13 May 2024

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட்டன. பண்டிகைக் கால முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகின்றன. இப்போதுள்ள தொழில்நுட்ப சாத்தியங்களைக் கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று காத்திருப்பவர்களையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

முன்பதிவில்லாத தொடர்வண்டி பெட்டிகளில் (Unreserved comportment) ஒரு காமிராவைப் பொருத்தினால் போதும். அங்கிருக்கும் கூட்டத்தை மதிப்பிட்டு விட முடியும். இப்படி அனைத்து விதமான சாத்தியங்களும் இருந்தும் எப்படி முன்பதிவில்லாத பெட்டிகளில் அபாய அளவைக் கடந்து மக்கள் பயணிக்க தொடர்வண்டி நிர்வாகம் அனுமதிக்கிறது?

மக்கள் பயணத்திற்காக மிகப் பெருமளவில் காத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகளை இணைப்பதில் ஏன் அலட்சியம் காட்டப்படுகிறது?

முன்பதிவுக்கான பெட்டிகளே முன்பதிவில் சில வாரங்களுக்கு முன்பே முடிந்து விடுவதைக் கொண்டே பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு போவதைத் தொடர்வண்டி நிர்வாகத்தால் அறிந்து கொள்ள முடியாதா?

தொடர்வண்டி நிர்வாகம் அதிவேக தொடர்வண்டிகளை இயக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அதிவேகமாக மக்களுக்குச் சேவைகளை வழங்க தயாராக இல்லை. அதுவும் குறிப்பாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்கும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவும் தயாராக இல்லை.

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இக்காலக் கட்டத்தில் பயணியர்கள் குறித்த தரவுகளைத் துல்லியமாகத் திரட்டித் தேவைக்கேற்ப தொடர்வண்டிகளை இயக்கலாம். கூடுதல் பெட்டிகளைத் தேவைக்கேற்ப இணைத்துக் கொள்ளலாம்.

வழக்கமாக இயக்கும் தொடர்வண்டிகளில் கூட்டம் முண்டியடிக்கும் நிலையில் அத்தரவுகள் கூட இல்லாமல் கூடுதல் எண்ணிக்கையில் எத்தனை தொடர்வண்டிகளை வேண்டுமானாலும் இயக்கலாம் என்ற நிலையில்தான் பயணியர் கூட்டம் நிரம்பி வழியக் கூடிய வகையில் இந்திய தொடர்வண்டிகளின் நிலைமைகள் இருக்கின்றன. அப்படி இயக்கும் தொடர்வண்டிகளில் முன்பதிவில்லாத பெட்டிகளின் விகிதாச்சாரம் முன்பதிவு பெட்டிகளுக்கு இணையாக இருக்க வேண்டும். இருபது பெட்டிகள் உள்ள தொடர்வண்டியில் முன்பதிவு பெட்டிக்கும் முன்பதிவில்லாத பெட்டிக்குமான விகிதாச்சாரம் 1 : 1 என்றுதான் இருக்க வேண்டும்.

ஒரு தொடர்வண்டியின் பெரும்பான்மையான பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாகவே இருக்கின்றன. முன்பதிவில்லாத பெட்டிகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. பெரும்பாலும் நான்கிற்குள். அவற்றில் இடம் பிடிப்பது பெரும் காரியமாக இருக்கிறது. முன்பதிவில்லாத பெட்டிகளில் நீண்ட தூரம் நின்று கொண்டு செல்லும் பயணியரைக் காண்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது.

துல்லியமாகத் தரவுகளைச் சேகரித்துப் பயணியர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிப் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரை திருப்தியான பயண அனுபவத்தைத் தர எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தொடர்வண்டி நிர்வாகம் அதிகப் பணம் கொடுத்து பயணிக்கும் முன்பதிவு பெட்டிகளின் திருப்தியை மேலாண்மையைச் செய்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறது.

எப்படிக் கணக்கெடுத்துப் பார்த்தாலும் 90 சதவீதத்திற்கு மேல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுடனேயே செல்கிறது ஒரு தொடர்வண்டி. அத்தொடர்வண்டியில் பத்து அல்லது அதற்குக் குறைந்த சதவீதத்திலேயே முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்கின்றன.

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணியர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாகும். அந்த வகையில் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் 10 சதவீத பயணியர்களுக்கான தேவையை நிறைவேற்றவே தொடர்வண்டிய நிர்வாகம் இயங்குகிறது. முன்பதிவில்லாமல் பயணிக்கும் 90 சதவீத பயணியர்களைப் பற்றி அதற்கு எந்தக் கவலையும் இல்லை. ஒரு தனியார் துறை இப்படிச் செயல்பட்டால் அதற்கு லாப நோக்கத்தை ஒரு காரணமாகக் கூறலாம். அரசுத் துறையில் இயங்கும் தொடர்வண்டி நிர்வாகமே இப்படிச் செய்தால் அதை என்னவென்று சொல்வது?

இன அடிப்படையில் பார்க்கும் போது பொதுவாக நிர்வாகங்கள் பெரும்பான்மையினருக்குச் சாதகமாகவும் சிறுபான்மையினருக்குப் பாதகமாகவும் நடக்கின்றன. பண அடிப்படையில் பார்க்கும் போது சிறுபான்மையினராக இருக்கும் பணக்காரர்களுக்குச் சாதகமாகவும் பெரும்பான்மையினராக இருக்கும் ஏழைகளுக்குப் பாதகமாகவும் நடக்கின்றன. தார்மீகமாக அப்படி நடக்கலாமா?

தொடர்வண்டி நிர்வாகங்கள் போன்ற மக்கள் நல நிர்வாகங்கள் யாருக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் நடக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் சாதகமாக அனைவருக்கும் போதுமான வசதிகளோடு செல்லக் கூடிய பயண அனுபவங்களைத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் திட்டமிட்டுத் தரலாம். அப்படிப் போதுமான பாதுகாப்பு மற்றும் போதுமான வசதிகளோடு செல்வது பயணியர்களின் உரிமையும் கூட. முன்பதிவில் செல்லக் கூடிய பயணியர்களுக்கு இருக்கும் அதே பயண உரிமையை முன்பதிவில்லாமல் செல்லக் கூடிய பயணியர்களுக்கும் தொடர்வண்டி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.

தொழில்நுட்ப வசதிகளால் தரவுகளை மிக வேகமாகத் திரட்ட முடிகின்ற காலத்தில் தரவுகளுக்கேற்ப தேவைகளைத் திட்டமிட்டுச் சேவைகளைச் சிறப்பாக செய்வதற்கான வாய்ப்பு தொடர்வண்டி நிர்வாகத்திற்குத் தற்போதைய சூழ்நிலையில் நன்றாகவே இருக்கிறது. இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திப் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு பயணிக்கும் பயணியர்களின் பயணிப்பதற்கான உரிமையைத் தொடர்வண்டி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் அடித்தட்டுப் பயணியர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும்.

அதே நேரத்தில் பயணியருக்கும் பயண உரிமைகள் உண்டு. அவற்றைத் தொடர்வண்டி நிர்வாகங்கள் உறுதிபடுத்தி வழங்கித்தான் ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...