28 Nov 2024

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

வாகனம் ஓட்டும் போது

நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள்

எதையும் நீங்கள் அதன் போக்கில் விட முடியாது என்பதை.

மனிதர்கள் விசயத்தில்

அவர் அப்படித்தான் எனத் தெரிந்த பிறகு

அவரை அப்படியே விட்டு விடுவதுதான் சரி என்பதை

யாரும் கற்றுக் கொடுக்காமலே கற்றுக் கொள்வீர்கள்.

நீங்கள் ஓர் உதவி செய்தால்

உங்களுக்கு ஒரு பதில் உதவி கிடைக்கும்

நிலைமை எப்போதும் அப்படியல்ல

உபத்திரவங்களும் கிடைக்கும் என்பதை

படிப்படியாகத் தெரிந்து கொள்வீர்கள்.

ஆரம்பம் நீங்கள் விரும்பும் அளவுக்கு

உலகம் உங்களை விரும்பும் என்பதாக இருக்கும்.

முடிவு நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும்

உங்களை விரும்பாதவரும் உலகில் உண்டு என்பதை உணர்த்தும்.

நீங்கள் என்னதான் ஞானியாக இருந்தாலும்

உங்களை ஒரு பொருட்டாக மதிக்காதவர்

உங்கள் சொற்களைப் பந்தாடுவார்.

நீங்கள் நேர்மையாக இருப்பதைப் பார்த்து

எல்லாரும் நேர்மையாக இருக்க வேண்டுமா என்ன?

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் உங்களைப் பார்த்து

உலகமும் அப்படி மாறுமா என்ன?

ஓர் உப்புக் கல் கிடைப்பது அரிதானால்

உலகம் அதற்காக அடித்துக் கொள்ளும்.

வைரக்கல் கிடைப்பது சாதாரணம் என்றால்

அது பிச்சைப் பாத்திரங்களில் தாராளமாக விழும்.

கனமழைப் பொழியப் போகிறது என்றால்

எல்லாரையும் போல மகிழ்வுந்தை

மேம்பாலத்தில் கொண்டு போய் நிறுத்துங்கள்.

எல்லாரும் வாங்குகிறார்கள் என்பதற்காக

எரியின் மேல் இருக்கும் ஒரு மனையை

விலை பேசி வாங்காதீர்கள்.

இப்படித்தான் அப்படித்தான் என்று

சொல்வதற்கு எதுவுமில்லை.

எப்படி இருக்க வேண்டும் என்பதை

நீங்கள்தான் தீர்மானித்தாக வேண்டும்

அது சரியாக இருந்தாலும், தவறாகப் போனாலும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...