தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?
தமிழகம்
பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை,
தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை என்று அரசியல் கட்சித் தொடங்குபவர்களின் எண்ணிக்கையிலும்
தமிழகத்தின் முன்னேற்றம் அதிகமாகத்தான் இருக்கிறது.
நீதிக்கட்சி,
திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மையம் என்று தமிழகத்தை
மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் விஜய்யின் தமிழக வெற்றிக்
கழகமும் இணைகிறது.
தமிழகத்திற்கு
அரசியல் கட்சிகளைப் பங்களித்த வகையில் வேறெந்த துறைக்கும் இல்லாத சிறப்பு தமிழ்த் திரைத்துறைக்கு
இருக்கிறது. எம்ஜியாரின் அதிமுகவிலிருந்து தமிழ்த்திரைத் துறையின் பிரதான அரசியல் கட்சி
பங்களிப்பு தொடங்குகிறது. தமிழ்த்திரைத் துறையின் அரசியல் தந்தை என்றால் அவர்தான்.
அவரைத் தொடர்ந்து பலரையும் திரையிலிருந்து அரசியலுக்குக் கொண்டு வந்தது அவர் அரசியலில்
சாதித்துக் காட்டிய வெற்றிதான்.
நாம்
இங்கு முக்கியமான கால விவரம் ஒன்றை அனுமானித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தை
அரசியல் பின்னணியிலிருந்து ஆண்டவர்களின் ஆட்சிக் காலத்துக்கு சரிபாதிக்கும் மேலாக திரைப்
பின்னணியிலிருந்து ஆண்டவர்களின் ஆட்சிக் காலம் அமைகிறது.
அண்ணாதுரை,
கலைஞர் கருணாநிதி போன்றோரை அரசியல் பின்னணியும் திரைத்துறை பின்புலமும் கொண்டவர்களாகப்
பார்க்க வேண்டியிருக்கிறது. எம்ஜியாரைத் திரைப்பின்னணியும் அரசியல் பின்புலம் கொண்டவராகவும்
பார்க்க வேண்டியிருக்கிறது.
திரையிலிருந்து
அரசியலை நோக்கி நகர்ந்த எம்ஜியாரின் அரசியல் பின்புலத்தைச் சாதாரணமாகக் கருதி விட முடியாது.
எம்ஜியார் தன்னுடைய அரசியலை கொள்கை மற்றும் அரசியல் கோட்பாடு என்னவென்று பதிலளிக்கும்
ரீதியாக அவர் அண்ணாயிசம் என்று கூறியதை விமர்சனத்துக்கு உட்படுத்தினாலும் எம்ஜியாரின்
அரசியல் சித்தாந்தமும் அரசியல் தெளிவும் திராவிட சித்தாந்தத்தின் வழியே வளர்ந்து வந்தவை.
எம்ஜியார்
திரைப் பின்னணியில் இருந்தாலும் அரசியலில் களமாடிக் கொண்டு இருந்தவர். சரியான சந்தர்ப்பமும்
நேரமும் கூடி வந்த போது திரைப்பாதையை அரசியல் பாதையாக மாற்றியவர். திரையைப் பிரதானமாகக்
கொண்ட எம்ஜியார் அரசியலைப் பிரதானமாகக் கொண்டு வெற்றி அடைந்ததற்கு இப்படி ஒரு தெளிவான
வழித்தடம் தெரிகிறது. இந்த வழித்தடம் தெளிவாகத் தெரியாத காரணத்தாலேயே திரைப்பாதையைத்
தங்களது அரசியல் பாதையாக மாற்றியதில் பாக்கியராஜ், டி ராஜேந்தர், கமலஹாசன் போன்றோர்
பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
சிவாஜி
கணேசன், விஜயகாந்த் போன்றோருக்குக் கூட இந்த வழித்தடம் தெளிவாக உள்ளது. அவர்களும் பின்னடைவைச்
சந்தித்திருக்கிறாரகள். ஆனால் அவர்கள் சறுக்கல்களை எதிர்கொண்டு எம்ஜியாரைப் போன்று
தெளிவோடும் மன உறுதியோடும் துணிவோடும் அணுகியிருந்தால் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பானது
காலம் கடந்தாவது நிச்சயம் கிடைத்திருக்கக் கூடியதுதான்.
தமிழகத்தின்
வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் திரைப்பாதையிலிருந்து அரசியல் பாதையை நோக்கிய
பயணத்தில் இந்த வழித்தடம் தெளிவாக இல்லை. இது அவருக்கு ஒரு பின்னடைவாகத்தான் இருக்கும்.
இந்தப் பின்னடைவினாலேயே அவர் அரசியலில் தோல்வி கண்டு விடுவார், பின்னடைவைச் சந்தித்து
விடுவார் என்று கூறி விட முடியாது. அவர் தன்னுடைய வழித்தடத்தை இதற்கு மேல் உருவாக்கலாம்.
அதற்கு குறைந்தபட்சம் இரண்டு தசாப்தங்கள் தேவைப்படும். இந்த இரண்டு தசாப்தங்கள் என்பதும்
துல்லியமான கணக்கு என்றோ, மிகச் சரியான கணிப்பு என்று கூறி விட முடியாது. வரலாற்றின்
போக்கில் இது ஒரு கணிப்பு அவ்வளவே.
அரசியலில்
கால் பதித்ததிலிருந்து அண்ணாதுரை, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா என அனைவரும் இந்த வழித்தடத்தில்
குறைந்தபட்சம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாகக் கால் பதித்து பல்வேறு சறுக்கல்களையும்
எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டே ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர். எம்ஜியார்
கட்சி தொடங்கி மிக குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பதை நீங்கள், அவரது வழித்தடம்
எப்போது அரசியல் களத்தில் கால் பதித்ததிலிருந்து தொடங்குகிறது என்பதைக் கணக்கிட்டுப்
புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர் என்ற தவறான
கணிப்பை அவர் மீது வைத்து விடக் கூடும்.
இந்தக்
கணிப்பையும் மீறி விஜய் 2026 இல் ஆட்சியைப் பிடிப்பாரானால் தமிழக அரசியல் வரலாறு ஒரு
புதிய திசையை நோக்கி ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பதாகத்தான் அர்த்தம். அந்த அர்த்தம்
சொல்வது என்னவென்றால் தங்களைப் பொழுதுபோக்காக மகிழ்விக்கும் ரசிக பலம் உள்ளவர்களைத்
தலைவராக்கும் வகையில் தமிழக மக்கள் மனச்சோர்வில் உள்ளனர் என்பதைத்தான்.
*****
No comments:
Post a Comment