏதுனாச்சும் பண்ணுங்க, என்று அவள் நகர்ந்து விட்டாள்.
குப்பைத் தொட்டியில் எறும்புகளைத்
திரட்டி உள்ளே போட அவை அதிலிருந்து நிரம்பி வழிவது போல உள்ளே இருப்பதும் வெளியே வருவதுமாக
இருந்தன. நான் அதைத் தூக்கிக் கொண்டு கொல்லைக் கடைசிக்குப் போனேன். இவ்வளவு எறும்புகளையும்
கொல்வதற்கும் மனது வரவில்லைதான். அப்படியே குப்பைத் தொட்டியை அரிசி மணிகளோடும் எறும்புகளோடும்
கொட்டி விடுவது என்று முடிவெடுத்தேன்.
நான் கொல்லைக் கடைசியில்
கொண்டு போய் கொட்டும் நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் வந்தது எறும்புகளின் துரதிர்ஷ்டமாகி
விட்டது. என்னங்கய்யா இவ்ளோ எறும்புகளைக் கொண்டாந்து கொட்டுறீங்க. அது பாட்டுக்கு புற்று
வெச்சுதுன்னா என்னத்துக்கு ஆவுறது? அப்படியே கொஞ்சம் சீமெண்ணெய்யை ஊத்தி நெருப்பை வெச்சிட்டுப்
போங்க, இல்லே வெந்நியைக் கொண்டு வந்து ஊத்துங்க, என்றார். நான் தயங்குவது அவருக்கு
எப்படிப் புரிந்து என்று தெரியவில்லை. இருவர் வீட்டுக்கும் பிரிப்பாக இருந்த மூங்கில்
வேலியைக் கீழே அமுக்கிக் கொண்டு, தாண்டிக் கொண்டு உள்ளே வந்து விட்டார். சமையலறைப்
பக்கம் போனவர், ஏந் தங்கச்சி என்று குரலை உயர்த்தி என் மனைவியிடம் கேட்டு வாங்கிக்
கொண்டு சீமெண்ணெய்யோடு வந்தார். கைலி மடிப்பில் எப்போதும் சிகரெட் பிடிப்பதற்காக இருக்கும்
நெருப்புப் பெட்டியை உரசி பற்ற வைத்து விட்டார். ஏற்கனவே அங்கே இருந்த குப்பைகளோடு
சேர்ந்து எல்லாம் எரிய ஆரம்பித்து விட்டன.
உங்களையெல்லாம் என்னத்தெ
சொல்றதுன்னு தெரியல? வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும் போதே என்ஜினியரிங் பிளான் வாங்குங்கன்னு
சொன்னேன்ல. என்னவோ மேஸ்திரியை வெச்சு, என்ஜினியருக்குக் காசு கொடுக்காம மிச்சம் பண்ணணும்ன்னு
நெனைச்சு இப்படிப் பண்ணி வெச்சிருக்கீங்க. எறும்பு கண்ணுக்குத் தெரியுது. கறையான் உள்ளே
அரிக்குறது. எல்லாம் அரிச்சு பொடி பொடியா ஆனப்புறம்தான் தெரியும் பாத்துக்குங்க. இப்பவாவது
என்ஜினியரிங் சொல்யூசன் கேட்டு பண்ண வேண்டியதைப் பண்ணுங்க. கை வைத்தியம் மாதிரி எதையாச்சும்
பண்ணித் தொலையாதீங்க. சொல்றதெ கேளுங்கய்யா என்றவர் சமையலறைப் பக்கம் நோக்கி, ஏந் தங்கச்சி
நீங்களாச்சும் ஒங்க வீட்டுக்காருக்கு எடுத்துச் சொல்றதா வேண்டாமா என்றார் சத்தமாக.
எங்கண்ணே நான் சொல்றதெ கேக்குறாங்க?
நீங்களே நல்லா ஒறைக்கிற மாதிரி சொல்லுங்க. ஏதோ நல்லது நடந்தா நல்லதுதான், என்றாள் மனைவி.
என்னங்கய்யா திருட்டு முழி
முழிக்கிறீங்க. நீங்க ஒண்ணும் அலைய வேண்டாம். நானே பாத்துக்கிறேன். காசை மட்டும் எடுத்து
வையுங்க போதுமா? என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.
நான் பேசாமல் நின்றேன். அதானே
தானும் செய்யுறதில்ல, யாராச்சும் செஞ்சு தாரேன்னு சொன்னாலும் ஒத்துக்கிறதில்ல. நல்ல
ஆளுய்யா நீ. ஒன்னயெல்லலாம் திருத்த முடியாது. எதாச்சும் பண்ணித் தொலைங்க, என்றார் என்னுடைய
மௌனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்.
அப்படி இல்லீங்க. அதுவும்
நம்மளாட்டம் உசுருதானே. இந்தப் பூமியில நாம்ம மட்டும் வாழணும்ன்னு நெனைச்சா எப்படி?
அதுகளும் வாழணும் இல்லியா. பூச்சிகள், பறவைகள் இல்லாத உலகில் மனுஷன் வாழ முடியாதுன்னு
நான் படிச்சிருக்கேன், என்றேன்.
அதெல்லாம் படிக்கத்தான் நல்லா
இருக்கும். அதுகளையெல்லாம் வெச்சுக்கிட்டு வாழ முடியாது. பாரதியாரு காக்கா குருவிக்கெல்லாம்
அரிசியை அள்ளிப் போட்டுட்டு வாழ முடிஞ்சுதா? அதையெல்லாம் படிச்சிருக்கீறீரா நீரு? யோசிச்சு
சொல்லுமையா. எதைப் படிச்சாலும் முழுசா படிக்கணும். அரையும் கொறையுமா படிச்சா இப்படித்தான்.
நான் வர்றேன், என்று மீண்டும் வேலியை அமுக்கிக் கொண்டு அவர் வீட்டுப்பகுதிக்குச் சென்றார்.
எனக்கே குழப்பமாக இருந்தது.
எறும்புகளை அழிக்க ஸ்பிரேயர் மருந்தைக் கேட்டு, எறும்பு சாக்பீஸை வாங்கி வந்து, இப்போது
இவரிடம் இப்படி ஜீவகாருண்யம் பேசுகிறேனே என்று. அவர் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பதாகப்
பட்டது. அந்த நியாயத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பட்டது.
நான் அறைக்குத் திரும்பினேன்.
எறும்பு சாக்பீஸால் அறை முழுவதும் நேர்க்கோடுகள், நெளி நெளி கோடுகள் என்று பல விதமான
கோடுகளைப் போட்டேன்.மிச்சமிருக்கும் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்துக்
கொண்டிருந்தேன். அவை கொஞ்சம் கொஞ்சமாக கோடுகளை நெருங்கவும் அவற்றின் மேல் ஊர்வதும்
விலகுவதும் பிறகு மயங்குவதுமாக இருந்தன. விளக்குமாற்றால் அறையைக் கூட்டி விட்டு அவற்றை
அள்ளிக் குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டு கொல்லைக் கடைசியில் எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பில் அவற்றையும் உடன்கட்டை ஏற்றினேன். எனக்குள் இருந்த ஜீவகாருண்யம் எல்லாம்
புகையாய் எரிந்து மேலே போய் விட்டது போல. பக்கத்து வீட்டுக்காரர் சிகரெட் பிடித்தபடி
நான் செய்வதை குறுகுறுப்பான சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். அவரை ஒரு மாதிரியாக
வேண்டா வெறுப்பாக பார்த்தபடி வீட்டிற்குள் வந்து அறையைச் சுத்தம் செய்து அலசி விட்டேன்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அறை காய்ந்து பளிச்சென்று ஆனது. அறையைச் சுற்றி மீண்டும்
எறும்பு சாக்பீஸால் மூர்க்கத்தனமாகக் கோடுகளைப் போட்டேன். சுவரில் ஒரு அடி தூரம் வரை
கிறுக்கல் கிறுக்கலாய்க் கொடுகளை வரைந்தேன். சிறு பிள்ளை கிறுக்குவதைப் போலிருந்தது
எனக்கு. மீண்டும் பால்யத்தில் தொலைந்து ஏன் இப்படி கோடுகளைப் போடுகிறேன் என்று தெரியாமல்
அந்தச் சாக்பீஸ் தீரும் வரை இஷ்டத்துக்குக் கோடுகளைப் போட்டுக் கொண்டே இருந்தேன். வாங்கி
வந்த சாக்பீஸின் முழு பயனையும் அடைந்து விட வேண்டும் என்ற வெறி எனக்குள் வந்திருந்தது.
ஒரு சில வாரங்கள் எந்தப்
பிரச்சனையும் இல்லாமல் எனது இரவுத் தூக்கம் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தது. மீண்டும்
ஒரு நாள் எறும்புகள் அதே அலமாரியை நோக்கி வர
ஆரம்பித்து விட்டன. அந்த இரவு தூக்கம் போனது. நெடுநேரம் விழித்துக் கிடந்து காலையில்
எட்டு மணி அளவுக்கு எழுந்தேன். அந்த நாள் முழுவதும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்
கொண்டு அறையைச் சுத்தம் செய்து, இந்த முறை ஸ்பிரேயர் மருந்தை வாங்கி வந்து அடித்து
வைத்தேன்.
அன்றைய இரவு படுத்துக் கிடந்த
போது உடல் எங்கும் எறும்புகள் ஊர்வது போலிருந்து. எழுந்து விளக்கைப் போட்டேன். அறையெங்கும்
வெளிச்சம் பரவியது. உடலில் ஓர் எறும்பு கூட இல்லை. அறையிலும் எந்த மூலையிலும் எறும்புகள்
இல்லை.
இன்னிக்குத்தானே சுத்தம்
பண்ணீங்க. எறும்பு ஊர ஆரம்பிச்சிட்டுதா? என்றாள் தூக்கக் கலக்கத்தோடு மனைவி.
எறும்பு ஒண்ணு கூட இல்லே.
ஆனா ஊர்ற மாதிரியே இருக்கு, என்றேன்.
அப்படின்னா ஹாலுக்குப் போய்
படுங்க. காலையில சைக்கியாஸ்ட்ரிஸ்ட் யாராச்சும் பார்ப்போம் என்றாள் மனைவி. எனக்குக்
கோபம் கோபமாக வந்தது. அவளை ஒரு எத்து எத்தி விட்டு வரவேற்பறைக்கு வந்து படுத்தேன்.
அறையிலிருந்து சன்னமாக அவள் விசும்பும் சத்தம் கேட்டது. நான் மேல்நோக்கி வெறித்துப்
பார்த்தேன். வரவேற்பறையின் மேற்கூரையின் மேல் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
*****
No comments:
Post a Comment