23 Sept 2024

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

ஆ. மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்!

மனித மனதின் பூடகம் புரிந்து கொள்ள முடியாதது. வெளித்தோற்றம் சில கண்ணோட்டங்களை மனதுக்கு வழங்குகிறது. அந்தக் கண்ணோட்டத்தின்படித்தான் வாழ்க்கையின் போக்குகள் நகரும் என்று நினைக்கையில் அந்தக் கண்ணோட்டத்தை உடைத்துக் கொண்டு நகர்கின்றது வாழ்க்கை.

மனதின் கணிப்புகள், வாழ்க்கையின் போக்குகள் என்ற இந்த இரண்டுமே எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பது யாராலும் கணிக்க முடியாதவை. இந்தக் கணிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமையே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் தனித்துவமாக்குகிறது. இன்னும் எத்தனை கோடி மனிதர்கள் இந்தப் பூமியில் பிறந்து வாழ்ந்தாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனித்துவமாகவே இருக்கும். ஒவ்வொரு மனிதரின் வாழ்வும் ஒரு தனிக் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும்.

வாழ்க்கை எந்தப் புள்ளியில் எப்படி திசை மாறும்? திசை மாறும் புள்ளிகளில் மனம் எப்படி அதற்குப் பிரதிவினை புரியும்? இவ்விரு மர்ம முடிச்சுகளும் வாழ்க்கையையும் மனதையும் ஒரு நிச்சயமற்ற போக்கிலேயே வைக்கின்றன.

நிச்சயமாக இப்படித்தான் நிகழும் என்பதற்கு ஒரே ஒரு சாத்தியக்கூறுதான் இருக்கின்றது. நிச்சயமற்ற போக்குக்குக் கற்பித்துக் கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகளைத் தாண்டியும் எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

பலவித சாத்தியக்கூறுகளின் வழியே சுழித்துக் கொண்டோடும் வாழ்க்கையும் மனதும் எப்போதும் ரகசியமும் புதிர்த்தன்மையும் கொண்டவை. அந்தப் புதிர்த்தன்மையைப் படைப்புகள் விடுவிக்க முயல்கின்றன. ஒரு நல்ல படைப்பு அந்தப் புதிர்த்தன்மையை விடுவிக்கும் முயற்சியில் அக்கறையோடு ஈடுபட்டு அதற்கான பொறுப்பை வாசகரிடம் ஒப்படைத்து விடுகின்றது. ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ அப்படிப்பட்ட ஒரு படைப்பு.

குருஸ்வாமி என்கிற சாமியப்பா ஒரு தனிக் கட்டை. குடும்ப வாழ்க்கை முடிவுக்கு வந்தப் பிறகு எஞ்சிய சொத்தோடும் கோயிலோடும் புத்தக வாசிப்போடும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எல்லாரையும் போலத்தான் கல்யாணமாகிறது. முதலிரண்டு பிரசவங்களில் பிள்ளைகளைப் பறிகொடுத்த மனைவி சுப்புலட்சுமி மூன்றாவது பிரசவத்தில் பிள்ளையோடு சேர்ந்து அவளும் மரணித்துப் போகிறாள். இப்போது ஐம்பதை நெருங்கும் வயதில் தோப்புவிளையில் தனி மனிதனாக வாழ்க்கை தேவி பக்தர் குருஸ்வாமிக்கு.

குருஸ்வாமியின் முன்னோர்கள் ஆண்டு அனுபவித்தவர்கள். அத்துடன் பெண் பித்தர்கள். பாட்டனார் ஒழித்த சொத்தில் மிச்சமிருந்ததை அப்பா ஆனந்தரங்கம் பிள்ளை குருஸ்வாமி தலையெடுப்பதற்குள் முக்கால்வாசி காலி பண்ணி விடுகிறார். இது எல்லாவற்றுக்கும் மாற்றாக ஓர் அவதாரம் போல வாழ்கிறார் குருஸ்வாமி. இப்போது தென்னை மரங்களும், ஓலைக் குடிசைகளின் வாடகை வருமானமும்தான் வாழ்க்கை என்றாகும் போது, அவரது முன்னோர்கள் ஆண்டு அனுபவித்து எஞ்சிய சொத்தில் தோப்புவிளை என்ற ஊரில் நான்கு பேருக்கும் உபகாரமாக வாழ்கிறார். இந்த அவதார மற்றும் உபகார வாழ்க்கையைத்தான் இறுதியில் கேள்விக்கு உட்படுத்துகிறார் மாதவன்.

வாசிப்பும் ஆன்மீகமுமாகக் கலந்து ஓவியங்களையும் சிற்பங்களையும் ரசிப்பதுமாகக் குருஸ்வாமியின் வாழ்க்கை உருண்டோடிக் கொண்டு இருக்கிறது. அவருடைய வாழ்க்கையோடு இணையும் பாத்திரங்களைச் சுற்றி நாவல் நகர்கிறது. வேலைக்காரி பார்வதி, ஆர்டிஸ்ட் ரவி, கேசு நாயரின் மகன் வேலப்பன், ஈயம் பூசும் மற்றும் கூலி வேலை பார்க்கும் பப்பன், பாட்டு பாடும் பாகவதர் வெங்கு எனும் வெங்கிடாசலம், வேலப்பனைக் கட்டிக் கொள்ளும் ராணி – இப்படிப் பாத்திரங்கள் குருஸ்வாமியின் வாழ்க்கையில் வந்து சேர்க்கின்றன. இந்தப் பாத்திரங்கள் எல்லாருக்கும் ஆதர்சமான மனிதராகத்தான் இருக்கிறார் குருஸ்வாமி. அந்த ஆதர்சமே ஆர்டிஸ்ட் ரவியைக் குருஸ்வாமியைப் பரமஹம்சரைப் போல பார்க்க வைத்து, ஓவியமாகத் தீட்ட வைக்கிறது. அந்த ஓவியத்தில் நரையில்லாத தாடியோடு, ஒளி சிந்தும் கண்களோடு ஆன்மீகப் புருஷராகவே தோற்றமளிக்கிறார்.

சிறுவனாகப் பாடத்தையும் பொறுப்புணர்வையும் கற்றுக் கொள்ள வந்த வேலப்பனை அவன் போக்கில் சுதந்திரமாக வளர விடுகிறார் குருஸ்வாமி. ஒரு நாயரின் மகன் என்றாலும் அவனுக்கோ மாடுகளைப் பார்த்துக் கொள்வதிலும், பால் கறந்து கொடுப்பதிலும் அலாதி ஆர்வம். அந்த ஆர்வத்திற்கேற்ப கறவையாள் நெட்டை சங்கரன் பால் கறப்பதிலும் மாடுகளைப் பார்த்துக் கொள்வதிலும் வேலப்பனை வல்லவராக்கி விடுகிறார். அவனுடைய ஆர்வத்திற்கேற்ப தனது நண்பன் தாஸ் குடும்பத்தின் பால் சொசைட்டியில் வேலைக்கும் சேர்த்து விடுகிறார் குருஸ்வாமி. ‘நாயர்மார்கள் இலையை விற்றுத் தின்றாலும், சொரணையை விற்றுத் திங்க மாட்டார்கள்’ எனும் கொள்கை உடைய கேசு நாயர் பால் கறந்துக் கொடுத்துச் சம்பாதிக்கும் மகன் வேலப்பனைப் பிடிக்காமல் ஒரு நாள் காணாமலும் போகிறார்.

வேலப்பன் தாஸ் குடும்பத்தின் ராணியைக் காதலிக்கும் போது அந்தக் காதலையும் சாமர்த்தியமாகச் சேர்த்து வைத்து, திருமணத்தில் முடித்து வைக்கிறார் குருஸ்வாமி. வேலப்பனின் குழந்தையையும் பேரப் பிள்ளையைப் போலப் பார்த்து மனம் திளைக்கிறார்.

வேலப்பன் ஊர்த் தொழிலாளர்கள் ஆரம்பிக்கும் பால் சொசைட்டியில் வேலைக்குச் சேர்ந்து, அதில் பங்குதாரராகவும் பின்பு அதன் சங்கத்தில் முக்கிய பொறுப்பாளியாகிறான். அத்துடன் குடிகாரனாகவும் முரட்டுத்தனம் மிகுந்தவனாகவும் மாறுகிறான். அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்த குருஸ்வாமியை அல்பத்தனமாக நோக்க ஆரம்பிக்கிறான். ஒரு கலவரத்தில் குருஸ்வாமி கல்லடிப் பட்டு காயம் படுகிறார். அந்தக் கல்லை எறிந்தது வேலப்பனாகவும் இருக்கலாம். வேலப்பனை நம்பி வந்த ராணியின் வாழ்க்கை அதிலிருந்து தடம் புரளத் துவங்குகிறது.

போராட்டங்களில் உக்கிரமாகக் கலந்து கொள்ளும் வேலப்பன், ஒரு போராட்டத்தில் போலீஸ்காரரைக் கொல்ல முயற்சித்த வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாமல் சிறையில் அடைக்கப்படுகிறான். குருஸ்வாமி நினைத்தால் ஜாமீனில் கொண்டு வர முடியும் என்ற நிலை ஏற்படுகிறது.

அதே நேரத்தில் ஆன்மீகத்தில் திளைத்த குருஸ்வாமியின் மனதில் ராணியின் மேல் ஒரு சிருங்கார நாட்டம் உண்டாவது நாவலின் திருப்பம். அதுவரை இருந்த தாடியை எடுத்து விட்டு ராணியை நாடுவதில் மனம் மொத்தத்தையும் குவிக்கிறார் குருஸ்வாமி. வேறு வழியில்லாமல் கணவனை வெளியே கொண்டு வருவதற்காக அதற்கும் ராணி இசைகிறாள். ராணி இசைந்துவரும் அந்த இடத்தில் குருஸ்வாமி எனும் சாமியப்பா எடுக்கும் முடிவுடன் நாவல் முடிகிறது. ஆர்டிஸ்ட் ரவி வரைந்து வைத்த தாடியுடன் கூடிய குருஸ்வாமியின் ஓவியத்தை நம்பிக்கையுடன் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ராணி. வேலப்பனை மீட்டுக் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்படுகிறார் குருஸ்வாமி. ஆன்மீகத்தில் அமைதியைத் தேடி, அது காமத்திற்குத் திரும்பி, பின்பு அதையும் மறுத்து விட்டு புறப்படுகிறார்.

அவர் புறப்படுவது வேலப்பனை மீட்பதற்காகவும் இருக்கலாம் அல்லது இதுவரை வாழ்ந்து வந்த ஆன்மிக வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் சகலத்தையும் துறந்து விட்ட சாமியார் வாழ்க்கையை நோக்கியதாகவும் இருக்கலாம். இதற்கு மாறாக வேலப்பனை மீட்டுக் கொண்டு வந்து ராணியுடன் சேர்த்து வைத்து அவனது சம்சாரி வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதாகவும் இருக்கலாம். குருஸ்வாமி புறப்படுவதில் ஒரு திடமான முடிவு தொனிக்கவே செய்கிறது. அந்த முடிவு அவர் மட்டுமே அறிந்த முடிவு. அவர் காலத்தின் ஒவ்வொரு நொடியாகப் பயணிக்கிறார். எந்த நொடியில் மனம் எப்படி மாறும் என்பது யாருக்குத் தெரியும்? அந்த மாற்றத்தை வாசக மனதில் வாசிக்க விட்டு விடுகிறார் மாதவன்.

*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...