5 Aug 2024

ஆப்களில் ஆட்டம் போட வேண்டாம்!

ஆப்களில் ஆட்டம் போட வேண்டாம்!

இன்று எத்தனையோ சூதாட்டங்கள் வந்து விட்டன. ஆன்லைன் ரம்மி ஆப்கள், கிரிக்கெட் கணிப்பு ஆப்கள் என்று தினம் தினம் வந்து கொண்டிருக்கும் சூதாட்ட ஆப்களுக்குக் கணக்கு இல்லை.

இந்தியாவில் இப்படி மூன்று கோடி பேர் சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். இவர்களில் தொண்ணூறு சதவீதம் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிப்புகளின் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தக் கணிப்புகளைச் சரியாகச் செய்வதன் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியுமா என்பதன் வடிவம்தான் இந்த சூதாட்ட ஈர்ப்புகள்.

உங்கள் கணிப்புகள் சரியாக இருந்தால் நீங்கள் சூதாட்டத்தில் பணம் பண்ணலாம். தவறாகப் போய் விட்டால் இருக்கின்ற பணத்தையும் இழந்து இன்னும் கடன்காரர்களாக ஆகலாம்.

அந்தக் காலத்திலிருந்து ஏதோ ஒரு வடிவில் சூதாட்டம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு – புலி ஆட்டம், சீட்டாட்டம் என்ற இருந்த அதன் வடிவங்கள் இன்று தொழில்நுட்ப வடிவங்களுக்கு மாறியிருக்கின்றன.

அப்போது கட்ட வேண்டியவர்களுக்கு மாமூல் கட்டி விட்டு இந்தச் சூதாட்டங்களை ஆடிக் கொண்டிருந்தார்கள். இப்போது அரசாங்கத்திற்கு முறையாக வரியைக் கட்டி விட்டு சூதாட்டத்தை உருவாக்கும் நிறுவனங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

சூதாட்டங்களில் ஆரம்பத்தில் கிடைக்கும் வெற்றி உங்களது தன்னம்பிக்கையை அதிகமாக்கும். தோற்று பணத்தை இழக்கும் போதும் எப்படியும் பணத்தை மீட்டு விட முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்த விளையாட்டுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். நீங்களே வேண்டாம் என்று நிறுத்த நினைத்தாலும் நிறுத்த முடியாத ஒரு நிலைக்கு உங்களைக் கொண்டு சென்று விடுவதுதான் இந்தச் சூதாட்டத்தின் சூட்சமம் எனலாம்.

ஒருவேளை மிகுந்த மன உறுதியோடு நீங்கள் சூதாட்டத்தை விட நினைத்தாலும் எதையோ இழந்து விட்டது போன்ற வெறுமையை உணர்வீர்கள். உங்களை அந்த அளவுக்கு அடிமைத்தனத்திற்குள் ஆழ்த்தக் கூடியன சூதாட்டங்கள்.

ஒரு கட்டத்தில் உங்கள் வேலை, தொழில், குடும்பம் என எல்லாவற்றையும் விட்டு விட்டு சூதாட்டத்தை முழு முதலாகக் கொண்டு அதில் இறங்கி விடுவீர்கள். ஒரு வேளை நீங்கள் சூதாட்டங்களில் ஜெயித்தாலும் உங்களால் வெளியேற முடியாது. விளையாடி விளையாடி தோற்று, தோற்று தோற்று இழந்த பணத்தை பிடிக்கிறேனா இல்லையா பார் என்று உங்களால் வெளியேறவே முடியாத அளவிற்கு அதனுள் சிக்கிக் கொள்வீர்கள்.

உங்கள் கையில் உள்ள பணத்தை இழந்த பின்னும் எப்படியும் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கியும் சூதாடுவீர்கள். சூதாட்ட வலைக்குள் விழுந்து விட்டால் அதிலிருந்து மீள்வது சாமான்யமில்லை. அதன் முடிவு பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கிறது.

சூதாட்டத்தில் ஈட்டியவர்களை விட இழந்தவர்கள் அதிகம். இழந்தவர்கள் என்றால் அதில் தன்னையே இழந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் திருவள்ளுவர் சூதைப் பற்றிக் குறிப்பிடும் போது,

“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.”                           (குறள், 931)

என்கிறார்.

இக்குறட்பாவில் திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், வென்றாலும் சூதை விரும்ப வேண்டாம் என்கிறார். ஏனென்றால் அப்படி விரும்புவது என்பது மீன் தூண்டிலில் இருக்கும் புழுவை விரும்புவது போன்றதாகும் என்கிறார்.

ஆகவே சூதை விரும்பாமல் இருப்பதே அதிலிருந்து தப்பிப்பதற்குச் சிறந்த வழியாகும்.

*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...