6 Jun 2024

நாடகத்தனம் என்றால் என்ன?

 


நாடகத்தனம் என்றால் என்ன? ஏன் நாடகத்தனம் வேண்டாம் என்கிறீர்கள்?

என்னிடம் அடிக்கடி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையை நாடகத்தனமாக வாழ முடியாது.

ஷேக்ஸ்பியர் வாழ்க்கையை நாடக மேடை என்று சொன்னாலும், நாடகீயமாக வாழ முடியாது. வாழ்க்கை அதன் எதார்த்தத்தில் உங்களை இழுத்துச் செல்லும். நாடகீயமாகச் சிரிப்பவர்கள், அழுபவர்கள் உடைந்து அழ வேண்டிய இடத்தில் அவர்களின் இயல்புப்படி அழவும், உரத்துச் சிரிக்க வேண்டிய இடத்தில் அவர்களின் இயல்புப்படி சிரிக்கவும் செய்து விடும் வாழ்க்கை.

மேலே கேட்ட கேள்விகளுக்கு இது பதில் இல்லையே என்று நீங்கள் சொல்லலாம்.

முதலில் நாடகத்தனம் என்றால் என்ன என்பதற்கான பதில்.

இதை நீங்கள் திரைப்படங்களில் பார்க்கலாம்.

நாடகத்திலிருந்து உருவானதுதான் தமிழ்த் திரைப்படங்கள். அதனால் அதன் தாக்கம் அளவுக்கு அதிகமாகவே தமிழ்த் திரைப்படங்களில் உண்டு.

வாழ்க்கையிலிருந்து உருவானதுதானே நாடகம். அதனால் நாடகத்தில் வாழ்க்கை இல்லையா என்றால் இல்லை.

இப்போது உதாரணம் சொல்கிறேன்.

சங்கமம் என்ற திரைப்படம் பார்த்தவர்கள் இருப்பீர்கள்.

சங்கமம் திரைப்படம் பார்க்காதவர்கள் கூட அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற மார்கழித் திங்கள் அல்லவா என்ற பாடலைப் பார்த்திருப்பீர்கள்.

சாஸ்திரிய கலை சிறந்ததா? நாட்டுப்புறக்கலை சிறந்ததா? என்கிற வினாவோடு நாட்டுப்புறக் கலையின் மேன்மையை நாடகீயத்தனத்தோடு சொல்லும் திரைப்படம் அது.

மார்கழித் திங்கள் அல்லவா பாடலில் கதைநாயகியான விந்தியா அந்தப் பாடலைப் பாடியபடி நடனமாடுவார். அந்தப் படம் வந்த நாட்களில் பள்ளி விழாக்களில் அந்தப் பாடலுக்கு நடனமாடுவது பிள்ளைகளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. தற்போதும் இருக்கிறது.

அந்த நடனத்தைக் காண கதை நாயகன் ரகுமான் வண்டியில் விரைந்து வருவார்.

நடனமாடும் நாயகி நாயகனைச் சேர முடியாதோ என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்று அதற்கான மாத்திரைகளை அது தூக்க மாத்திரையோ அல்லது சாவைத் தரும் மாத்திரையையோ, சாப்பிட்டு விட்டு அந்த பரத நடனத்தை ஆடுவார். அதுவே நடனம் என்றாலும் நாயகனுக்கும் நாயகியுக்குமான காதல் பகுதியும் இடம் பெற்று வரும்.

நாயகியான விந்தியா தற்கொலை முயற்சிக்கான மாத்திரைகளைச் சாப்பிட்டது தாயான ஸ்ரீவித்தியாவுக்குத் தெரிய வரும். இது தெரிந்தால் ஒரு தாய் என்ன செய்வாள்? தொடர்ந்து மகளை நடனமாட விடுவாளா? மகளைக் காப்பாற்ற முயல்வாளா?

தாயான ஸ்ரீவித்தியா என்ன செய்வார் என்றால் மகள் நடனமாடுவதைப் பரிதாபமாகப் பார்ப்பார். மகளான விந்தியாவும் ஆம் நான் இதைச் செய்திருக்கிறேன் என்பதாகப் பெருமிதமாக நடனமாடுவார்.

அடுத்து இந்தச் செய்தி மிருதங்கம் வாசிக்கும் டெல்லி கணேசுக்குத் தெரிய வரும் போது அங்கு ஒரு பரிதாபப் பார்வையைப் பார்ப்போருக்கு உருவாக்குவார்கள்.

கடைசியில் தாய் இந்தக் கையறு நிலையை எதிர்கொள்ள முடியாமல் விந்தியாவின் நடனத்தைக் காண ஓடோடி வரும் ரகுமானிடம் செய்தியைச் சொல்ல, அவர் நடனமாடிச் சரிந்து விழும் விந்தியாவைக் காப்பாற்ற மேடையேறிப் போய் தாங்குவார். அவர் எப்படிக் காப்பாற்றுவார் என்பதை மேற்கொண்டு நீங்கள் திரையில் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் திரையில் காணுங்கள்.

தற்கொலைக்கு முயன்றாள் நாயகி எனும் போது அதை தாயும் காப்பாற்றக் கூடாது, செய்தி தெரிந்த மற்றவர்களும் காப்பாற்றக் கூடாது. இதை நாயகனிடம் சொல்லி, நாயகன்தான் காப்பாற்ற வேண்டும் என்று திரைக்கதை எழுதுகிறார்களே, இதைத்தான் நான் நாடகத்தனம் என்கிறேன். நடைமுறையில் இப்படியா நடக்கும்? இப்படி தற்கொலை முயற்சி செய்கிற பெண்களை எல்லாம் நாயகன் வந்து காப்பாற்றட்டும் என்று விட்டால் என்ன நடக்கும்?

இப்போது சொல்லுங்கள், இந்த நாடகத்தனம் தேவையா?

வாழ்க்கையில் இப்படி நாடகீயமாக நடக்குமா? அப்படி நடக்க விட்டால் என்ன நடக்கும்? தூக்குத் தண்டனை கைதிக்குத் தண்டனையை நிறைவேற்றும் நிலையில் ஜீப்பில் வந்து சிறைச்சாலையின் சுவரை இடித்து விட்டு, நிரபராதி என்பதற்கான ஆதாரத்தைக் காட்டி விட்டு நாயகன் மீட்பதைப் போலத்தானே இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தில் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. அது எந்தத் திரைப்படம் என்று சொன்னால் வெறி பிடித்த ரசிகர்கள் என்னை விட மாட்டார்கள். கடித்துக் குதறி விடுவார்கள்.

கதைகள், புதினங்களிலும் இது போன்ற நாடகீயங்கள் அதிகம்.

இந்த நாடகத்தனங்கள் உங்களை ஒரு தனித்த உலகில் கொண்டு  போய் தள்ளி விடும். நீங்களாக ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். எதார்த்த உலகம் வேறாக இருக்கும். அதற்காகத்தான் இந்த நாடகத்தனங்களைக் குறைத்துக் கொண்டு நல்ல படங்களை எடுங்கள் என்று சொல்கிறேன்.

வெற்றிமாறன் அப்படிப்பட்ட ஓர் இயக்குநர் என்று சொல்கிறார்கள்.

நானும் இல்லை என்று சொல்லவில்லை.

விடுதலை 1 இல் எப்படி ஏமாற்றி விட்டார் நம்மை அவர்.

கடைசியில் சூரியின் பறந்து பறந்து அடிக்கும் அப்படி ஒரு கிளைமாக்ஸ் சண்டையை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

கேட்டால் வியாபாரம் என்பார்கள்.

வியாபாரத்தில் எப்படியெல்லாம் பறந்து பறந்து ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?

அதை திரைப்படமாக எடுத்துப் பாருங்கள். அவ்வளவு எதார்த்தமாக இருக்கும்.  

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...