11 Oct 2024

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

இரண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்!

நாங்கள் படிக்கின்ற காலத்தில் இலவசப் புத்தகங்கள் கிடையாது. புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். முழுக்காசையும் கொடுத்து வாங்குவதற்கு யோசனைபட்டுக் கொண்டு பழைய புத்தகங்களைப் பாதி விலைக்கும் கால்வாசி விலைக்கும் முன்கூட்டியே மூத்த மாணவர்களிடம் பேசி வைத்துக் கொண்டு வாங்குவதுண்டு. இப்போதைய பாஷையில் சொன்னால் அவை செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்.

இப்போது அந்தப் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. அரசாங்கப் பள்ளிக் கூடங்களில் புது புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுகிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களில் பழைய புத்தங்களை வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் சீட்டைக் கிழித்து விடுவார்கள். சேர்க்கையைச் செய்யும் போதே சகலவற்றிற்கும் சேர்த்து ரசீதைத் தீட்டி எடுத்து விடுகிறார்கள். இப்போதிருக்கும் பிள்ளைகளிடம் செகண்ட் ஹேண்ட் என்று புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் பார்வையாலேயே எரித்து விடுவார்கள். அண்ணன் படித்த நோட்ஸைக் கூட தம்பி படிப்பதற்கு யோசிக்கிறான். புதிதாகத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

மகிழுந்து (கார்), இரு சக்கர வாகனம் போன்றவற்றில் இந்த செகண்ட் ஹேண்ட் என்பது இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கின்றன. மகிழுந்து விடயத்தில் ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு சில வருடங்கள் ஓட்டி விட்டு இரண்டு லட்சத்திற்கு விற்றவர்களும் இருக்கிறார்கள். ஒன்றரை லட்சத்துக்கு வாங்கி ஒரு லட்சத்துக்கு விற்றவர்களும் இருக்கிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள் விடயத்தில் வாங்கிய விலையை விட குறைவாக விற்றவர்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக இந்த செகண்ட் ஹேண்ட் விசயத்தில் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது நல்லது என்பது பெரியோர்களின் பொதுவான அபிப்ராயம். வாங்கி விட்டு பிறகு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடல் கணக்காய் வண்டி அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை என்று பாட்டுப் பாடும்படி ஆகிவிடும்.

ஒன்றரை லட்சத்துக்கு மகிழுந்தை வாங்கி அதற்கு இரண்டு லட்சம் செலவு செய்து அதை ஐம்பதாயிரத்துக்கு விற்ற நண்பர்களின் கதையெல்லாம் எனக்குத் தெரியும். வாங்குவதைப் புதிதாக வாங்கி விட்டால் நீங்கள் வைத்துக் கொள்வதைப் பொருத்து பத்து வருடங்களுக்குக் கூட அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். அப்படி இல்லையென்றாலும் ஐந்து வருடங்களுக்காவது எந்தப் பிரச்சனையும் தராமல் அது உண்டு, நீங்கள் உண்டு என்று அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும்.

ஏன் இந்த செகண்ட் ஹேண்டை நாடுகிறோம்? எல்லாம் இல்லாத குறைதான். ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் கதற கதற பணப்பையை வழித்துக் கொண்டு விடும். இரண்டாம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். விதியோடு விளையாடுவானேன்?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...