13 Nov 2024

கிரகம்

கிரகம்

எந்த வேலையும் இல்லாமல் சுற்றித் திரிவது இளமாறனின் வாழ்க்கை இலட்சியம் என்றால் உங்களுக்குக் கோபம் வராதுதானே? அப்படிப்பட்டவனுக்கு மதுமிதாவைக் கண்டதும் காதல் வந்தது என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காதுதானே? மதுமிதாவுக்கு புட்டுக் கொண்ட இரண்டு காதல்கள் (பிரேக் அப்புகள்) கடந்த காலத்தில் இருந்தன.

என்னவோ இளமாறன் எந்த வேலைக்கும் போக முடியாது என்று சொன்னது மதுமிதாவுக்குப் பிடித்திருந்தது. இப்படியுமா ஒரு பெண் இருப்பாள் என்று நீங்கள் கேட்கலாம். எங்கேயாவது போனால்தானே ஓர் ஆண் இன்னொரு பெண்ணைப் பார்த்து விட்டுத் தன்னைக் கழற்றி விடுகிறான் என்ற நினைத்த மதுமிதாவுக்கு இளமாறனைப் பிடித்துப் போனதில் இப்போது உங்களுக்கும் எந்த வியப்பும் இருக்காது என்று நினைக்கிறேன்.

இந்தக் காதல் புட்டுக் கொள்ளாமல் போகும் என்று நினைத்த மதுமிதாவுக்கு அந்தக் காதலும் புட்டுக் கொண்டு போவதற்கு அவள் அழைத்து வந்த ஆத்ம நண்பி ஆத்மிகாவே காரணமானாள் என்பது நீங்கள் எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இளமாறனுக்கு மதுமிதாவைக் கண்டதும் காதல் வந்தது போல ஆத்மிகாவைக் கண்டதும் காதல் வந்தது. அது சரி. அப்படி வராமல் இருக்கக் கூடாதா என்ன? ஒரு முறைதான் கண்டதும் காதல் வர வேண்டுமா என்ன? மதுமிதா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள், கெஞ்சிப் பார்த்தாள். இளமாறனால் ஆத்மிகாவின் மீதான காதலை முறிக்க முடியவில்லை.

அடுத்தாக ஆத்மிகாவுடன் துவங்கியது இளமாறனின் காதல் பயணம் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு? சில நாட்களில் அதுவும் மாறியது. இந்த முறை மாறியது இளமாறனில்லை, ஆத்மிகா. ஆனந்தைப் பார்த்ததும் ஆத்மிகா இளமாறனைத் துண்டித்தாள் என்று நீங்களே கதையைத் தொடர்ந்து கொள்ளலாம்.

அடுத்த என்ன நடந்தது என்று கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

இளமாறன் வேறு வழியில்லாமல் வேலைக்குப் போக ஆரம்பித்தான். வேலைக்குச் சேர்ந்து அவன் போன முதல் வேலை என்னவென்று கேட்டால் இன்னும் அசந்து போவீர்கள். மதுமிதா வீட்டுக்கு பீட்சாவை எடுத்துக் கொண்டு போனதுதான் அவன் செய்த முதல் வேலை.

மிகச் சரியாக மதுமிதாவின் வீட்டுக்கு பீட்சா கொண்டு செல்லும் வேலை அவனுக்கு எப்படி வந்தது என்கிறீர்களா?

இளமாறன் புட்டுக் கொண்ட வருத்ததில் இருந்த மதுமிதாவுக்கு மதன் கிடைத்ததும் அவனுடன் சேர்ந்து இந்த பீட்சாவுக்கான ஆணையை அலைபேசி செயலியில் போட்டிருந்தாள். அந்த ஆணை அந்த நிறுவனத்தில் வேறு யாருக்கும் போகாமல் இளமாறனுக்குச் சரியாக வந்ததுதான் கிரகம் என்று நான் சொல்கிறேன். இதை நீங்கள் எப்படி சொல்வீர்கள்?

*****

No comments:

Post a Comment

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது?

ஒரு வார்த்தை விசாரிப்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? இந்த உலகில் எதுவும் பழையது இல்லை. எல்லாம் புதுமையானதுதான். புதுமையாக இருக்கும் ஒன்...