28 Sept 2024

மகிழ்ச்சியோடு இருக்கும் கலை! The Art of Living Happiness!

நம் முன்னோர்களின் மகிழ்ச்சி ரகசியம்!

மகிழ்ச்சியான மக்களுக்கும் மகிழ்ச்சியற்ற மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் என்ன?

இரு வகை மனிதர்களும் மனிதர்கள்தானே. இந்த இரு வகை மக்களிடம் அப்படியென்ன பிரமாதான வேறுபாடு இருந்து விடப்போகிறது என்று நினைக்கிறீர்களா?

விசயம் அப்படியில்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது.

அது என்னவென்றால்,

மகிழ்ச்சியான மக்கள் தங்களிடம் இருப்பவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர்.

மகிழ்ச்சியற்ற மக்கள் தங்களிடம் இல்லாதவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர்.

இந்த வேறுபாட்டை நீங்கள் எப்போதாவது அவதானித்திருக்கிறீர்களா?

யோசித்துப் பார்த்தால் இது சரிதான் என்று தோன்றுகிறது.

இதனால்தான் நம் முன்னோர்கள் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றார்கள். இருப்பதில் மகிழ்ச்சி கொள் என்றார்கள்.

எனக்கு அறிவுரை சொன்ன மூத்தோர்கள் பலரும் எதையும் சிறிய அளவில் தொடங்கு என்றார்கள். உதாரணமாக அவர்கள் எப்போதும் வீடு கட்டுவதைப் பற்றிப் பேசும் போது, சிறுகக் கட்டிப் பெருக வாழ் என்பார்கள்.

அவர்களின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மிக பிரமாண்டமாக வீடுகளைக் கட்டி அடுத்தத் தலைமுறையில் அவை சிதிலமான வரலாற்றையும் நேரடியாகக் காட்டினார்கள்.

எளிமையாக வாழ் எனபதும் அவர்களின் முக்கியமான உபதேசம். எளிமையான வாழ்க்கையில் இயல்பாக இருப்பதில் நிறைவு கொள்ளும் மனநிலை வந்து விடும்.

மனநிறைவு என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதை நம் முன்னோர்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும் என்ற வேட்கையோடு எழுந்திருப்பதையும், நாளின் முடிவில் போதிய அளவு உழைத்து விட்டோம் என்று நிறைவோடு உறங்கச் செல்வதையும் வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

எவ்வளவு குறைவாகச் சம்பாதித்தாலும் அதில் பத்து விழுக்காட்டிற்குக் குறைவில்லாமல் சேமிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்கள்.

அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தது. அந்த ஒழுங்கு அவர்களின் மனதைக் கட்டுபாடாக வைத்திருந்தது. அந்தக் கட்டுபாட்டுக்குத் தெரியும், எவ்வளவு அவர்களுக்குத் தேவை என்பது. அந்தக் கட்டுபாட்டுக்குத் தெரியும் எந்த எல்லையைத் தாண்டக் கூடாது என்று.

இருப்பதில் கவனம் குவிப்பதற்கான ஒழுங்கை அவர்களுக்கு அந்தக் கட்டுபாடு கற்றுக் கொடுத்தது. அவர்கள் இருப்பதில் கவனம் செலுத்தினார்கள். இல்லாதவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இதுதான் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததன் ரகசியம். இந்த ரகசியத்தை ஏன் நீங்களும் கற்றுக் கொள்ளக் கூடாது? நீங்களும் ஏன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது?

*****

No comments:

Post a Comment

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்! இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள் ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம் அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கண...