29 Apr 2024

ரசனையின் சேதாரம்

ரசனையின் சேதாரம்

ஒரு லாரி வந்து மோதுகிறது. அது ஒரு காருக்கு எப்படி இருக்கும்? கார் குட்டிக்கரணம் அடிக்கிறது. காரின் சேதாரமே பார்க்க பயங்கரமாக இருக்கும் போது கதையின் நாயகன் சாதாரண காயங்களுடன் காரிலிருந்து வெளியே வருகிறான். கையில் மட்டும் காயம். அது ஏன் கையில் மட்டும் காயம்? ஒரு துணியை அதுவும் வெள்ளைத் துணியை எங்கு வைத்திருந்தானோ எடுத்துச் சுற்றிக் கொள்கிறான். அதைச் சுற்றிக் கொள்வதற்காகத்தான் அந்தக் காயமோ என்னவோ!

ஏழெட்டுக் குட்டிக்கரணம் அடித்த வண்டியிலிருந்து இப்படிக் காயம் படாமல் தப்பிப்பதே பெரிய ஆச்சரியம். இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும்? அதிலிருந்து மீள்வது சாமானியமா? அதிர்ஷ்டவஷமாக மீண்டாலும் தலைகீழாகக் கிடக்கும் கார் அப்படியே கிடக்கிறது. எங்கிருந்து எப்போது இன்னொரு கார் வந்ததோ? அதில் ஏறிக் கொண்டு கதையின் நாயகன் தன்னுடைய காரை மோதிய லாரியை நினைவுபடுத்திக் கொண்டு அதுவும் குறிப்பாக லாரியின் எண்ணுடன் தன் மீது மோதிய லாரி டிரைவரின் முகத்தை வரை நினைவில் கொண்டு தேடிப் போகிறான். ஆனால், அவன் மருத்துவமனைக்குத்தானே போக வேண்டும்.

மருத்துவமனையில் என்ன இருக்கப் போகிறது? குளுக்கோஸ் பாட்டில்களும் மருந்துகளும்தானே. அது யாருக்கு வேண்டும்? கதை நாயகனுக்கு வேண்டியதெல்லாம் வில்லன்களும் அடியாட்களும் அவர்களுடனான சண்டைகளும். அப்படியும் ஓர  வஞ்சனையாகச் சொல்லி விட முடியாது. இந்த வேண்டியன எல்லாம் கதை நாயகனுடைய ரசிர்களுக்கு வேண்டியன. கதை நாயகனுக்கான பிம்பத்துக்கு வேண்டியன.

தன் காரை மோதிய லாரி எங்கே போயிருக்கும் என்பதையும் கதை நாயகனால் கணிக்க முடிகிறது. அவன் அந்த இடத்துக்குப் போகிறான். தன் காரை மோதிய லாரியைப் பார்க்கிறான். லாரியைச் செலுத்திய டிரைவரை ஒரு ஓட்டலுக்குள் அல்லது மோட்டலுக்குள் கண்டுபிடித்துப் புரட்டிப் புரட்டி எடுக்கிறான்.

ஏன் என் மீது மோதினாய் என்று கதை நாயகன் கேட்கிறான். அப்படியே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டு எப்படி நடுரோட்டிற்கு வந்தார்களோ? அந்த லாரி டிரைவரை இன்னொரு லாரி அடித்துப் போட்டு விட்டு போகிறது. இது முற்பகல் செய்வது பிற்பகலில் விளைவதாக இருக்கலாம். அல்லது எதார்த்தமாகவும் இருக்கலாம். வில்லனுக்கெல்லாம் வில்லனான இன்னொரு பெரிய வில்லனின் கைங்கர்யமாகவும் இருக்கலாம். லாரியில் அடிபடுபவன் நேராகத் தூக்கி எறியப்படுவானா? அல்லது கிரிக்கெட் மட்டையில் பட்ட பந்தைப் பக்கவாட்டில் ஆட்டக்காரன் விளாசுவதைப் போலப் பக்கவாட்டில் தூக்கி எறியப்படுவானா? லாரி டிரைவர்காரன் பக்கவாட்டில் தூக்கி வீசப்படுகிறான்.

இப்படி அடிபட்டுக் கிடக்கும் லாரி டிரைவரிடம் கதைநாயகன் கேட்கிறான், தன்னைக் கொல்ல ஆள் அனுப்பியது யார் என்று?

நான்தான்டா! உன்னைக் கொல்ல ஆள் அனுப்பியது நான்தான்டா! என்று கத்த வேண்டும் போலிருந்தது.

திரையில் இது ஒரு பிரச்சனை. வில்லனின் ஆட்கள் கதைநாயகனைச் சரியாகக் கொல்லாமல் விட்டு விட்டு ரசிர்களுக்குத் தீம்பு தேடிக் கொடுத்து விடுவார்கள். இதற்குப் பதில் கதை நாயகனின் காரின் மேல் மோதும் லாரி சுக்கல் சுக்கலாகச் சிதறுவது போலக் காட்சியை அமைக்கலாம். அடுத்து வரும் திரைகளில் நாம் இதையும் எதிர்பார்க்கலாம். இயக்குநர்களுக்குத் தேவையானது எல்லாம் ரசிகர்களை வாயைப் பிளக்க வைக்கும் புதுமைதான். காருக்கோ, லாரிக்கோ, ரசிக்கும் மனதின் தர்க்கத்துக்கோ சேதாரம் ஏற்படுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...