12 Oct 2024

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் எனும் மாயமான்!

இலவசம் என்றால் வாய்ப் பிளப்பவர்கள் ஆயிற்றே நாம்.

ஓசியில் கொடுத்தால் பினாயிலையும் குடிப்பவர்கள் என்று கவுண்டமணி சும்மாவா சொன்னார்?

மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் செலவு செய்து அலுத்து வெறுத்துப் போனவர்களுக்கு, இலவச மருத்துவப் பரிசோதனை என்றால் எப்படி இருக்கும்? கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருக்குமா? தேடிப் போன புதையல் நாடி வந்தது போல இருக்குமா?

எதற்காக இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்?

ஏதேனும் நோயிருந்தால் கண்டறிந்து விடலாம் என்று சொல்வீர்கள்.

நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால்தான் அப்படி நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். அதை விடுத்து நோயில்லாத ஒருவர் தனக்கு நோய் இருக்குமோ என்றெல்லாம் இது போன்ற இலவசப் பரிசோதனைகள் பக்கம் போகக் கூடாது.

தவிரவும் உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேவையா இல்லையா என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். அவர் உங்களுக்கு எந்த விதமான சோதனை செய்ய வேண்டும் என்பதை உங்களைப் பரிசோதித்து எழுதித் தர வேண்டும்.

தெருவில் வருவோர், போவோர் எல்லாம் இது போன்ற இலவச மருத்துவப் பரிசோதனைகள் என்று சொல்லி உங்களைப் பரிசோதிக்கக் கூடாது.

காசா? பணமா? செய்து கொண்டால் ஆயிற்று என்றால், இலவச மருத்துவப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் கேனைகளா என்ன?

அவர்கள் பாட்டுக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து விட்டு, அதன் முடிவுகளைத் தந்து அங்கே முகாமிட்டு இருக்கும் மருத்துவர்களைப் போய் பார்க்கச் சொல்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து விட்டு சர்க்கரை அதிகமாக இருக்கிறதே, ரத்த அழுத்ததுக்கான அறிகுறி தெரிகிறதே, கொழுப்பு கூடுதலாவது போலத் தெரிகிறதே என்று அவர்கள் பாட்டுக்கு மருந்து மாத்திரைகளை எழுதித் தள்ளி விட்டு அதை வாங்கி முன்கூட்டியே நோய்களைத் தடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

அந்த மருந்துகளை வாங்கி விட்டு ரசீதைப் பார்த்தால் இரண்டாயிரம், மூவாயிரம் ஆகிறது. இதற்கு நீங்கள் காசு கொடுத்தே உங்களைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை இதை விட குறைவானத் தொகையில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலவச மருத்துவ பரிசோதனைகள் என்பன இலவசங்களே அல்ல. உங்களுக்கான பரிசோதனை முடிவுகள் என்று சொல்லி, உங்களை மருத்துவரை நாட வைத்து, உங்களுக்கான பரிசோதனைக் கட்டணத்தை உங்களுக்குத் தேவையில்லாத மருந்துகளை வாங்க வைத்து அதில் ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.

இனி இலவச மருத்துவப் பரிசோதனைகள் பக்கம் தலைவைத்து படுப்பீர்கள்?

எப்போதும் இலவசமாக ஒன்றைக் கொடுக்கும் போது, எதற்காக உங்களுக்கு அதை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இலவசமாக ஒன்றைக் கொடுப்பதால் கொடுப்பவருக்கு என்ன லாபம் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்த இரண்டையும் செய்தால் நீங்கள் இலவசம் என்ற பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டீர்கள்.

ஆம்!

இலவசம் என்பது மாயமான்.

அதைத் தேடிப் போன ராமனின் கதையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அதுவும் இலவச மருத்துவப் பரிசோதனைகளில் நோய்கள் என்ற மாயமானைத் தேடிப் போய் உங்கள் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்.

*****

No comments:

Post a Comment

வீடுபேறு

வீடுபேறு அனுமதி பெற்று வீடு கட்டுவது என்றால் குளவி அனுமதி பெற்றா கூட்டைக் கட்டுகிறது பாம்பு அனுமதி பெற்றா புற்றைக் கட்டுகிறது தேனீக்...