7 Jun 2024

இன்னுமா நகல்?

 


அதென்ன அசல்? அதென்ன நகல்?

உங்களிடம் இருக்கும் ஆதார் அட்டை அசல். அதை புகைப்பட பதிலி அதாவது போட்டோ காப்பி எனும் செராக்ஸ் எடுத்தால் அது நகல்.

எப்போது எல்லார் கையிலும் அலைபேசி வந்தததோ அப்போதே பொது தொலைபேசி முனையங்கள் எனும் PCOக்கள் காலியாகி விட்டன.

ஆனால் இந்த செராக்ஸ் கடைகள் எனும் நகல் கடைகள்?

அதுதான் எல்லாம் இணைய தளத்திற்குள் சென்று விட்டன. எல்லாவற்றையும் இணைய இணைப்பில் இணைத்தாயிற்று.

உங்கள் ஆதார் அட்டையை, வருமான வரி அட்டையை, படிப்புச் சான்றிதழ்களை, பத்திரங்களை, நானாவித கணக்குகளை எல்லாம் இணைய இணைப்பில் இணைத்த பின்பும் இன்னும் நகல் கொடு அதாவது செராக்ஸ் கொடு என்றால் எப்படி?

உங்கள் வாடிக்கையாளர்களை அறியுங்கள் அதாவது கே.ஒய்.சி. என்ற பெயரில் அனைத்து விவரங்களையும் வங்கிகள் வருடத்திற்கு ஒரு முறை வாங்கிக் கொள்கின்றன. அதே ஆதார் எண், வருமான வரி எண், புகைப்படம் இவற்றை வாங்கிக் கொள்வதற்குப் பெயர் கே.ஒய்.சி.யாம். என்ன கருமாந்திரமோ? இந்தக் கருமாந்திரத்தைச் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கில் உங்கள் பணத்தை அங்கே இங்கே நகர்த்த அதாவது பரிமாற்றம் செய்ய முடியாது. உங்கள் பணத்தை நீங்களும் எடுக்க முடியாது.

கே.ஒய்.சி. செய்தாயிற்று. இப்போது எல்லாம் வங்கியின் தரவு சேமிப்பகம் எனும் டேட்டா பேஸில் இருக்கும்தானே?

ஆனால் இப்போது நடக்கும் கதையே வேறாக இருக்கிறது.

சான்றுக்கு ஒன்று. நீங்கள் கரூர் வைஸ்யா வங்கியில் வரைவோலை எடுக்கச் செல்லுங்கள். உங்கள் ஆதார் நகலைக் கேட்பார்கள். ஐயா நான் உங்கள் வாடிக்கையாளர்தான் என்று சொல்லிப் பாருங்கள். யாராக இருந்தால் என்ன? உங்கள் ஆதார் நகல் இருந்தால் வரைவோலை கிடைக்கும், இல்லையென்றால் கிடைக்காது என்று அழுத்திச் சொல்வார்கள்.

உங்களது ஆதார் எண், ஆதார் நகல் எல்லாம் வங்கியின் தரவு சேமிப்பகத்தில் இருக்கிறதே என்று சொல்லிப் பாருங்கள். அதெல்லாம் முடியாது ஆதார் நகல் இருந்தால் வரைவோலை, இல்லையென்றால் வெறும் ஓலைதான் என்று சொல்லி வெளியே அனுப்பி விடுவார்கள்.

இதற்கு ஏன்டா எல்லாவற்றையும் இணையத்தில் இணையுங்கள் என்று அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்புகிறீர்கள்?

எல்லாவற்றையும் இணைத்த பின்பும் நகல்கள் வேண்டும் என்றால் உங்களுக்கும் நகல் கடைகள் எனும் செராக்ஸ் கடைகளுக்கும் ஏதோ ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்று நினைக்கத்தானே தோன்றுகிறது?

முதலில் இந்த எதற்கெடுத்தாலும் நகல் என்ற இந்தக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். இதற்கெல்லமா இயக்கம், புரட்சி என்று ஆரம்பிக்க வேண்டும்? உங்கள் அமைப்பே அதாவது சிஸ்டமே சரியில்லை. போங்கடா நீங்களும் உங்கள் அமைப்புகளும்.

இந்த ஜிபே, போன்பே காலத்திலும் வரைவோலைகள் கேட்கிறார்கள் பாருங்கள். அவர்களைச் சொல்ல வேண்டும்? நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா?

திருந்தாத ஜென்மங்கள் வருந்தியாக வேண்டும். அதுகள் எங்கே வருந்துகின்றன? பொது சனம்தான் வருந்தியாக வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...