2 Sept 2024

பூதங்கள் விழுங்க வரும் போது என்ன செய்வீர்கள்?

பூதங்கள் விழுங்க வரும் போது என்ன செய்வீர்கள்?

நீங்கள் அதை மறக்கலாம்

அது உங்களை மறக்க வேண்டுமே

காலத்தில் புதையுண்டு இருக்கும் ரகசியம்

ஒரு பொழுதில் வெடித்துக் கிளம்பும் போது

நீங்கள் மறந்து போனது

ஊரின் முச்சந்தியில் அம்பலத்தில் ஆடும்

ரகசியங்கள் புதைத்தால் முளைக்கும் விதைகள்

அப்போது ரகசிய கதை

உங்களை ஆழமாக முன்னகர்த்தும்

உங்கள் கதை வசனகர்த்தா பதவியை

ஒவ்வொருவரும் இயக்குவார்கள்

நீங்கள் விதவிதமாகப் பேசுவீர்கள்

விளக்கம் அளிப்பீர்கள்

பல கோணங்களில் நடிப்பீர்கள்

உங்களுக்கு மட்டும் அப்படி நடப்பதாக

நீங்கள் மருளலாம் ஆவேசம் கொள்ளலாம்

எது எப்படி நடந்தாலும்

எல்லாம் நடக்கும் படி

நடந்து கொண்டுதான் இருக்கிறது

உண்மையைச் சொல்வதற்கான வலிமையை

நீங்கள் தேடிக் கொண்டுதான் ஆக வேண்டும்

உண்மை முடித்து வைக்கும்

பொய் ஒரு போதும் முடிவுறாது

உணர்ச்சிகரமாக உலகை ஏமாற்ற முடியாது

முடிவில் வெளியாகும் ரகசியம்

உங்களை உணர்ச்சிகரமாகக் கொன்று விடும்

அது உங்களைப் பழி தீர்த்து விடும்

உங்களைப் பற்றிச் சரியாகப் பேசலாம்

தவறாகப் பேசலாம்

ஆனால் பேசாமல் இருக்க மாட்டார்கள்

அதிலிருந்து வெடித்துக் கிளம்பும் பூதம்

உங்களை விழுங்கி விடாமல்

பார்த்துக் கொள்வதற்கு

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்

உண்மை மட்டுமே முடித்து வைக்கும்

பொய்கள் ஒரு போதும் முடிவுறாது

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...