8 Jun 2024

கையில் இருக்கும் அநாவசியங்கள்!

 


உங்கள் கவனச் சிதறல்களைக் கவனித்துப் பாருங்கள்!

இன்றைய இணைய உலகம் மனிதர்களை மேம்போக்கானவர்களாக மாற்றி வருகிறது. இணையதளங்களும் சமூக ஊடகங்களும் மனிதர்களின் மனதை ஆக்கிரமித்து விட்டன. மனிதர்களின் உடலில் நிரம்பியிருக்கும் குருதியை விட, மனதில் நிரம்பியிருக்கும் நினைவுகளை விட சமூக ஊடக எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து விட்டன.

சமூக ஊடகங்களின் எண்ணிக்கை இன்று பெருகி விட்டன. பெரும்பாலானோர் முகநூல், கீச்சு, புலனம் இவற்றோடு சமூக ஊடகங்கள் முடிந்து விட்டது போல நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை முடிவில்லாமல் நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாகப் புதிது புதிதாகத் தோன்றிக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றன.

செயலிகளின் வடிவில் புதுப்புது விளையாட்டுகள், வேலைகளை எளிதாக்கும் உதவியாளர்கள், புதுப்புது தகவல்களைத் தரும் உலாவிகள் என்ற பெயரில் அவற்றோடு பழகி பழகி மனிதர்கள் மின்னணு உலகில் ஓர் அங்கமாக மாறிக் கொண்டிருக்கின்றனர். மனித வாழ்வின் ஒரு பகுதி மின்னணு பயன்பாடு என்பது அடித்து நொறுக்கப்பட்டு விட்டது. மனிதர்களின் நினைவுகளையும் கவனத்தையும் இணைக்கும் நரம்பு மண்டலம் செயலிழந்து அது மின்னணு அடிமை மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சதா சர்வ காலமும் சமூக ஊடகங்களில், மின்னணு உலகில் புழங்கிக் கிடக்கும் மனிதர்கள், சில நிமிடங்கள் ஏதேனும் புதிய செய்திக்கான அறிவிப்புகள் எனும் நோட்டிபிகேஷன்ஸ் வராவிட்டால் எதையோ இழந்தது போலக் காணப்படுகிறார்கள்.

சமூக ஊடகங்களிலிருந்தும் மின்னணு செயலிகளிலிருந்தும் சில மணி நேரம் அவர்களைப் பிரித்து வைத்தால் வாழ்க்கையில் எதையோ பறிகொடுத்தவர்கள் போல ஆகி விடுகிறார்கள். சமூக ஊடகங்களிலிருந்து அவர்களைப் பிரித்து வைக்க நினைப்பவர்களை விரோதிகளாகப் பார்க்கிறார்கள். அவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறார்கள்.

கல் தடுக்கிப் பிழைத்தவர்களும் உண்டு, புல் தடுக்கிச் செத்தவர்களும் உண்டு என்பார்கள். அத்துடன் சுயபடம் எனும் செல்பி எடுக்க முயன்று செத்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் அளவுக்கு மின்னணு உலகின் தாக்கம் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

தங்களைச் சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கிறார்கள், அதிகம் பின்தொடர்கிறார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மோகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மோகத்தைக் கொன்று விடு அல்லால் மூச்சினை நிறுத்தி விடு என்பாரே பாரதி. இந்தச் சமூக ஊடக மோகம் சமூகத்தவர்களைக் கொன்று கொண்டு இருக்கிறது.

இது போன்றவர்களால் சில மணி நேரங்கள் கூட தீவிரமாகக் கவனம் செலுத்தி எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சமூக ஊடகங்களில் எதையாவது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அதில் எதையாவது நோண்டிக் கொண்டே இருக்க வேண்டும், அதில் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே சுய சித்திரவதை செய்து கொள்வார்கள். நிலைமை அந்த அளவுக்கு முற்றி விட்டது.

இணையதள வளர்ச்சிக்கு முன்பாக மனிதர்கள் அந்நியமாவதற்குச் சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்கள் பல இருந்தன. ஆனால் இணையவளர்ச்சிக்குப் பின்பு மனிதர்கள் அந்நியமாவதற்குச் சமூக ஊடகங்களும் மின்னணு செயலிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

இணைய தளங்களும், சமூக ஊடகங்களும் மனிதர்களின் கவனச் சிதறலைப் பேரளவில் அதிகப்படுத்தி இருக்கின்றன. அவர்களின் ஆளுமைச் சிதைவை அதிகபடுத்தி வருகின்றன. இந்தச் சமூக ஊடகங்கள் இல்லாமலும் இன்றைய வாழ்க்கை இல்லை என்றாலும் அவற்றிலிருந்து சில மணி நேரங்களாவது விலகி இருப்பது ஒரு வேலையைக் கவனம் செலுத்திச் செய்ய அவசியமாக இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருப்பது போல, மௌன விரதம் இருப்பது போல, வாரத்திற்கு ஒரு நாளாவது, ஒரு நாளின் சில மணி நேரங்களாவது இணைய இணைப்புகளோ, சமூக ஊடகங்களின் தொடர்புகளோ, மின்னணு செயலிகளின் துணையோ இல்லாமல் இருக்க பழகிக் கொள்வது இனி வரும் மனித சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

எந்நேரமும் இணைய இணைப்புகளும் சமூக ஊடகங்களும் செயலிகளும் என்றால் அதற்கான ஆளுமைச் சிதைவையும் கவனச் சிதறல்களையும் மனிதர்கள் ஏற்றுக் கொண்டு எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இன்று மனிதர்களின் கையில் எல்லாம் இருக்கிறது. அவை இல்லாமல் எப்படி வாழ்வது என்பதைப் பழகிக் கொள்ள வேண்டிய அளவுக்கு கையில் இருப்பவை எல்லாம் அநாவசியமானதாக இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருந்தும் இல்லாமலிருக்க கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது, பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது, அதை ஓர் ஒழுக்கமாக ஏற்றுக்   கொள்ள வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...