8 Aug 2024

கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் – ஓர் எளிய அறிமுகம்!

கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் – ஓர் எளிய அறிமுகம்!

கு.ப.ரா. எனப்படும் கு.ப.ராஜகோபாலன் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாகத் தமிழ் சிறுகதை உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர். தமிழ்ச் சிறுகதைகளை அமைப்பியல் ரீதியாகப் பல வகைகளில் சோதித்துப் பார்த்த முன்னோடிகளில் ஒருவர். மணிக்கொடி காலத்து எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

கு.ப.ரா. பிறந்தது 1902இல். இறந்தது. 1944இல். வாழ்ந்தது நாற்பத்தி இரண்டு சொச்சம் ஆண்டுகள். இதில் அவர் எழுதியது கடைசி பத்தாண்டுகள் மட்டுமே. அதாவது 1934 தொடங்கி 1944 வரையிலான பத்தாண்டுகள். பத்தாண்டு காலத்தில் நூற்று சொச்சம் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். குறைந்த பாத்திரங்கள், இயல்பான சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு எளிமையான பின்னணியில் கு.ப.ரா. புனைந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானவை.

அவரது முதல் சிறுகதை விசாலாட்சி. இறுதி சிறுகதை மோகனச் சிரிப்பு.

குடும்பப் பாங்கான உரையாடல்களோடு இவர் கதை பின்னும் அழகானது எதார்த்தத்திற்கு அருகில் இருக்கக் கூடியது. கதைகளின் ஊடே அவரும் ஒரு பாத்திரமாகிச் சொல்லும் கதைகள் அதிகம். பெரும்பாலான கு.ப.ரா.வின் சிறுகதைகள் ஆண் – பெண் உறவின் அந்தரங்க உணர்வுகளைத் துணிந்து பேசக் கூடியவை.

கனகாம்பரம், விடியுமா?, சிறிது வெளிச்சம், ஆற்றாமை போன்ற சிறுகதைகள் கு.ப.ரா.வின் முத்திரைக் கதைகள் எனலாம்.

கணவனைத் தவிர மற்ற ஆண்களை எப்படி ஒரு மனைவி குடும்பப் பாங்கான பெண்ணாக அதன் அமைப்புக் குழையாமலும் அதே நேரத்தில் காலத்திற்கேற்ற நவீனத்திற்குப் பொருந்தும் வகையிலும் எதிர்கொள்வதில் நேரும் சிக்கல்தான் கனகாம்பரம் என்ற சிறுகதையின் சாராம்சம். குடும்ப அமைப்புக்குள் நுழைந்து விட்ட பிறகும், குடும்பப் பெண் என்ற நிலையை எட்டி விட்ட பிறகும் ஒரு பெண் ஆணை எதிர்கொள்வது குறித்த சிக்கல்களும் முடிச்சுகளும் இன்றைய நவீன காலத்திலும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே இருக்கிறது. அந்தச் சிக்கலைத்தான் கு.ப.ரா. இந்தக் கதையின் மூலமாக மூன்றே மூன்று பாத்திரங்களைக் கொண்டு பேசுகிறார். கணவன், மனைவி, கணவனின் நண்பன் என்ற மூன்றே பாத்திரங்களுக்குள் இந்தக் கதை உண்டாக்கும் வீச்சும் பேச்சும் ஆழமானவை மற்றும் நுட்பமானவை. ஒரு பெண் தனியாக இருக்கும் போது வீட்டிற்கு வரும் ஆடவரை எப்படித்தான் எதிர்கொள்வது என்ற தனித்துவமான கதை முடிச்சின் மூலமாக இச்சிறுகதையில் கு.ப.ரா. காட்டும் வாழ்வியல் சிடுக்கு எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

கு.ப.ரா.வின் சிறுகதை மேதைமைக்குச் சான்றாக விளங்கக் கூடிய சிறுகதை என்று ‘விடியுமா?’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். ஒரு தந்தி ஏற்படுத்தும் அச்சத்தையும் சலனத்தையும் அதைத் தொடர்ந்து நிகழும் ரயில் பயணத்தையும் அவ்வளவு அற்புதமாக இச்சிறுகதையில் காட்சிபடுத்தியிருக்கிறார் கு.ப.ரா. தற்காலத்தில் சொல்வதென்றால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் நிலையைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையும் உணர்வு நிலையும் எப்படி இருக்கும் என்பதைத்தான் இச்சிறுகதை பேசுகிறது. மனித மனங்களின் உணர்வு நிலைகள் காலந்தோறும் மாறாமல் அப்படியேத்தான் இருக்கின்றன என்பதை இச்சிறுகதை எடுத்துக் காட்டுகிறது எனலாம். விடியுமா என்ற கேள்வியில் ஒரு தவிப்பு இருந்தாலும் ஒவ்வொரு இரவும் விடிந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு மத்தியில் ஒரு அவசரச் செய்தியின் நிமித்தம் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போது அந்த விடியல் எதிர்பார்ப்பிற்கேற்றாற் போல விடியுமா? எதிர்பார்ப்பிற்கு மாறாக விடியுமா? என்ற தகிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்தத் தவிப்பும் தகிப்பும்தான் ‘விடியுமா?’ என்ற இந்தச் சிறுகதையை ஒரு பதைபதைப்போடு வாசிக்க வைக்கிறது. எதிர்பார்ப்பிற்கு மாறாகத்தான் கு.ப.ரா.வின் சிறுகதையில் அந்த விடியல் விடிகிறது. ஆனாலும் விடிந்து விடுகிறது. இந்த விடியலில் எதை அது ஒளித்து வைத்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தி விட்டு அது விடிந்து விடுகிறது. இந்தக் கதை முடிவில் துக்கச் செய்தி சொல்லி முடிகிறது. ஒருவேளை அந்த இரவு விடியாமல் அவர்களின் ரயில் பயணம் நீண்டு கொண்டே இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் வாசிப்போருக்கு ஏற்படத்தான் செய்கிறது. அவர்கள் ரயில் பயணத்திற்குக் கிளம்புவதிலிருந்து ரயில் பயணம் நிகழ்வது வரையில் எல்லாம் நல்ல சகுனங்களாகவே, நற்சம்பவங்களாகவே அமைகின்றன. முடிவுதான் ஓர் அதிர்ச்சியைத் தந்து முடிகிறது. அப்படியெல்லாம் நடக்காது என்பதற்குக் கட்டியம் கூறிய சகுனங்களும் சம்பவங்களும் விடியலின் முடிவில் ஏமாற்றம் தருவது இந்தச் சிறுகதைக்கு துயரம் நிறைந்த ஒரு காவியத் தன்மையைத் தருகிறது.

கு.ப.ரா.வின் அசர அடிக்கும் சிறுகதைகளில் ஒன்று ‘சிறிது வெளிச்சம்’. இந்தக் கதையிலும் மூன்று பாத்திரங்கள் என்ற உத்தியைக் கையாண்டிருக்கிறார். அந்த மூன்று பாத்திரங்களும் மூன்று பெரும் உலகங்களைக் காட்டக் கூடியவை. கணவன், மனைவி, ஓர் அந்நிய ஆண் என்ற கண்ணியில் கு.ப.ரா. பின்னியிருக்கும் இச்சிறுகதை காலம் கடந்தும் பல கேள்விகளைக் கேட்கக் கூடியவை. கணவன் மனைவி பிரச்சனையில் அந்த வீட்டில் குடியிருக்கும் ஓர் ஆண் தலையிடும் போது ஏற்படும் பிரச்சனைதான் இந்தக் கதையின் மையம். கணவன் மனைவி பிரச்சனைக்குள் அந்நியர் ஒருவர் எந்த அளவுக்கு உள்ளே நுழைவது, சரி செய்வது என்பது பற்றிய கதை இது. மனைவிக்குப் பரிந்து ஓர் அந்நிய ஆண் பேசும் போது கணவரின் மனம் அதை எப்படி எதிர்கொள்ளும்? ஆணுக்குள் இயல்பாக நிறைந்திருக்கும் ஆணாதிக்க மனோபாவமும், இயல்பாக பெண்ணுக்குள் நிறைக்கப்பட்டிருக்கும் பெண்ணடிமை மனோபாவமும் அப்போது எப்படி எதிர்வினை ஆற்றும்? மனிதாபிமானத்தோடு பெண்ணுக்காக ஓர் ஆண் செய்யக் கூடியதுதான் என்ன? அப்படி மனிதாபிமானத்தோடு செய்ய நினைத்ததைச் செய்யத்தான் முடியுமா? நாம் கட்டமைத்து வைத்திருக்கும் சமூகச் சூழல்கள் அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்குமா? என்று பல கேள்விகள் இச்சிறுகதையை வாசித்து முடிக்கையில் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு முற்போக்கான தளத்தில் நின்று கு.ப.ரா. இச்சிறுகதையைப் படைக்கிறார்.

‘ஆற்றாமை’ கு.ப.ரா.வின் தேர்ந்த கதைகளில் ஒன்று. ஒரு சிறுகதையின் கட்டமைப்பை நடுநிலையோடு அமைக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் கூறும் கதை என்றும் சொல்லலாம். ஒரு கதாபாத்திரத்தை எதிர்மறையாகக் கட்டமைக்காமல் அதற்கான பின்னணியையும் மன கிலேசங்களையும் விடுவிக்கும் கதை. கணவனைப் பிரிந்திருக்கும் பெண்ணொருத்தி. கணவனோடு இளமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்ணொருத்தி. இயல்பாகவேப் பிரிவிலிருக்கும் பெண்ணுக்குக் கணவரோடு இணைந்திருக்கும் பெண் மீது பொறாமை ஏற்படத்தானே செய்யும். அந்தப் பொறாமையை மையமாகக் கொண்டு ‘பொறாமை’ என்ற தலைப்பிலேயே இச்சிறுகதையை எழுதியிருக்கிறார் கு.ப.ரா. அந்தத் தலைப்பை மாற்றி ‘ஆற்றாமை’ என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு. ஆற்றாமை என்ற தலைப்பே இச்சிறுகதையை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு பொய் விடுகிறது. பொறாமை என்ற தலைப்பு இச்சிறுகதையைச் சாதாரணமாகத்தான் கருத வைத்திருக்கும். கணவனோடு இணைந்திருக்கும் பொழுதில் அவளைப் பழி தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது, பிரிந்திருக்கும் பெண்ணுக்கு. அந்தப் பழி தீர்த்தலையும் செய்து விடுகிறாள் பிரிந்திருக்கும் பெண். முடிவில் அவள் மனம் பாடுபடுகிறது. என்ன காரியம் செய்தேன் என்று கலங்குகிறாள். அவள் கலங்கும் போது அந்தப் பெண் மீதும் நமக்கு ஓர் இரக்கம் பிறக்கத்தான் செய்கிறது. கு.ப.ரா.வின் தேர்ந்த சிறுகதை படைப்புக்கு அதுவே சான்றாக அமைகிறது.

இப்படி அவரின் ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். வாசிப்போருக்கு இடம் விட்டு அவரின் மற்ற கதைகளை வாசிப்பதற்கு இந்த அறிமுகமே போதுமானது. மற்ற அவரது கவனிக்க தக்க ஒரு சில சிறுகதைகள் குறித்த தகவல்களோடு இவ்வறிமுகத்தை முடித்துக் கொள்வது நலமானது.

‘பெண் மனம்’, ‘திரை’ போன்ற சிறுகதைகள் கு.ப.ரா.வின் கதைப் பின்னலுக்கும் எழுத்துச் சாகசத்துக்கும் கட்டியம் கூறுபவை. குடும்ப உறவுகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது போன்ற தோற்றம் தரும் அவரது கதைகளில் அதைத் தாண்டியும் வெளிப்படும் பெண் மனதின் விநோதங்கள் வாசகர்களை ஒரு புதிய உலகத்தை நோக்கித் தள்ளுபவை.

பிராமணக் குடும்பங்களின் வழியே கதை சொல்லும் பாணி கு.ப.ரா.வினுடையது. பிற வகுப்பினர்களையும் அக்காலப் பின்னணியில் நுட்பமாக நோக்கி ‘அடிமைப் பயல்’, ‘பண்ணைச் செங்கான்’, ‘மின்னக்கலை’, ‘வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகளில் பதிவு செய்துள்ளார்.

பாரதியின் கவிதை வரிகளால் தாக்கம் பெற்று அவ்வரிகளையே தலைப்புகளாகக் கொண்டு ‘நினைவு முகம் மறக்கலாமோ?’, ‘மனம் வெளுக்க’ ஆகிய தலைப்புகளிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். பாரதியின் வரிகளில் தாக்கம் பெற்ற வகையில் ‘காதலே சாதல்’ என்ற தலைப்பிலும் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.

வரலாற்றுப் பின்னணியில் அவர் எழுதிய ‘இருளிலிருந்து’, ‘ஆமிரபாலி’, ‘விபரீதக் காதல்’, ‘கவி வேண்டிய பரிசு’ போன்ற சிறுகதைகளிலும் மனித உணர்வுகளின் நுட்பத்தை அவ்வளவு அழகாகப் படம் பிடித்துள்ளார்.

வரலாற்றுப் பின்புலத்தில் எழுதப்பட்ட கு.ப.ரா.வின் ஒரு சில சிறுகதைகள் இந்து தர்மம், இந்து ராஜ்ஜியம் எனும் கருத்துகளை உயர்த்திப் பிடிப்பவைப் போலத் தோற்றம் தருபவையாக இருப்பதை மறுக்க முடியாது. அச்சிறுகதைகளை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை வாசிப்பவர்களே யோசித்து ஒரு முடிவுக்கு வருவதே சரியாக இருக்கும்.

தி.ஜானகிராமன் மற்றும் நாராயணசாமி ஆகியோருக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் அமைந்த எழுத்து கு.ப.ரா.வினுடையது. மோகமுள் நாவலில் தி.ஜானகிராமன் கு.ப.ரா.வை ஆகப் பெரிய ஆகிருதி என்று பாராட்டியிருப்பார். கரிச்சான் என்ற கு.ப.ரா.வின் புனைப்பெயரையே கரிச்சான் குஞ்சு என தனது புனைப்பெயராக நாராயணசாமி வைத்துக் கொண்டார்.

மணிக்கொடி கால எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி ஆகியோரின் சிறுகதைகள் ஒரு புதிய சிறுகதை உலகிற்கு எப்போதும் வழிகாட்டுபவை. காலங்கள் கடந்தாலும் கதைக்கான புதுமைத் தன்மை குன்றாது ஒளி காட்டுபவை. கட்டமைப்பிலும் புலப்பாட்டிலும் வாசிப்போருக்கு புதுப்புது பாடங்களையும் நுட்பங்களையும் சொல்லக் கூடியவை. எத்தனை முறை வாசித்தாலும் கலைடாஸ்கோப் போல புதுப்புது காட்சிச் சித்திரங்களை உருவாக்கிக் காட்டக் கூடியவை. அதிலும் ஆண் பெண் உறவுகளின் கலைடாஸ்கோப் என்றே கு.ப.ரா.வின் சிறுகதைகளைக் குறிப்பிடலாம். மூன்று பட்டகங்களால் ஆன கலைடாஸ்கோப் போலவே மூன்று பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கும் அவரது அநேக சிறுகதைகளில் கலைடாஸ்கோப்பின் அத்தனை விசித்திரங்களையும் காணலாம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...