2 May 2024

அமைப்புகளின் உயிர்ப்பும் பெயர்ப்பும்

அமைப்புகளின் உயிர்ப்பும் பெயர்ப்பும்

திருமணம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள் என்று இருப்பவர்களைப் பார்க்கும் போது நான் இவர்களை அமைப்பியல்வாதிகள் என்று சொல்வேன். இவர்களை நிறுவனவாதிகள் என்று சொல்வோரும் இருக்கிறார்கள். திருமண உறவுகளைக் கட்டிக் காக்க இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் பிரயத்தனங்களும் இருக்கிறதே. அதைப் பார்க்க ரசமாக இருக்கும். சில நேரங்களில் விரசமாகவும் இருக்கும்.

இவர்களிடம் திருமணம், குடும்பம், குழந்தைகள் குறித்த ஒரு தீர்க்கமான கருத்து இருக்கும். இருப்பினும் உரையாடலுக்குப் பெரும் இடத்தைக் கொடுப்பார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உரையாடலாம். கோபப்படலாம். எடுத்தெறிந்து பேசலாம். எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. முடிவில் இவர்களின் கருத்துகளுக்கு ஒத்து வந்து விட வேண்டும். அதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. ஒரு விதத்தில் இவர்கள் சாதியவாதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் கருத்துகளுக்கு ஒத்து வந்து விட்டு நீங்கள் எத்தகைய அராஜகங்களை வேண்டுமானாலும் நிகழ்த்திக் கொள்ளலாம். அரங்கேற்றினாலும் ஆட்சேபனையில்லை. அதற்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுவார்கள். இவர்களைப் பொருத்த வரை எதிர்பார்ப்பு என்னவென்றால் இவர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது போல நடிப்பது கூட இவர்களுக்குப் போதுமானது.

அமைப்புகளும் நிறுவனங்களும் எதிர்பார்ப்பது ஏற்றுக் கொள்வதைப் போன்ற நடிப்பைத்தான். அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் அப்படித்தான் இருக்க முடியும். அது சில பல அதிகாரங்களை அறிந்தோ அறியாமலோ செலுத்திக் கொண்டு இருக்கிறது. அந்த அதிகாரங்களுக்கு ஒத்துப் போகாமல் அதற்குள் அது வாழ விடாது. அதற்குள் இருந்து கொண்டு போராடுவதை அது அனுமதிக்கிறது. அதைச் சிதைக்க அது ஒரு போதும் அனுமதிக்காது. அப்போது அது காத்திரமான தனது அதிகாரத்தை அது கையில் எடுக்கும். தன்னை அழித்துக் கொள்ள எதுதான் விருப்பப்படும்?

அமைப்பு அல்லது நிறுவனம் என்பது கூட்டமைப்புதான். சொல்லப் போனால் மனித உடலே ஒரு கூட்டமைப்பால் ஆனது. எது பார்க்கிறது என்றால் கண்ணா? மூளையா? எது கேட்கிறது என்றால் காதா? மூளையா? தொடுதலை உணர்வது எது? தோலா? மூளையா? ஒரு கூட்டமைப்புத்தான் பார்க்கிறது, கேட்கிறது, தொடுதலை உணர்கிறது. அப்படி ஒரு கூட்டமைப்புதான் அமைப்பும் நிறுவனமும். இங்கு ஒரு தவறு நடக்கிறது என்றால் விரல்களை மாற்றி மாற்றிக் காட்ட முடியும், கண் தவறாகப் பார்த்ததால்தான் மூளை தவறாகப் பொருள் கொண்டது என்பதைப் போல, பதிலுக்குக் கண் தவறாகப் பார்த்தால் என்ன? மூளை ஏன் சரியாகப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுவதைப் போல.

ஒரு தவறை நியாயப்படுத்த அமைப்புகளும் நிறுவனங்களும் தனிப்பட்ட ஒரு பார்வையை எடுக்கும். அமைப்பில் இருக்கும் ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த அமைப்பின் தவறாகாது அல்லது நிறுவனத்தின் தவறாகாது என்றே அது வாதிடும். ஒட்டுமொத்த பெருமைக்கும் அது தன்னுடைய பெயரை மட்டுமே பயன்படுத்தும் என்பது வேறு வகையிலானது.

இணைந்து வாழ நினைக்கும் போது, கூட்டாகச் சேர்ந்து நிற்க நினைக்கும் போது ஓர் அமைப்போ நிறுவனமோ உருவாகத்தான் செய்யும். அது குடும்பம் போன்று சிறிதாகவோ கட்சிகள் போன்று பெரிதாகவோ இருக்கலாம்.

ஒரு கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமாகச் சிதறுவது போலவோ, ஒரு கட்சி பல உட்கட்சிகளாக உடைவது போலவோ உள்ளுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அது ஓர் அமைப்பாகத் தன்னையறியாமல் இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணத்திற்குக் குடும்பத்தை வெறுத்து தனியாக வாழும் சிலர் இணைந்து தனித்து வாழ்வோர் எனும் ஓர் அமைப்பை உருவாக்கலாம்.

ஓர் அமைப்போ, ஒரு நிறுவனமோ உருவாகி சில விதிகளை, கட்டுபாடுகளை, நெறிமுறைகளை உருவாக்கிக்  கொள்வதாக நினைக்கிறோம். அது இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சில விதிகளுடன்தான் உருவாகிறது. பிறகு அதை நாம் மெருகேற்றிக் கொள்கிறோம், வளர்த்துக் கொள்கிறோம், அதிகப்படுத்திக் கொள்கிறோம்.

ஒவ்வோரு மனித நினைப்பும் அடிப்படையில் தனக்கான ஓர் அமைப்பை எப்படி உருவாக்குவது என்பதாகத்தான் இருக்கிறது. மனிதர்களைச் சுதந்திரமாக விட்டு விடலாம் என்றால் அது வேறு எதற்காகச் சிந்திக்கப் போகிறது? சிந்திப்பதற்காக ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. ஒரு சிந்தனை அமைப்பற்ற அமைப்பு ஒன்றைச் சிந்தித்து அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அமைப்பற்ற அமைப்பு என்ற ஓர் அமைப்பை அது தன்னையறியாமலே உருவாக்கி விடும். இங்கு எப்படி இருப்பது ஓர் அமைப்பு என்பதைத் தீர்மானிக்கிறாமோ அப்படி இல்லாதது இன்னோர் அமைப்பாகி நிற்கும்.

ஒரு வரையறைக்குள் எல்லாவற்றையும் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கும் போது வரையறை இல்லாமல் இருப்பதும் ஒரு வரையறையாகி விடும். விலக்கிக் கொண்டே போவதாகச் சொல்லலாம். விலக்கிக் கொண்டு போவது ஒரு பழக்கமாகி அதுவே உங்களை நெருங்கி விடும்.

சில முரண்பாடுகள் அடிப்படையில் மிகவும் சிக்கலாகும். அதை ஒருமைப்படுத்தி விட முடியாது. ஒருமைப்படுத்த அது பன்மை மயமாகிச் சென்று கொண்டிருக்கும். பன்மைப்படுத்த நினைக்கும் போது அது ஒருமையாகிக் கொண்டே போகும். இயக்கம் என்பது நிலையாக இருக்கும் ஒன்றில் இயங்குவது போல இருவித முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறது. தண்டவாளங்கள் நிலையாகத்தான் இருக்கின்றன. தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சாலைகள் நிலையாக இருக்க வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும் சொல்லலாம். ஒட்டுமொத்த பூமியின் இயக்கத்தோடு பார்க்கும் போது இயங்காத தண்டவாளங்களும் சாலைகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

தொடர்வண்டியில் இருக்கும் ஒருவர் நிலையாக இருப்பதாகச் சொல்லலாம். அது இயங்கிக் கொண்டிருக்கும் போது நிலையாக இருப்பவர் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார். தொடர்வண்டி நிற்கும் போது அவர் தொடர்வண்டியுடன் பூமியின் இயக்கத்தில் உள்ளார். அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்குள் நிலவும் இயக்கங்களும் இப்படித்தான்.

அமைப்புக்குள் அமைதியாக இருக்கும் ஒருவர் எந்நேரமும் புரட்சிகள் செய்யலாம். ஒரு புரட்சியாளர் அமைப்புக்குள் அமைதியாகலாம். அது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அமைப்பே சிதைந்து போகலாம். இன்னொரு அமைப்பாகவும் உருவாகலாம். சில நேரங்களில் மனித சிந்தனையின் விதிகளுக்கு அப்பாற்பட்டு அமைப்பின் விஸ்வரூபங்களும் அழிவுகளும் நிகழலாம்.

நீங்கள் திருமணம் என்ற அமைப்பை நிராகரிக்கிறீர்கள் என்றால் அதற்கு எதிரான அமைப்பை ஆதரிக்கிறீர்க்ள் என்று அர்த்தம். அமைப்பு குறித்த உடன்பாடும் மறுப்பும் இப்படி ஆகி விடும். ஆம் என்றால் இல்லை என்பதை மறுக்கிறீர்கள். இல்லை என்றால் ஆம் என்பதை மறுக்கிறீர்கள். இந்த ஆம் – இல்லை என்கிற இருமைக்குள் ஒரு கட்சியினைப் பற்றியோ அல்லது இரண்டுக்கும் இடையில் ஊடாடியபடியோ நீங்கள் அமைப்பில் நின்றோ விலகியோ பயணிக்க வேண்டியதைத் தவிர வேறு வழிகள் இருக்காது.

ஒன்று நீங்கள் ஊர் போய்ச் சேர வேண்டும். ஊர் போய்ச் சேராவிட்டாலும் நீங்கள் இருப்பதும் ஓர் ஊர்தான். இதுதான் நிலைமை. நீங்கள் அடைந்து விட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. அடையவில்லை என்று மறுதலித்து விடவும் முடியாது. உங்கள் பார்வையின் மூலம், தர்க்க்ததின் மூலம் நீங்கள் நியாயப்படுத்தலாம். அது ஒரு வகை நியாயப்படுத்தலாக இருக்கும். மாறான நியாயப்படுத்தலை நீங்கள் மறுத்தாலும் அதுவும் இருந்தே தீரும்.

இதில் நீங்கள் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். புரிந்து கொண்டு ஊடாடலாம். ஒன்றை நடந்து முடிந்த பிறகே அதற்கான முழுமையை நீங்கள் கொடுக்க முடியும். நடப்பதற்கு முன்னே தீர்மானிக்க நினைக்காதீர்கள். மதில் மேல் செல்லும் பூனைக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறது. அதை உங்களின் முன் முடிவுகளால் அதிகாரம் செய்ய நினைக்காதீர்கள். அமைப்புகள் அல்லது நிறுவனங்களின் மதில்களுக்கும் அதன் மேல் நிற்கும் மனிதர்களுக்கும் இது சில வகைகளில் பொருந்தவே செய்யும்.

*****

1 comment:

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...