குடும்ப வரவு – செலவுத் திட்டத்தைக் கட்டமைக்கும் முறை
ஒரு குடும்ப வரவு – செலவுத்திட்டத்தை
(குடும்ப பட்ஜெட்டை) எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள்.
இது ஒரு நல்ல கேள்வி. எப்படி
அமைத்துக் கொள்ளலாம் என்பதைக் கேள்வியாக யாரிடமாவது எழுப்புவது திட்டமிடலின் தொடக்கம்.
சரியான மாற்றத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி எனவும் சொல்லலாம். இத்திட்டமிடல்தான்
குடும்ப வரவு – செலவுகளை (பட்ஜெட்டை) முறைபடுத்துகிறது.
குடும்பத்திற்கு வரவுகள்
எப்படி இருக்கின்றன, செலவுகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிவதற்கு இந்த வரவு – செலவுத்
திட்டம் உதவும். இதெல்லாம் தெரியாமலா இருப்பார்கள் என்றால் மேலோட்டமாக உங்களுக்குத்
தெரிந்திருப்பது வேறாகவும் திட்டமிட்டு எழுதிக் கொள்ளும் போது உங்களுக்குத் தெரியப்
போவது வேறாகவும் இருக்கும் என்பதை ஆரம்பத்தில் உங்களால் நம்ப முடியாது.
குடும்ப வரவு – செலவுத் திட்டத்தைக்
(குடும்ப பட்ஜெட்) கட்டமைப்பதன் முதல் படி முதலில் உத்தேசமாக வரவுகளையும் செலவுகளையும்
எழுதுவதான். அது கொஞ்சம் கூடுதல் குறைவாக இருக்கலாம். தொடர்ந்து எழுத எழுத சரியாகி
விடும்.
எழுதிய பிறகு உங்களுக்குக்
கிடைக்கும் புரிதலே வேறாக இருக்கும். சட்டென்று நீங்கள் குடும்பத்திற்கான வரவு – செலவு
திட்டத்தைக் கட்டமைக்க வேண்டியதில்லை. அதற்கு முன் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நாள் வாரியாக
வரவு – செலவுகளை எழுதி வைக்கப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் அடுத்து உங்களை வரவு
– செலவு திட்டத்தை (பட்ஜெட்) நோக்கிக் கொண்டு போய் நிறுத்தும்.
திட்டமிட்டுச் செலவிடுவதும்
வரவுகளைக் குறித்து வைப்பதும் அலுப்பு சலிப்பான வேலை என்று நீங்கள் நினைத்தால் கடனுக்குள்ளும்
பொருளாதார நெருக்கடிக்குள்ளும் இருக்க திட்டமிடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
குடும்ப வரவு – செலவு திட்டத்தைத்
திட்டமிட ஒவ்வொரு நாளும் உங்களுக்கு எவ்வளவு வரவு வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பதை
முதலில் குறித்து வைக்க வேண்டும். அல்லது நீங்கள் மாதச் சம்பளக்காரராக இருந்தால் மாதம்
எவ்வளவு வருமானம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பதை எழுதி வைக்க வேண்டும். இதிலிருந்து
வரப் போகின்ற நாளுக்கு அல்லது மாதத்துக்கு எவ்வளவு வரவு வரும் எவ்வளவு செலவாகும் என்பதைத்
திட்டமிட வேண்டும். இந்தத் திட்டமிடல்தான் வரவு – செலவுத் திட்டம் (பட்ஜெட்) என்பதன்
அடிப்படையாகும்.
அதாவது முந்தைய எழுதி வைத்த
விவரங்களிலிருந்து வரப் போகும் நாளுக்கோ மாதத்துக்கோ நீங்கள் திட்டமிட வேண்டும். இதுதான்
வரவு – செலவுத் திட்டத்தின் சாராம்சம்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
மாதமும் செய்து கொண்டே இருக்கும் போது உங்களுக்கே புரிந்து விடும், எப்படி வரவுக்கான
வருமானங்களை அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படிச் செலவினங்களை வரவுக்குத் தக்கபடி செய்து
கொள்ள வேண்டும் என்று.
உங்களுக்கு எவ்வளவு நன்றாகப்
புரிந்தாலும் மனதில் பாடமாக இருந்தாலும் வரவையும் செலவையும் எழுதிப் பராமரிக்க வேண்டும்
அல்லது கணினியில் கோப்புகளை உருவாக்கிப் பதிவு செய்து வைக்க வேண்டும் அல்லது அலைபேசியில்
செயலிகள் மூலமாகப் பதிந்து வைக்க வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. என்னைக் கேட்டால்
குறிப்பேட்டில் எழுதி வைப்பது சிறந்தது என்பேன். உங்களின் பழக்கம் மற்றும் விருப்பத்துக்கு
ஏற்ப நீங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
இப்போது உங்கள் வருமான வகைகளையும்
செலவின வகைகளையும் வகைப்படுத்துங்கள். நான் ஒரு மாதிரிக்காகக் கீழே குறிப்பிட்டவாறு
இப்படிச் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்கு எப்படி அமைகிறதோ அப்படித்தான் வகைபடுத்திக்
கொள்ள வேண்டும்.
வருமான வகைகள் இப்படி இருக்கலாம்.
ü தினசரி சம்பளம் அல்லது மாதச்
சம்பளம்
ü வீட்டு வாடகை
ü விவசாய வருமானம்
ü தோட்ட வருமானம்
ü ஈவுத்தொகை வருமானம்
ü வைப்புத்தொகைக்குக் கிடைக்கும்
வட்டி வருமானம்
ü முதலீட்டிலிருந்து கிடைக்கும்
பங்கு வருமானம்
ü காப்புரிமை சார்ந்த வருமானம்
ü அன்பளிப்புகள் பரிசுகள் மூலமாக
வரும் வருமானம்
என்று எத்தைனை வகை வருமானம்
இருக்கிறதோ அத்தனையையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது செலவினங்களையும்
வகைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு மாதிரிக்காக செலவினங்கள் இப்படிக் கீழே கண்டவாறு அமையலாம்.
உங்களுக்கு எப்படி அமைகிறதோ அப்படியே வகைபடுத்துங்கள்.
செலவின வகைகளாவன,
ü வாடகைச் செலவினங்கள்
ü மளிகைச் செலவினம்
ü காய்கறி மற்றும் பழங்களுக்கான
செலவினம்
ü படிப்புக்கான செலவினம்
ü தவணைத்தொகை கட்டுவதற்கான
செலவினம்
ü குடும்ப நபர்களுக்கான தனிப்பட்ட
செலவினம்
ü மருத்துவ செலவினம்
ü மின்கட்டணம், குடிநீர் வரி,
வீட்டுவரி போன்ற செலவினம்
ü நன்கொடைகள் அன்பளிப்புகள்
சார்ந்த செலவினம்
ü காப்பீடுகளுக்கான செலவினம்
ü பெட்ரோல், டீசல், எரிவாயு
போன்ற எரிபொருளுக்கான செலவினம்
ü பராமரிப்பு தொடர்பான செலவினம்
ü விழா மற்றும் பண்டிகை தொடர்பான
செலவினம்
ü எதிர்பாராத செலவினம்
ü அவசரகால செலவினம்
இப்படி உங்களுக்கு எத்தனை
வகை செலவினங்கள் இருக்கிறதோ அத்தனையையும் வகைப்படுத்துங்கள்.
இப்படி வகைபடுத்திய பின்
இவற்றை அட்டவணையாக்கி உங்கள் வரவு – செலவுகளைக் குறித்து வரலாம். ஒரு குறிப்பேட்டின்
ஒரு பக்கத்தில் வரவுகளுக்கான அட்டவணை, எதிர்பக்கம் செலவினத்திற்கான அட்டவணை எனப் போட்டு
தேதி வாரியாக நீங்கள் குறித்து வரும் போது குடும்ப வரவு செலவு பற்றிய நல்ல புரிதல்
கிடைக்கும். இந்தப் புரிதல் உங்களது உங்கள் வரவு – செலவு திட்டத்தை அபாரமாகத் திட்டமிட்டு
அமைத்துக் கொள்ள உதவும்.
உங்கள் வரவு – செலவு குறிப்பேடு
எப்படி அமையலாம் என்பதற்கு ஒரு மாதிரியை அமைத்துக் காட்டுகிறேன் பாருங்கள். இது ஒரு
மாதிரிக்காக மட்டும்தான். எப்படி அமைப்பது என்று புரிந்து கொள்வதில் உங்களுக்குச் சிரமம்
இருக்குமானால் அதற்காக ஒரு மாதிரியைக் காட்டும் நோக்கம் கொண்டது மட்டும்தான். இதை ஒரு
மாதிரியாக வைத்துக் கொண்டு உங்கள் குடும்ப வரவு – செலவு எப்படி அமைகிறதோ அதன்படி இதை
விரிவு செய்து கொள்ளுங்கள்.
மாதம் : |
|||||||||
வருமானப் பக்கம் |
செலவினப் பக்கம் |
||||||||
நாள் |
தின ஊதியம் |
ஈவுத் தொகை |
மதிப்பு ஊதியம் |
பரிசு |
நாள் |
மளிகை |
காய்கறி |
மருத்துவம் |
எரி பொருள் |
|
|
|
|
|
|
|
|
|
|
இப்பதிவுகளின்
மூலமாக நீங்கள் ஒரு மாதத்தில் உங்கள் வருமானம் எவ்வளவு, செலவினம் எவ்வளவு என்ற முடிவுக்கு
வர இயலும். இதை மனதிற்குள்ளே கணக்கிட்டு விட முடியும் என்று நீங்கள் கூறினாலும் எழுதி
அடையும் முடிவுதான் சரியாகவும் துல்லியமாகவும் இருக்கும்.
உங்களது வருமானம் அதிகமா?
செலவினம் அதிகமா? என்ற முடிவையும் இப்பதிவுகளின் வாயிலாக நீங்கள் பெற முடியும்.
வருமானம் அதிகம் என்றால்
செலவினம் போக மிஞ்சம் தொகையைச் சேமிக்க வேண்டும். சேமிப்புத் தொகையை தொடர்வைப்பிலோ,
தங்க நாணயங்கள் வாங்குவதிலோ அல்லது எதிர்கால கல்வி தொடர்பான செலவினங்களுக்கோ, வீடு
அல்லது மனை வாங்குவதற்கோ தொடர்ந்து முதலிட்டு வர வேண்டும்.
செலவினம் அதிகம் என்றால்
எவற்றில் எல்லாம் சிக்கனத்தைக் கடைபிடிக்கலாம் என்று யோசிக்கலாம். வருமானத்தைப் பெருக்குவதைப்
பற்றியும் யோசிக்கலாம். ஆடம்பர செலவினங்களாகக் கருதுபவற்றைத் தாட்சண்யமின்றித் தவிர்க்கலாம்.
குடும்ப உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து எப்படியெல்லாம் செலவினங்களைக் குறைக்கலாம்,
வருமானங்களைப் பெருக்கலாம் என்று திட்டமிட வேண்டும்.
இந்தச் செயல்முறைகளைச் செய்து
முடிக்க உங்களுக்கு மூன்று மாத காலமாவது தேவைப்படும்.
இதன்பிறகு நீங்கள் அடுத்த
கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் குறைந்தது முப்பது
சதவீதத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக ஒதுக்கி மீதம் வரும் எழுபது சதவீத வருமானத்தில்
அனைத்துச் செலவினங்களையும் கொண்டு வருவதுதான் அடுத்த அடிவைப்பு.
நான் முதலீட்டு ஒதுக்கீடைக்
குறைந்தபட்சம் முப்பது சதவீதம் என்று சொல்லியிருப்பதால் அதிகபட்சம் உங்கள் திறமையும்
சாமர்த்தியமும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் முதலீட்டிற்காக எழுபது
சதவீதம் கூட திட்டமிடலாம். அப்படித் திட்டமிடும் போது குடும்பத்தின் அடிப்படையான செலவினங்களில்
கை வைத்து விடாமல் திட்டமிட வேண்டும். அடிப்படையான அவசியமான செய்தே ஆக வேண்டிய தரமான
செலவினங்களில் மிச்சம் பிடித்து விடக் கூடாது. செலவினங்களைக் குறைக்கிறேன் என்று தரமற்ற
வகையில் தரமற்ற பொருட்களை வாங்குவது என்பது போல, கஞ்சத்தனம் செய்வது என்பது போலக் குறைத்து
விடக் கூடாது.
அடுத்ததாக முதலீட்டு ஒதுக்கீடு
என்று சொல்லி விட்டு அது குறித்துச் சொல்லவில்லை என்கிறீர்களா? அதைத்தான் நான் மேலே
சொல்லிவிட்டேன். அது தொடர்பு வைப்பாகவோ, தங்கம் வாங்குவதாகவோ, பிள்ளைகளின் படிப்புச்
செலவினங்களுக்காவோ, வீடு வாங்குவதற்காகவோ, மனை வாங்கிப் போடுவதற்காகவோ, பங்குகளை வாங்கிப்
போடுவதற்காகவோ இருக்கலாம்.
இப்படி நீங்கள் திட்டமிட்டுக்
கொண்டு வரும் போது ஒவ்வொரு செலவினத்திற்கும் மாதந்தோறும் ஆகும் செலவினத்தைக் கச்சிதமாக
ஒதுக்கி வைக்கும் திறன் பெற்றவராக ஆகி விடுவீர்கள்.
இப்படி ஓர் ஆண்டிற்குத் திட்டமிட்டுக்
கொண்டு வரும் போது உங்களுக்கு உங்களது வருமானம் – செலவினம் குறித்து நல்ல புரிதல் கிடைத்து
விடும். இப்புரிதலின் அடிப்படையில் நீங்கள் சில முடிவுகளை அடைந்திருப்பீர்கள். அவற்றை
இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.
ü முதலீட்டிற்காக ஒதுக்கி வைக்க
வேண்டிய தொகை
ü அவசர காலத் தேவைக்காகக் கையிருப்பில்
எப்போதும் இருக்க வேண்டிய தொகை
ü எதிர்பாராத செலவினங்களுக்காக
வங்கி இருப்பில் இருக்க வேண்டிய தொகை
ü வருமான வரிக்காக ஒதுக்கி
வைக்க வேண்டிய தொகை
ü தீபாவளி பொங்கல் போன்ற வருடாந்திர
விழாக்களுக்காக சேமிக்க வேண்டிய தொகை
ü உறவினர் மற்றும் நண்பர்களின்
திருமணம் போன்ற விழாக்களுக்காக ஒதுக்கி வைக்க வேண்டிய தொகை
ü சுற்றுலா, பொழுதுபோக்கிற்காக
ஒதுக்கி வைக்க வேண்டிய தொகை
இப்பட்டியல் அவரவர் நிலையைப்
பொருத்து கூடுதலாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம்.
இப்போது ஆண்டுச் செலவினம்
குறித்த தெளிவான ஒரு புரிதல் உங்களுக்குக் கிடைத்து விடும். இப்போது உங்கள் வருமானத்தை
இதற்கேற்ப பிரித்துக் கொள்வீர்கள் அல்லவா. இதுதான் குடும்ப வரவு – செலவுத் திட்டம்
(பட்ஜெட்) என்பதாகும். நான் இதை சில நிமிடங்களில் உங்களுக்கு விளக்கி விட்டாலும் இதற்கு
உங்களுக்கு இரண்டு வருட கால அனுபவமாவது தேவை. உங்களுக்கு என்ன புரிதல் இருந்தாலும்
அதை எழுதி அந்தப் புரிதல் சரியானதா என்பதை அடிக்கடி திரும்பப் படித்து சரி செய்ய வேண்டும்
என்பதை மறந்து விடாதீர்கள்.
முதலீட்டுக்காக ஒதுக்க வேண்டிய
தொகை குறித்துக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். அதுதான் எங்களுக்குத் தெரியும் என்கிறீர்களா?
இருந்தாலும் சொல்லி விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் வாங்க வேண்டிய
தங்கம்
ஒவ்வொரு ஆண்டும் தொடர் வைப்பில்
சேமித்து வைக்க வேண்டிய தொகை
ஒவ்வொரு ஆண்டும் கல்விக்காகச்
சேமித்து வைக்க வேண்டிய தொகை
ஒவ்வொரு ஆண்டும் வீடு அல்லது
மனைக்காக சேமித்து வைக்க வேண்டிய தொகை
ஒவ்வொரு ஆண்டும் பங்குகள்
வாங்குவதற்காக சேமித்து வைக்க வேண்டிய தொகை
இதை நீங்கள் மாத வாரியாகப்
பிரித்துக் கொண்டு மாதந்தோறும் இவ்வளவு தொகை எனச் சேமித்துக் கொள்வது எளிதாக இருக்கும்.
அதை விட வாரந்தோறும் நாள்தோறும் என்று பிரித்துக் கொள்வது இன்னும் எளிதாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் சேமிக்க வேண்டிய அச்சிறிய தொகைதான் மாதக்கணக்கில் பார்க்கும் போது பெரிய
தொகையாக ஆண்டுக்கணக்கில் பார்க்கும் போது அவ்வளவு பெரிய தொகையாக இருக்கிறது என்ற புரிதலும்
உங்களுக்குக் கிடைத்துவிடும்.
*****
Nice
ReplyDelete