8 Nov 2024

எதற்கிந்த கல்விக் கடன்கள் மற்றும் மருத்துக் காப்பீடு திட்டங்கள்?

எதற்கிந்த கல்விக் கடன்கள் மற்றும் மருத்துக் காப்பீடு திட்டங்கள்?

மக்கள் நலம் நாடும் எந்த நாடும்,

மக்கள் நலம் விரும்பும் எந்த அரசும்

கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில் இந்த இரண்டுமே வியாபாரமாகிப் போனதும் நலத்திட்டங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களின் வணிகத்திற்கு வாய்ப்பாக போனதும் பெரும் சோகம்.

இந்தியாவில் விரைவாக வளர்வதற்கு இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன என்றால் அதில் முதல் வழி கல்வி நிறுவனங்களை நிறுவிக் கொள்வது, மற்றொன்று மருத்துவமனைகளைக் கட்டிக் கொள்வது.

இதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள உங்கள் பகுதியில் மிக விரைவாக வளர்ந்து வரும் அரசியல்வாதிகளை அல்லது தொழிலதிபர்களை உற்றுநோக்கினால் போதும். அவர் கல்வித் தந்தையாகவோ அல்லது மருத்துவத் தந்தையாகவோ மாற முயற்சித்துக் கொண்டிருப்பார். அதாவது ஒரு கல்வி நிறுவனத்தைக் கட்டி கல்வித் தந்தையாகவோ, மருத்துவமனையைக் கட்டி மருத்துவ தந்தையாகவோ ஆகியிருப்பார்.

இந்த அரசியல்வாதிகள்தானே நம்மை ஆளுகிறார்கள். இவர்கள்தானே மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறார்கள். இவர்கள் எதற்காக நம்மை ஆளுகிறார்கள்? எதற்காகச் சட்டங்களை இயற்றுகிறார்கள்? நம்மிடமிருந்து பணம் சம்பாதிக்க. மிகச் சரியாகச் சொல்வதென்றால், நம்மிடமிருந்து பணம் சம்பாதிக்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம்மை ஆளுபவர்களே இந்த அரசியல்வாதிகள்.

அதை எப்படி அவர்கள் நைச்சியமாகச் செய்து சம்பாதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இவர்கள் உருவாக்கி வைத்துள்ள சட்டங்களை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

இவர்கள் உருவாக்கி வைத்துள்ள கல்வி நிறுவனங்களில் பணம் இல்லாமல் மாணவர்கள் சேராமல் போனால் எப்படி இவர்கள் கல்வி வியாபாரம் செய்வார்கள்? ஆகவே அப்படி ஒரு பிரச்சனை நேராது இருக்க, பணம் இல்லாவிட்டாலும் இவர்களுக்குப் பணம் கட்டும் வகையில் கல்விக் கடன்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதே போல, பணம் இல்லாமல் இவர்கள் கட்டி வைத்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஆளில்லாமல் போனால் இவர்கள் எப்படி மருத்துவ வியாபாரம் செய்வார்கள்? அதற்காகவே மருத்துவ காப்பீடு திட்டங்களை அரசாங்கங்களே அமல்படுத்தும் வகையில் தந்திர ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.

இப்போது இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும், இவர்களுக்கு மட்டும் பணம் கொழிக்கும் இந்த முறைகளில் கல்விக் கடன் பெற்று படித்து, வேலைக்குச் சென்று கல்விக்கடனை அடைத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

அதே போல இவர்களது மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தி, அதைத் தாண்டிக் கூடுதல் செலவில்லாமல் மருத்துவ சிகிச்சையை முடித்து உடல் நலத்தோடும், மன நிம்மதியோடும் வெளிவந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

மருத்துவக் காப்பீட்டிற்காக மத்திய அரசும் மாநில அரசும் எண்பதினாயிரம் கோடி செலவு செய்திருப்பதாக மத்திய அரசின் தணிக்கை அமைப்பு கூறுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை எவ்வளவு சிறப்பாக மேம்படுத்தியிருக்கலாம். அப்படி மேம்படுத்தினால் நம் அரசியல்வாதிகளும் அவர்களோடு தொடர்புடைய கல்வி மற்றும் மருத்துவ வியாபாரிகளும் எப்படி ஆதாயம் பார்க்க முடியும்? அத்துடன் கல்விக் கொள்ளையையும் மருத்துவக் கொள்ளையையும் எப்படி திறம்பட செய்ய முடியும்?

இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தி ரமணா பட பாணியில் இறந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த கதையை ஆதார் விவரங்களே கூறுகின்றன. அரசின் மருத்துவக் காப்பீட்டை நம்பி தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றவர்கள் நோயோடு போரடியதை விட மருத்துவமனையோடு போராடி தோற்ற கதைகளை எத்தனையோ பேரின் அனுபவங்கள் தினம் தினம் சொல்கின்றன.

அரசியல்வாதிகளும் அவர்களோடு தொடர்புடைய மேற்படி வியாபாரிகளும் பயன் பெறுவதற்காகவே இவர்கள் கல்விக் கடன்களையும் மருத்துவ காப்பீடுகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றால் உருப்படியாகப் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாகவே இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் பலனடைய வேண்டுமானால் உங்களுக்கு அபார புத்திசாலித்தனமும், குறுக்கு வழிகளில் வேலை செய்யும் மூளைபலமும் தேவைப்படும். சாதாரணமானவர்களால் சாமானியர்களால் இவற்றைப் பயன்படுத்தி கிஞ்சித்தும் பலன்களைப் பெற முடியாது என்பதை அரசுகளின் சாதனையாகச் சொல்ல முடியாது, மக்களுக்கான வேதனையாகத்தான் சொல்ல முடியும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...