2024
மக்களவைத் தேர்தல் பல பாடங்களைச் சொல்கிறது. ஒற்றுமையே வலிமை என்பதுதான் அது சொல்லும்
முதன்மையான பாடம்.
கருத்துக்
கணிப்புகளை மீறி காங்கிரஸ் தலைமை வகிக்கும் இண்டியா கூட்டணி சரிபாதிக்குச் சற்றே குறைவான
இடங்களைப் பெற்றுள்ளது. இக்கூட்டணி இன்னும் வலிமையாக அதாவது ஒற்றுமையில் வலிமையாகச்
செயல்பட்டிருந்தால் முடிவுகளில் இன்னும் கூட மாற்றம் இருந்திருக்கும்.
தேர்தலுக்குப்
பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களைப்
பெறும் என்றும் 400 இடங்களைத் தாண்டும் என்றும் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள்
கூறின. இந்தியா டுடே, ரிபப்ளிக் தொலைக்காட்சி போன்ற பிரபல ஊடகக் கணிப்புகளும் அதை உறுதி
செய்தன. ஆனால் நடந்த கதை வேறு. அப்படிக் கூறியதற்காகத் தேர்தல் முடிவு வெளிவந்த பின்பு
ஒரு கணிப்பாளர் கண்கலங்கி அழுத கதையும் நேர்ந்தது.
கருத்துக்
கணிப்புகளில் அகில இந்திய அளவில் சிறிதும் பெரிதுமான மாறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தைப்
பொருத்த வரை சற்றேறக்குறைய பொருந்திப் போயிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
தமிழகத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி நாற்பதுக்கு நாற்பதையும்
வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆளுங்கட்சி ஒன்று இந்த அளவுக்கு நூற்றுக்கு
நூறு வெற்றி பெறுவது அபூர்வம் என்பதை முந்தைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழகக்
களத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிகளின் அவசியத்தை உணர்ந்து முறையாக ஒருங்கிணைத்தது
என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை பாரதிய ஜனதா கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்
கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கலாம். அந்த வகையில் இவ்விரு
பெரும் கட்சிகளும் கூட்டணியின் வலிமையை உணரத் தவறி விட்டன என்றும் சொல்லலாம்.
வாக்குப்பதிவு
முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகிய நான்கு கட்சிகளும்
ஒன்றிணைந்திருந்தால் நாற்பதில் சரிபாதி இடங்களைப் பெற்றிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒரிசாவில்
நவீன் பட் நாயக்கின் அரசுக்கு மாற்றையும், ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின்
அரசுக்கு மாற்றையும் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும்
போது இலவசத் திட்டங்கள் அல்லது நெடுநாளைய வலிமையான தலைவர் என்பதால் மட்டும் அதை நிலைநிறுத்தி
விட முடியாது.
உத்திர
பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளைப் பெறும் என்ற எதிர்பார்ப்பும் மாறியிருக்கிறது.
இராமர் கோயில் கட்டுமானம் அந்தக் கட்சிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கணிப்பு
மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்ற அயோத்தியிலேயே பாரதிய
ஜனதா கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
இத்தேர்தலுக்குப்
பின் காங்கிரஸ் கட்சியைத் தேட வேண்டியிருக்கும் என்ற எதிர்கட்சியை நோக்கிய ஆளுங்கட்சியின்
கிண்டலை மக்கள் ஏற்கவில்லை என்பதை காங்கிரசுக்கு அளித்திருக்கும் வாக்குகளின் மூலம்
மக்கள் காட்டியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த
தேர்தல் முடிவுகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது பழிவாங்கல் மற்றும் எதேச்சதிகார
அரசியலை மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. மத உணர்வை, பிராந்திய உணர்வை முன்னிறுத்தும்
போக்கையும் மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
பத்தாண்டுகளாக
ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தரவில்லை. எதிர்க்கட்சிகள்
வலிமையிழந்து இருப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. சற்றேறக்குறைய ஆளுங்கட்சிக்கும்
எதிர்க்கட்சிக்கும் சரிபாதி இடங்களை வழங்கியிருக்கிறார்கள். வல்லமையான ஆளுங்கட்சி என்றாலும்
வலிமையான எதிர்கட்சியும் தேவை என்பதை அவர்கள் அளித்திருக்கும் வாக்குகளின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.
தேர்தல்
முடிவுகளைத் தொடர்ந்து பங்குச் சந்தை பத்திலிருந்து இருபது சதவீதம் வரை ஏறலாம் அல்லது
இறங்கலாம் என்கிற கணிப்புகளையும் சந்தை பொய்யாக்கியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான
நாளன்று இறக்கம் கண்ட சந்தை சரிபாதி இறக்கத்தை மறுநாளே சமன் செய்திருக்கிறது. உச்சம்
தொட்ட சந்தையின் சமன்படுத்திக் கொள்ளும் நிலையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அரசியல்
கட்சித் தலைவர்கள் பொது வெளியில் மக்களைச் சந்திப்பதும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிப்பதும், மக்கள் மன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதும்
அவசியம் என்பதற்கான தீர்ப்பாகவும் இத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
இந்தியா
பன்மைத்துவம் வாய்ந்த நாடு. அதை அனுசரித்து வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்
தலைவர்களையேத் தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்க இந்தத் தேசம் தயாராக இருக்கிறது
என்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கொள்ளலாம். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக்
காரணம் காட்டி அனுசரனை இல்லாமல் செல்வதை மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதை இத்தேர்தல்
முடிவுகள் அழுத்தமாகக் காட்டுகின்றன. எப்போதும் எதேச்சதிகாரத்திற்கு எதிரானதுதானே ஜனநாயம்.
அதை இந்த ஜனநாயகத் திருவிழாவின் பின்னூட்டம் சரியாகவே காட்டுகிறது.
No comments:
Post a Comment