6 May 2024

ஏன் வாசிப்புத் தேவைப்படுகிறது?

ஏன் வாசிப்புத் தேவைப்படுகிறது?

மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுவது அறிவுச் சூழலில் நல்ல மாற்றம். கல்லூரிகளும் பள்ளிகளும் கட்டாயம் வந்து பார்த்துச் செல்லும் வகையில் நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதில் கட்டாயங்களும் நிர்பந்தங்களும் இருக்கின்றன என்றாலும் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

மக்கள் வந்து பார்க்கும் அளவிற்குப் புத்தகங்களின் விற்பனை இருக்கிறதா? மக்கள் பெரும்பாலும் உணவு அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், மருத்துவப் பரிசோதனை அரங்குகள் போன்றவற்றில்தான் நிற்கிறார்கள். வந்து விட்டோம் என்பதற்காகப் புத்தக அரங்குகளை ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு புத்தகம் கூட வாங்காமல் வருவோர்களைப் பார்க்க முடிகிறது.

புத்தகங்கள் தற்போது பி.டி.எப்.களாக வாசிக்க கிடைக்கும் போது இவற்றை வாங்கி வேறு வாசிக்க வேண்டுமா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். படிப்பதற்குப் பாடப்புத்தகங்கள் இருக்கும் போது இவற்றை வேறு படிக்க வேண்டுமா என்ற கேள்வியும் இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறார்கள். ஒரு சில ஆசிரியர்களிடமும் இப்படிப்பட்ட கேள்வி தொக்கி நிற்கவே செய்கிறது.

பேராசிரியர்கள், ஆசிரியர்களாக இருப்பவர்கள் எத்தனை புத்தகங்களை வாங்குகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்தால் மாணவர்கள் ஏன் வாங்க மறுக்கிறார்கள் என்பது புரியலாம்.

வாழ்க்கைக்கான அடிப்படைகள் கிடைத்து விடும் போது புத்தகங்களைப் படிப்பதற்கான தேவை என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? ஆடு, மாடு, யானை, புலி, சிங்கம் போன்ற உயிர்களாக நம்மை நினைத்துக் கொள்வதா?

ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்கு நான் கீழே சொல்லும் காரணம் சமாதானமாகவும் இருக்கலாம். ஓரளவுக்குச் சரியான காரணமாகவும் இருக்கலாம்.

மனிதர்களின் இருத்தல் அதுவும் மனிதர்களுக்கு மத்தியில் இருத்தல் புதிரானது. அந்தப் புதிரை விடுவித்துக் கொள்ள புத்தகங்களை வாசிப்பது தவிர்க்க முடியாதது. புத்தகங்களுக்குப் பதில் காட்சித் திரைகள் போதுமென்று நினைக்கலாம். காட்சித்திரைகளைச் சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கும் சரியான பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கும் வாசிப்பு என்பதைத் தவிர்க்க முடியாது.

இந்த வாசிப்புக்கு முகநூல், டிவிட்டர், வாட்ஸ்ஆப் மட்டும் போதுமா என்றால் ஆழமான புரிதலுக்கும் நிபுணத்துவத்துக்கும் இவை எந்த அளவுக்கு உதவும் என்பது நமக்கு நாமே அவசியம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி.

ஒரு படைப்பிற்கான பின்னணியாக மட்டுமில்லாமல் வாழ்வதற்கான பின்னணியாகவும் வாசிப்பு இருக்கிறது. மொழி எனும் குறியீடு வாழ்க்கையில் உணர்வில் அறிவில் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து விட முடியாது. நீங்கள் எழுத்து வடிவில் தவிர்க்க நினைத்தாலும் பேச்சு வடிவில் அது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணிக் கொண்டுதான் இருக்கும். அந்த ரூபக் குறியீடுகளின் அரூப வளர்ச்சியை நீங்கள் வாசிப்பைக் கொண்டுதான் புரிந்து கொள்ள முடியும்.

எவ்வளவு வாசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறதா என்றால் அது சுவாசிப்பைப் போன்றதுதான். அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நீங்கள் எவ்வளவு காலம் வாழ விரும்புகிறீர்களோ அவ்வளவு காலம் சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போலத்தான் வாசிப்பும்.

ஒவ்வொரு காலத்திலும் மொழியை விதவிதமாகச் சுழற்றுபவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சுழற்றலின் விளைவாக வாழ்வை வெகு நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். நிஜமாக அப்படி இல்லையென்றாலும் அதை வைத்து அப்படி இல்லையென்கிற முடிவுக்கு வரவாவது அது அவசியமாகவும் இருக்கிறது.

ஒரு மோசமான புத்தகம் என்று ஒன்றை நீங்கள் புறக்கணித்து விடலாம். அதன் பின்னணியை அலசுவதற்காக நீங்கள் அதைப் படித்தாக வேண்டும். ஒன்று இருத்தலுக்கான விசாரணைகள் அவசியம் தேவைப்படுகின்றன என்பதால் நீங்கள் ஒரு கருத்துருவைத் தாக்கல் செய்துதான் ஆக வேண்டும். எதிர்க்கருத்துருவும் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றையும் நீங்கள் பேச்சு வடிவில் மட்டும் பதிவு செய்து பரிசீலித்து விட முடியாது. அதற்கு மொழியின் எழுத்து வடிவிலான ஒரு வடிவம் தேவைப்படுகிறது.

வாயினால் ஒரு வாதத்தை எடுத்து வைத்துக் கேட்டு நீங்கள் காலத்தை நீண்ட நேரம் வீணாக்கிக் கொண்டு இருக்க முடியாது. எழுத்தாக்கம் அதை விரைவாகச் செய்து விடும். நீங்கள் காலம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கும் வாய் மாலங்களும் ஒரு புத்தகமும் ஒன்றுதான். வாழ்நாள் முழுவதும்பேசிக் கொண்டு செய்து கொண்டிருக்க வேண்டிய ஒன்றை ஒரு புத்தகம் சில நூறு பக்கங்களில் முடித்துவிடும்.

புத்தகத்தில் மிகப்பெரிய காலச்சுருக்கம் இருக்கிறது. ஐநூறு ஆண்டு காலத்தை அதன் அத்தனை நுட்பங்களுடன் கடக்க முடியாவிட்டாலும் ஐந்து மணி நேரத்தில் நீங்கள் ஒரு வாசிப்புப் பயணத்தில் கடந்து ஒரு கடலைச் சீசாவுக்குள் அடைப்பது போல அடைத்துவிட முடியும். வேறு எதையும் விட உள்வாங்குவதற்கு கனக்கச்சிதமான வடிவம் புத்தகத்தில் இருக்கிறது.

மனிதர்கள் வாசித்துதான் மேம்பட முடியும். அதற்கான அத்தனை மேம்பாடுகளையும் புத்தகம்தான் கொண்டிருக்கிறது. அவற்றை வெறும் பேச்சிற்குள் அல்லது உரையாடலுக்குள் மட்டுமே அடக்க முடியாது. நீங்கள் வாசித்துதான் ஆக வேண்டும். அல்லது வாசிப்பதை உள்வாங்கத்தான்  வேண்டும். பார்ப்பதை, கேட்பதை உள்வாங்குவதை விட நீங்கள் அதி வேகமாக வாசித்து உள்வாங்க முடியும். இது அனுபவத்தில்தான் அதாவது வாசிப்பு அனுபவத்தில்தான் உங்களுக்குப் புரிய வரும். அந்த வகையில் உங்களால் வாசிப்பை ஒருபோதும் கைவிட முடியாது. வடிவங்களை நாம் என்ன விதமாக மாற்றினாலும் வாசிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். ஒன்று நீங்கள் வாசிக்க வேண்டும். அல்லது உங்களுக்காக ஒருவர் வாசிக்க வேண்டும். அதற்கு புத்தகம் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அதன் வடிவம் தாளாகவும் இருக்கலாம். மின்னணு வடிவாகவும் இருக்கலாம்.

மனிதராகப் பிறந்து விட்ட நீங்கள் உங்கள் இருத்தலைப் புரிந்து கொள்ள வாசிப்பதை வேறு வழியில்லாமல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

*****

No comments:

Post a Comment

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து! நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது அல்லது ஐந்து நாள் போட...