11 Nov 2024

வாழ்க்கை முறையை மாற்றும் போது கிடைக்கும் தீர்வுகள்!

வாழ்க்கை முறையை மாற்றும் போது கிடைக்கும் தீர்வுகள்!

சமுத்திரா பள்ளிக்கு எடுத்துச் செல்லும் தண்ணீர் புட்டியில் பாதி தண்ணீரைத்தான் குடித்திருப்பாள். மீதி பாதிப்புட்டி தண்ணீர் அப்படியே வீடு திரும்பும். எப்படி இவளுக்குத் தாகம் இவ்வளவு கம்மியாக இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கும்.

அவளை ஒருநாள் மிதிவண்டியில் பள்ளிக்கு அனுப்பிய அன்று, வீடு திரும்பிய போது அவளது தண்ணீர் புட்டி காலியாக இருந்தது. இன்று தனக்குத் தண்ணீர் போதவில்லை என்றும் புகார் சொன்னாள். அதுவரை அவள் முச்சக்கர அல்லது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சொகுசாகப் பள்ளிக்குச் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்தாள். இந்தச் சம்பவம் பலவற்றைப் புரிய வைத்தது.

வியர்க்கும் அளவுக்கு உடல் சார்ந்த இயக்கங்களுக்கு உட்படும் வேலைகளை செய்ய வேண்டும். அப்போதுதான் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். உடலும் வியர்க்கும். உடல் வியர்த்தாலே தீர்வு காணப்படாத பல உடல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும். தாகமின்மை என்ற பிரச்சனை அவளுக்குச் சரியானது அப்படித்தான். இதிலிருந்து சில விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும் பரிந்துரைக்கவும் வேண்டும்.

உடல் உழைப்புக்கான வாய்ப்பில்லாத வேலையில் இருப்பவர்கள் பணியிடங்களுக்குச் செல்வதற்கு மிதிவண்டியைப் பயன்படுத்தலாம். நெடுந்தூரம் பயணிப்பவர்கள் என்றால் குறைந்தது ஆறு கிலோ மீட்டர் தூரமாவது மிதிவண்டியில் சென்று பிறகு பேருந்திலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ செல்வது போல பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். அல்லது பணியாற்றும் இடத்திற்கும் வீட்டுக்கும் இடையே ஆறு கிலோ மீட்டருக்குள் இருப்பிடம் அமையுமாறு வீட்டை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைத்துக் கொண்டு மிதிவண்டியில் பயணிக்கலாம்.

நடைபயிற்சிக்கு நேரமில்லை என்பவர்கள் இரண்டு மூன்று நிறுத்தங்கள் நடந்து சென்று பேருந்து ஏறலாம். இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு முன்பே பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வரலாம்.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சில கிலோ மீட்டருக்கு முன்பாக இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து செல்லலாம். கொஞ்சம் அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் உடல் இயக்கத்துக்குத் தேவையான நடை பயிற்சியையோ, மிதிவண்டிப் பயணத்தையோ திட்டமிட்டு அமைத்துக் கொள்ளலாம்.

காலை மற்றும் மாலை நேரங்களில் நேரம் கிடைக்கிறது என்பவர்கள் நடை பயிற்சியையும் உடற்பயிற்சியையும் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளலாம். யோகப் பயிற்சியைக் கற்றுக் கொண்டு அதிகாலை வேளையில் செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம். தோட்டமிடும் பணிகளையும் செய்யலாம். இதனால் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் கிடைப்பதோடு, உடலுக்குத் தேவையான உடல் உழைப்பும் கிடைத்து விடும்.

சர்க்கரை நோயையோ, ரத்த அழுத்த வியாதியையோ, கொழுப்பு சார்ந்த உபாதைகளையோ மருந்துகள் மூலமாகத்தான் சரி செய்து கொண்டு வாழ வேண்டும் என்பதில்லையே. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழலாம்தானே.

வாழ்க்கை முறையை மாற்றும் போது வாழ்க்கையில் நிலவும் உடல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும் போது, அந்த தீர்வுகளுக்குச் செலவழித்து அவற்றை ஏன் மருத்துவத்தில் தேட வேண்டும்?

உடலை இயங்க வைத்தால், ரத்தத்தை உடல் முழுவதும் ஓட வைத்தால் தீராத வியாதிகளும் தீரும். மருத்துவச் செலவினங்களும் மாறும். நீங்கள் ஒரு புதிய உலகையும் தரிசிக்க நேரும். அதுதான் ஆரோக்கியம் எனும் உலகம் ஆகும்.

*****

No comments:

Post a Comment

கிரகம்

கிரகம் எந்த வேலையும் இல்லாமல் சுற்றித் திரிவது இளமாறனின் வாழ்க்கை இலட்சியம் என்றால் உங்களுக்குக் கோபம் வராதுதானே? அப்படிப்பட்டவனுக்கு மதும...