தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!
கோடை
விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில்
அக்னி நட்சத்திரம் கூட தப்பிப் போனதுண்டு. பெரிய நட்சத்திரங்களின் புதுப்புது படங்கள்
வெயிலை விட சுடச் சுட வெளியாவது தப்பியதில்லை.
இந்த
2024 என்னவோ சோதனை காலம்தான் போல. பெரிய நட்சத்திரங்களின் எந்தப் படமும் வெளியாகாமல்
கோடை சோடை போய் விட்டது. விடுவார்களா நம் மக்கள்? விஜய் நடித்த கில்லியையும், அஜித்
நடித்த தீனாவையும் மீண்டும் வெளியிடச் செய்து (ரீரிலீஸ்) கொண்டாடுகிறார்கள்.
கம்பித்தட
இணைப்பு (கேபிள்), அலைவரிசை வழி இணைப்பு (டி.டி.எச்.), இணையவழி இணைப்பு (ஓ.டி.டி.),
வலையொளி (யூடியூப்) போன்றவற்றில் பார்க்கப்படும் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் தொலைவரி
(டெலிகிராம்) மூலம் பதிவிறக்கம் செய்து பார்க்கப்படும் திரைப்பங்கள் என எவ்வளவோ வந்தாலும்
திரையரங்கிற்குப் போய் படம் பார்த்துக் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் மாறாத குணமாகும்.
தமிழ்ப்படங்கள்தான்
என்றில்லாமல் வந்தாரை வாழ வைத்து விருந்தோம்பும் பண்பில் தலைசிறந்து விளங்கும் தமிழர்கள்
பிரேமலு, மஞ்சுமள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம் போன்ற மலையாளப் படங்களையும் பார்த்துக்
கொண்டாடுகிறார்கள். எம்மொழியையும் தம்மொழியாகக் கருத்தும், வேற்றுமையில் ஒற்றுமை காணும்
தமிழர்களின் பண்பாட்டால் நிகழும் இத்தன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
இப்போற்றுதலுக்குரிய பண்பைப் பயன்படுத்தித் தமிழ்ப்படங்களுக்கு மலையாள தலைப்பிட்டு
வெளியான திரைப்படங்களை என்ன சொல்வது? அதையும் வேறு வழியின்று பொறுமையுடன் பார்த்துத்
தொலைத்தார்கள் நம் தமிழ் மக்கள்.
கோடை
விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகாமல் போனது தமிழர்களின் பொழுதுபோக்கு
உலகுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாகும். இந்த இழப்பைத் தாங்கும் வல்லமையும் பக்குவமும்
பெற்றிருப்பது தமிழர்களின் தனிச்சிறப்பாகும்.
வரக்கூடிய
கோடைகளில் இது போன்ற இழப்பு நேரிடாமல் பார்த்துக் கொள்வது ரஜினி, கமல், விஜய், அஜித்,
தனுஷ், சிம்பு போன்ற நட்சத்திரங்களின் கையில்தான் இருக்கிறது. செய்வார்களா? அவர்கள்
இதைச் செய்வார்களா?
கமல்,
விஜய் போன்றோர் அரசியல் பக்கம் போனாலும் அஜித், தனுஷ், சிம்பு போன்றோர் இதைப் பொறுப்பேற்று
செய்ய வேண்டும். தமிழர்களைத் தவிக்க விடக் கூடாது. அவர்களுக்கு உங்களை விட்டால் வேறு
யார் இருக்கிறார்கள்? போனால் மதுபானக் கடைகளுக்குப் (டாஸ்மாக்) போவார்கள் அல்லது உங்களுடைய
திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்கங்களுக்குத்தானே போகிறார்கள். வேறு போக்கிடம் ஏது?
உங்களையே நம்பி இருக்கும் அவர்களை ஏமாற்றாமல் புதுப்புது படங்களாக வெளியிட்டுத் தள்ளுங்கள்.
தமிழ்கூறு நல்லுலகம் உங்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றுக்கும்
மேலாக ஆற்றல் நட்சத்திரம் (பவர் ஸ்டார்) சீனிவாசம் கூட ஒரு படத்தை வெளியிடாமல் ஏமாற்றி
விட்டார் பாருங்கள். அதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
*****
No comments:
Post a Comment