3 Nov 2024

தமிழக வெற்றிக் கழகம் முன் உள்ள சவால்கள்!

தமிழக வெற்றிக் கழகம் முன் உள்ள சவால்கள்!

கட்சிகளுக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் விஜய்யும் கட்சியைத் துவங்கியிருக்கிறார் என்கிற வாசகம் அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கான வாசகம் அல்ல.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் துடிப்போடு ஆட்சியைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கின்றன. கட்சி என்கிற அளவில் இரு திராவிட கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகக் களமாடக் கூடிய மற்றும் அதிக அளவிலான தொண்டர்களைக் கொண்ட கட்சிகள் இவை.

இப்போது நீங்கள் ஒரு கேள்வியை எழுப்பலாம், பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றாக இருக்கும் நிலையில் ஆட்சியைப் பிடிக்கப் போராடும் கட்சிகள் என்று எப்படி கூறலாம் என்று?

ஜனநாயகச் சாத்தியத்தை உணர்ந்து பாமாகவும் விடுதலைச் சிறுத்தைக் கட்சியும் கூட்டணி நிலைபாடுகளை எடுத்தாலும் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் இலக்கைக் கொண்ட கட்சிகள் அவை.

நாம் தமிழர் கட்சியானது தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வேகமாகக் களமாடிக் கொண்டிருக்கும் தனித்து இயங்கும் கட்சி.

இக்கட்சிகள் ஒருவேளை ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பை நம்பி கூட்டணி அமைத்தால் அது மூன்றாவது கூட்டணியாக அமையும். மற்ற இரு கூட்டணிகளாக திமுகவும் அதிமுகவும் இருக்கும். இப்போது ஓட்டுகள் மூன்றாகப் பிரியக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி மூன்றாகப் பிரியும் போது விஜயகாந்த் இதற்கு முன்பு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைத்த மூன்றாவது கூட்டணியைக் கருதிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒருவேளை இப்படி அமையும் என்றால், அதாவது அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைக்கும் என்றால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அது ஒரு வெற்றி வாய்ப்பாக அமையும் சாத்தியம் இருக்கிறது. அப்படி அமையும் பட்சத்தில் யார் முதல்வர், யார் துணை முதல்வர், யாருக்கு முக்கிய இலாக்காக்கள் என்கிற பதவி பகிர்வுகளை எந்த அளவுக்கு இரு கட்சிகளும் சரியாகச் செய்து கொள்ள முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக அமையும்.

ஏன் திமுகவும் தவெகவும் கூட்டணி அமைக்காதா என்று நீங்கள் கேட்டு விடக் கூடாது. அவர் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி என்று சொல்லி விட்டதால் அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. நிரந்தரமாக இல்லை என்று சொல்லி விட முடியாது. கமலஹாசன் போல பின்னொரு காலத்தில் திமுகவோடு கூட்டணி பேசலாம். எப்போதும் இணக்கமான உறவுகளையே பரா மரிக்க நினைக்கும் உதயநிதி ஸ்டாலின் அதற்கு இசையவும் கூடும். ஆனால் அதற்குத் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சவால்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது முக்கியமாக விஜயகாந்த் மற்றும் கமலஹாசனின் அரசியல் பயணங்களையே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜயகாந்தின் ரசிகர் பட்டாளத்தையும் அவரது பொதுப் பிரச்சனைகளுக்கு முன்நிற்கும் ஆளுமையையும் எப்போதும் தமிழகம் விரும்பியிருக்கிறது. இதில் விஜய்க்கு ரசிகர்களின் பட்டாளம் இருக்கிறது. பொதுப் பிரச்சனைகளில் முன் நிற்கும் ஆளுமையை இதுவரை விஜய்யிடம் தமிழகம் பார்த்ததில்லை. இனிமேல் பார்க்கக் கூடும் அல்லது பார்க்காமலும் போகக் கூடும்.

கமலஹாசனின் ரசிகர் பட்டாளம் என்பது ரஜினி அளவுக்கு அடர்த்தியானதல்ல. பொதுப்பிரச்சனைகளுக்காக அவர் முன் நிற்கும் ஆளுமை இல்லை என்றாலும் தனது கருத்தையும் குரலையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆளுமை அவர். விஜய் இதுவரை பொதுப்பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தையோ, குரலையோ அவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்தியதில்லை. விஜயகாந்த் மற்றும் கமலஹாசனோடு ஒப்பிடுகையில் இக்கருத்துகளை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

இனி அவர் தனது கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளாகக் குறிப்பிட்டுள்ளவற்றிலிருந்து அவரது கட்சிக்கான வெற்றி வாய்ப்புக்கான சாத்தியங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை தனது கட்சிக்கான துணைத் தலைப்பைப் போல விஜய் வெளியிட்டிருக்கிறார். சமத்துவத்தை நோக்கிய தமிழகத்தின் பாதையில் அது முக்கியமான இலக்கு. ஆனால் அது சமூக நீதிக்கான மிகப்பெரிய பயணம். உடனடியாக இந்த இலக்கானது தேர்தல் களத்தில் வாக்குகளை ஈர்த்து விடும் என்று சொல்லி விட முடியாது. நீண்ட கால நோக்கில் வாக்குகளை ஈர்ப்பதற்கு விஜய் இங்கிருக்கும் சாதியத்தோடும் சாதிய அரசியலோடும் நீண்ட நெடிய காலம் போரிட வேண்டியிருக்கும்.

தமிழ்த்தேசியமும் திராவிடமும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று தன் கட்சி விளக்க மாநாட்டில் அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறார் விஜய். ஆனால் அன்று அவர் பேசியதில்தான் எத்தனை ஆங்கிலச் சொற்கள்? அப்படியானால் அவர் குறிப்பிடும் தேசியம் தமிழும் ஆங்கிலமும் கலந்த தேசியமோ என்னவோ!

திராவிடத் தலைமை என்பது திமுக மற்றும் அதிமுகவுக்கு மற்றும் சொந்தம் என்று சொல்லி விட முடியாது. விஜய் என்றில்லை தமிழகத்தில் கட்சி தொடங்கும் யாருக்கும் அது சொந்தமானதுதான். ஆனால் இங்கிருக்கும் இரண்டு திராவிட தலைமைகளுக்கு மாற்றாக அவர் எப்படித் தன்னைத் தனித்துவமான திராவிடத் தலைமையாக நிறுவப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே லட்சிய திராவிடத்தைக் காட்ட நினைத்த டி. ராஜேந்தர், களத்தில் இருக்கும் மறுமலர்ச்சி திராவிடத்தின் வை.கோ, திராவிட முற்போக்கின் விஜயகாந்தின் கட்சி ஆகியவற்றையும் தாண்டி, அத்துடன் இருக்கின்ற இரு திராவிட முன்னேற்ற கழகங்களைத் தாண்டி விஜய் இந்த விசயத்தில் தன்னை நிரூபித்தாக வேண்டும்.

நிலைமை இப்படி இருக்கும் போது விஜய் எதை நம்பி அரசியலில் இறங்கியிருக்க முடியும்?

ஜெயலலிதா, கலைஞர் என்ற இரு மாபெரு ம் ஆளுமைகள் இல்லாததைத் தனக்குச் சாதகமாக அவர் நினைத்திருக்கலாம். அதற்காக ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி என்ற ஆளுமைகளைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் மதவாதப் பிரிவினைக்கு எதிராகவும் மாநில சுயாட்சிக்கு ஒரு வலிமையான தலைமையாக த் தன்னை முன்னிறுத்தும் போக்கையும் தனக்கான அரசியல் பாதையாக அவர் கொள்ள நினைத்திருக்கலாம்.

அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகள் மற்றும் தமிழக அளவிலான ஆணவப் படுகொலைகளால் நேரிடும் இறப்புகள் அவர் மனதைப் பாதித்துக் களமாடத் தூண்டியிருக்கலாம்.

எப்படியிருப்பினும் அரசியலில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ஒரு சில சாணக்கிய கணக்கீடுகளேனும் இல்லாமல் அவர் இறங்கியிருக்க மாட்டார் என்ற கணக்கில் நோக்கும் போது பிரமாண்டமாக விரவியிருக்கும் தன்னுடைய ரசிர்களை நம்பியே அவர் களமாட துணிந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. இது எந்த அளவுக்கு வலிமையாக அவருக்குக் கை கொடுக்கும்? ஓட்டு அரசியலில் தோராயமாக ஐந்திலிருந்து பத்து சதவீதம் வரை அது கை கொடுக்கும். ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஓட்டு அரசியலில் அவருக்கு முப்பதைந்து சதவீதத்துக்கு மேல் பலம் வேண்டும். இது ஒரு மாணவர் தேர்வில் பெறும் தேர்ச்சி மதிப்பெண்களுக்கு ஒப்பானது என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆக அவருக்கான இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் இருபத்தைந்திலிருந்து முப்பது சதவீதம் வரையிலான பலத்தை அவர் எப்படிப் பெறப் போகிறார் என்பதைப் பொருத்தே அவரது அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

இப்போது விஜய்யின் தனித்துவ குணாதிசயங்களிலிருந்து அவர் எப்படி அரசியலை எதிர்கொள்வார் என்பதையும் நாம் ஊகித்தாக வேண்டும்.

விஜய் திரைத்துறையில் நுழைந்த போது அவருக்கு ஏற்பட்ட பின்னடைவுகளைத் தன்னம்பிக்கையால் எதிர்கொண்டதைக் குறிப்பிடுகிறார். அரசியலிலும் இத்தகைய தன்னம்பிக்கை கை கொடுக்கும். அதே நேரத்தில் பொதுப் பிரச்சனைகளில் அவர் எந்த அளவுக்குப் பொது மக்களோடு கை கோர்க்கிறார் என்பதும் அவரது வளர்ச்சிக்குக் கை கொடுக்கக் கூடிய ஒன்று. இதுவரை அவர் பொதுமக்களோடு எதிலும் கை கோர்த்ததில்லை. இனி அவர் எப்படி அவர் கை கோர்க்கப் போகிறார் என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

அரசியல் எனும் பரமபத விளையாட்டில் அவர் வெற்றி பெறுவார், இவர் தோல்வியுறுவார் என்றெல்லாம் அவ்வளவு சுலபமாகக் கணித்து விட முடியாது. கணிப்புகளைத் தாண்டி விளைவுகளை ஏற்படுத்துவதுதான் அரசியல். அப்படி விளைவுகள் வெடிப்பதற்கும் சில கணிப்புகள் இல்லாமல் இல்லை. அந்தக் கணிப்புதான் அவர் இன்னும் எப்படி இருபத்தைந்திலிருந்து முப்பது சதவீத ஓட்டுப் பலத்தைப் பெறப் போகிறார் என்பது.

இரு திராவிட கட்சிகளும் முப்பதிலிருந்து முப்பத்தைந்து சதவீத ஓட்டுப் பலத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் வேளையில், உதிரிக் கட்சிகள் இதர சதவீத அளவைப் பங்கிட்டிருக்கும் நிலையில் விஜய் தனக்கான முப்பதைந்து சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்களை எப்படித் தாண்டப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது அவரது அரசியலின் வெற்றிக் கணக்கு.

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...