9 May 2024

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்!

கருமம்டா இதெல்லாம்!

இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்?

நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொருவரைப் போல வேடமிட்டு, அதை ஒரு தொழில்முறையாக ஆக்கிக் கொண்டு, பின்பு அதையே ஒரு வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டு, இதெல்லாம் என்ன கருமம்டா? இப்படி என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

கூடுதலாக. ஒரு மனிதருக்கு இப்படி ஒரு சுதந்திரம் கூட இருக்கக் கூடாதா? இப்படியும் கேட்டுக் கொள்வேன். ஒருவர் யார் மாதிரி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். அதற்கான சுதந்திரம் இருந்தாலும் ஒருவர் அவர் மாதிரி இருப்பதற்குப் பயன்பட்டால்தான் அந்தச் சுதந்திரத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி எங்கள் ஊரில் சின்னா என்பவர் இருக்கிறார். ஏறக்குறைய அவர் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினியாக வாழ்ந்து வருகிறார். ரஜினியினுடைய பிறந்த நாளை தன்னுடைய பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறார். ரஜினியாக அவர் பிறந்திருக்க இவர் வேறு ஏதற்கு ரஜினியாகப் பிறப்பெடுக்கிறார்? இவருடைய பிறந்த நாள் என்னவாகிறது? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்களை நான் எப்போது தேடிக் கண்டுபிடிப்பேனோ?

சின்னா எங்கே போனாலும் ரஜினியின் வெள்ளை ஜிப்பா - பேண்ட் மோடிலேயே போய் வருகிறார். அது அண்ணாமலையும் படையப்பாவும் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள். அல்லது தாக்குதல்கள்.

ரஜினியைப் போல இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார் சின்னா. கல்யாணம் ஆகாததால் அந்த ஆசை நிறைவேறவில்லை. சின்னாவைப் பார்த்து அவர் ரஜினியாக இருப்பதால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராமல் போனதில் நேர்ந்த சோகம் அது. ஒருவேளை சின்னா சின்னாவாகவே இருந்திருந்தால் அவருக்கு யாரேனும் பெண் கொடுத்திருக்கவும் கூடுமோ என்னவோ?

விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று வந்தும் சின்னா இன்னும் ரஜினி ரசிகராகவே இருக்கிறார். அவரைப் பார்த்து, மாற்றம் என்பது மாறாதது என்ற தத்துவம் தோற்றுப் போய் விட்டது.

இப்போது ரஜினி வேஷத்தோடு ஆடல் பாடல் குழுக்களுக்குப் போய் வருகிறார். ரஜினி போல நடை நடப்பார். சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பார். இங்கே பாரு கண்ணா… எனத் தொடங்கி ரஜினி வசனங்களைச் சொல்வார். அவர் நடக்க, வசனம் சொல்ல சொல்ல ரஜினிக்கான பிஜிஎம் இசை அதிகபட்ச ஓசையில் ஒலித்துக் கொண்டிருக்கும். அவர் சொல்லும் ரஜினி வசனங்களில் ஆண்டவன் கொடுக்குறதை யாரும் தடுக்க முடியாது என்ற வசனமும் ஒன்று. எனக்கென்னவோ அவருக்கு ஆண்டவன் கொடுக்க நினைத்ததை ரஜினி தடுத்து விட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ரஜினி வேஷம் கட்டி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கிறார். மற்ற நாட்களில் டாஸ்மாக்கே கதியெனக் கிடக்கிறார். ரஜினி படம் ரிலீஸானால் பத்து நாட்களுக்கு திரையரங்கிலே கிடக்கிறார். எப்போதாவது என்னைப் பார்த்தால் இருபது ரூபாய் கேட்கிறார். ஏன் அண்ணே உங்களை ரஜினி காப்பாற்றவே இல்லை என்றால், ரஜினியைப் போல ஹா, ஹா என்று ஆரம்பித்துப் பெக்கெ பெக்கே என்று சிரிப்பார்.

கண்ணா! தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்னா உன்னுடைய வாழ்க்கை உன்னுடைய கையில். புரியுதா? உன்னுடைய கடமையை நீ செய்யணும் என்பார். நீங்கள் மட்டும் ஏன் உங்களுடைய வாழ்க்கையை ரஜினியின் கையில் கொடுத்தீர்கள் சின்னா? நீங்கள் மட்டும் ஏன் உங்கள் கடமையைச் செய்யாமல் ரஜினியின் கடமையைச் செய்கிறீர்கள்? என்று கேட்கத் தோன்றும். அவர் வயதுக்கு மரியாதையா? அல்லது தன்னைத் தொலைத்து விட்ட மனிதன் இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்வானா என்ற சந்தேகமா என்று தெரியவில்லை. நான் அந்தக் கேள்விகளைக் கேட்டதே இல்லை.

பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே இருபது ரூபாய்க்கு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுப்பேன். அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டது போல என்னைப் பார்த்து, நீ இங்கே இருந்து யோசிக்கிறே தெரியுமா என்று தலையில் விரலை வைத்துக் காட்டி விட்டு, நான் இங்கே இருந்து யோசிக்கிறேன் என்று இதயத்திற்கு அருகில் விரலை வைத்துக் காட்டுவார்.

அந்த ரஜினி எங்கே? இந்த ரஜினி எங்கே? ஒரு ரஜினி இப்படி பல பிம்பங்களை உருவாக்கி அலைய விடுகிறதே என்ற கவலையை எப்படிப் போக்கிக் கொள்வது என்று தெரியவில்லை. ரஜினிக்கள் இப்படி ரசிகர்களைக் கவர்வதாக நினைத்து இப்படிப் பல பைத்தியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறதே!

ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ஒருமுறை ரஜினி அரசியல் வசனம் பேசினார். சின்னா போன்ற ரஜினிக்களைப் பார்க்கும் போது ரஜினி சொன்னது உண்மையாகவும் ஆகிப் போகலாம். இந்த ரஜினி போனாலும் சின்னாக்கள் விஜய்க்காகவும் அஜித்காகவும் அடுத்தடுத்த வரப் போகும் நடிகர்களுக்காகவும் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறதே! சின்னாக்கள் உருவாகாமல் தடுக்க முடியாதா? அது தமிழ்நாட்டின் சாபக்கேடு போலிருக்கிறதே!

*****

No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...