மோசடிகளின் காலம்!
இது
கலி காலம் என்று சொல்வதை விட மோசடிகளின் காலம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. மோசடிகளில்
சிக்காமல் மோட்சம் பெறுவது எப்படி? என்று புத்தகம் போட்டால் அநியாயத்துக்கு விற்றுத்
தீரும். மோட்சம் பெறுவதிலும் மோசடிகள் உருவாகி விட்ட காலத்தில் மோசடிகளிலிருந்து தப்பித்துக்
கொள்வதற்கே ரொம்ப பெரிய சாமர்த்தியம் வேண்டும் போலிருக்கிறது.
பெரும்பாலான
மோசடிகளைப் பொருத்த வரையில் அவை மக்களாகவே கொண்டு போய் தலையைக் கொடுத்துக் கொள்ளும்
வகையினதாகவே இருக்கின்றன.
இது
தீபாவளி நேரம். சந்தோசமாகக் கொண்டாட வேண்டிய நேரத்தில் நீங்கள் கவலையோடு அமர்ந்திருந்தால்
நீங்கள் தீபாவளி சீட்டுப் போட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வங்கி, அஞ்சலகம் போன்றவற்றில்
தொடர் வைப்பு எனும் Recurrence Deposit (R.D) இருக்கையில் இது போன்ற சீட்டுகள் பக்கமே
போக வேண்டியதில்லை. ஒருவேளை தீபாவளிச் சீட்டுப் போட்டு எதுவும் கை நழுவிப் போயிருந்தால்
அது போன்ற முயற்சிகளை இந்தத் தீபாவளியோடு தலைமுழுகிவிட்டு, தொலையட்டும் அந்த நரகாசுரன்
என்று இனி வரும் தீபாவளிகளிலாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களையும் எச்சரிக்கையாக
இருக்கச் செய்யுங்கள்.
அடுத்த
செய்தி கைபேசி வைத்திருப்பவர்களுக்கானது. அதிலும் கைபேசியிலேயே சலகவிதமான பணப் பரிவர்த்தனைகளையும்
செய்பவர்களுக்கானது.
அலைபேசி
பண பரிவர்த்தனைகளில் நாம் பணம் அனுப்புவதற்குத்தான் ஆறிலக்க அல்லது நான்கிலக்க கடவு
எண்ணைத் (PIN Number) தர வேண்டுமே தவிர, நாம் பணத்தைப் பெறுவதற்கு எதையும் தர வேண்டியதில்லை.
பணத்தைப் பெறுவதற்கு கடவு எண்ணைத் தந்தால் உங்கள் பணம்தான் வெளியே போகுமே தவிர, உங்களுக்குப்
பணம் வராது. மோசடியாளர்கள் இந்த இடத்தை நுட்பமாகப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் கணக்கிற்குப்
பணம் வேண்டுமானால் உங்கள் ரகசிய கடவு எண்ணை இடுங்கள் என்கிறார்கள். நீங்கள் உங்கள்
கடவு எண்ணைப் பதிவிட்டால் உங்கள் கணக்கிலிருந்து அவர்கள் கணக்கிற்குப் பணம் போய் விடும்.
அடுத்த
செய்தி வீட்டுமனை வாங்குவதற்காக முண்டி அடித்துக் கொள்பவர்களுக்கானது.
வீட்டு
மனைகள் வாங்குவதென்றால்நம்மவர்களுக்கு அடங்காத ஆசை இருக்கிறது. பல நேரங்களில் எந்த
விதமான விசாரணையும் இன்றி வாங்கி விட்டு, பின்னர் ஒரு பெரிய விசாரணை வளையத்திற்குள்
சிக்கிக் கொள்வார்கள். குறிப்பாகப் புறம்போக்கு நிலங்களையும் வீட்டு மனைகளாகப் போட்டு
வாங்குபவர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். போகப் போகத்தான் அது புறம்போக்கு இடம்
என்பதே வாங்கியவர்களுக்குத் தெரிய வரும். பிறகுதான் வில்லங்கம், சிக்கல், பிரச்சனை
எல்லாம் ஆரம்பமாகும். இந்த இடம்தான் நீங்கள் விசாரணை வளையத்திற்குள் வரும் இடம். இந்த
இடத்திற்குள் வராமல் வீட்டு மனை வாங்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைகளைப்
பார்த்த உடன் அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஆசைப்படாமல் கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து,
பட்டா, சிட்டா, அடங்கல் எல்லாம் பார்த்து விட்டு கொஞ்சம் இதற்கென இருக்கும் வழக்கறிஞர்களிடம்
சட்டப்பூர்வ அபிப்ராயத்தைக் கேட்டு விட்டுச்
செய்தால் பிரச்சனைகள் இருக்காது.
இப்போது
இந்த மூன்று சம்பவங்களையும் எடுத்துக் கொள்ளுங்களேன். மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
பணம்தான் அந்தத் தொடர்பு. பணத்தைப் பயன்படுத்திதான் எவ்வளவு மோசடிகள். ஆக உங்களைச்
சீட்டுப் போட வைத்து ஏமாற்றலாம், அலைபேசி பணபரிவர்த்தனைகளில் ஆசையைத் தூண்டி ஏமாற்றலாம்,
வீட்டு மனை விற்பதில் ஏமாற்றலாம்.
இனி
வரும் காலத்தில் ஏமாற்றுவதும், ஏமாறாமல் இருப்பதும் பெரிய கலையாக ஆகி விடும் போலிருக்கிறது.
காலந்தோறும் கலைகளில் விற்பன்னர்கள் உருவாகிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment