15 Apr 2024

திட்டமிட்டுத் திட்டங்களில் வெற்றி பெற…

திட்டமிட்டுத் திட்டங்களில் வெற்றி பெற…

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்வதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றினால் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்.

செயலைச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய செயல் குறித்துத் திட்டமிடுங்கள். உங்கள் திட்டங்களைப் பட்டியல் போடுங்கள். அதாவது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயல்முறைகள் மற்றும் திட்டத்திற்குத் தேவையான பொருட்கள், ஆட்கள், பொருளாதார பலம், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று எல்லாவற்றையும் பட்டியல் இடுங்கள்.

பட்டியலில் உள்ளவற்றை உங்களால் எந்த அளவுக்குத் திரட்ட முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்கேற்ப இப்போது திட்டத்தை மீண்டும் மறுபரிசீலனை செய்து மறுவரையறை செய்யுங்கள். இதன்படி நீங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள், ஆட்கள், பொருளாதார பலம், உதவிகள், ஒருங்கிணைப்புகள் போன்றவற்றைச் செவ்வனே திரட்ட முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் போது உருவாகப் போகும் தடைகள், குறுக்கீடுகள், எதிர்ப்புகள் குறித்தும் உத்தேசமாகச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்து தீர்வுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தும் போது உங்களுக்கு உதவுவதற்கான மற்றும் ஆலோசனை சொல்வதற்கான, நம்பிக்கை தருவதற்கான நூல்கள் மற்றும் மனிதர்களும் உங்களுக்குத் தேவை. அவர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்குங்கள். உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதால் விளையப் போகும் மாற்றங்களையும் நன்மைகளையும் உங்களுக்கு நீங்களே தினம் தினம் சொல்லிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே சொன்னதைப் போலவே அப்படியே மற்றவர்களுக்கும் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதால் விளையும் மாற்றங்களையும் நன்மைகளையும் தினம் தினம் எடுத்துச் சொல்லுங்கள்.

உங்களுக்கும் உங்கள் திட்டத்திற்கும் எப்போதும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொண்டே இருங்கள். நீங்கள் வேறு உங்கள் திட்டம் வேறு என்பது போல இருக்காதீர்கள். அதைப் போலவே உங்கள் திட்டத்தோடு தொடர்புடையவர்களுக்கும் அந்தத் திட்டத்தோடு அவர்களுக்கு ஓர் உணர்வுபூர்வமான பந்தத்தை உருவாக்கிக் கொண்டு இருங்கள். திட்டம் வேறு அவர்கள் வேறு என்று நினைக்கும்படி விட்டு விடாதீர்கள்.

அடிக்கடி உங்கள் திட்டப் படிநிலைகளையும் திட்டம் செயலாவதையும் சரிபாருங்கள். அவ்வபோது தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள். உங்களது படைப்பாற்றல் திறனை உங்கள் திட்டத்தின் செயல்முறைகளில் கொண்டு வாருங்கள். இதற்காக உங்கள் திட்டத்தின் படிநிலைகளை அவ்வபோது எடுத்துப் பாருங்கள். அதைச் செம்மைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை யோசிப்பதற்கு ஒரு நாளில் அரை மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் திட்டம் அதன் விளைவுகள் பற்றி உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளுங்கள். மற்றவர்களிடமும் இது குறித்துப் பேசுங்கள். அப்படிப் பேசும் போது உங்கள் தன்னம்பிக்கையும் பெருமிதமும் அதில் எப்போதும் வெளிப்படட்டும்.

உங்கள் திட்டம் விமர்சிக்கப்படும் போது காது கொடுத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு நீங்கள் எதிர் விமர்சனத்தை முன் வைக்காதீர்கள். உங்கள் திட்டத்தின் போக்கே விமர்சனங்களுக்குப் பதில் சொல்லுமா என்று பாருங்கள். அல்லது உங்கள் திட்டத்தின் செயல் வடிவத்தின் மூலமே விமர்சனங்களுக்கான பதிலைச் சொல்லுங்கள், வார்த்தைகளால் அல்ல. விமர்சனங்களுக்கு வார்த்தைகளின் மூலமாகப் பதில் சொல்வதை விட செயல் வடிவில் பதில் சொல்வதுதான் சிறந்தது.

திட்டத்தின் படிநிலைகளைச் செயல்படுத்தும் போது தாமதமாகலாம், குறுக்கீடுகள் நேரிடலாம், எதிர்ப்புகள் உண்டாகலாம். அப்போது பொறுமையாக இருங்கள். மென்மையாகப் பேசுங்கள். நம்பிக்கையோடு அணுகுங்கள். திட்டத்தின் ஏதோ ஒரு படிநிலையில் நீங்கள் தாமதத்தையோ, குறுக்கீடுகளையோ, எதிர்ப்புகளையோ எதிர்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கும். தவிர்க்க முடியாத இந்த எதிர்நிலையை உங்களது அணுகுமுறையால்தான் மாற்ற வேண்டியிருக்கும். அந்த அணுகுமுறையானது ஆக்கப்பூர்வமானதாகவும் நிதானமானதாகவும் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும்.

தாமதத்தைக் கண்டு கோபப்பட்டாலோ, குறுக்கீடுகளைக் கண்டு பதற்றமானாலோ, எதிர்ப்புகளைக் கண்டு எதிர்த்தாலோ நீங்கள் திட்டத்தின் அடுத்தடுத்த படிநிலைகளைத் தவற விட்டவராவீர்கள். திட்டத்தை மறந்தவர்களாகவும் ஆவீர்கள். ஒரு திட்டத்தைச் செயலாக்கம் செய்பவருக்குக் கோபம், பதற்றம், எதிர்க்கும் தன்மை ஆகியவை தேவையற்றவையாகும்.

நீங்கள் பொறுமையாக இருப்பதால் கூட பல நேரங்களில் தாமதங்களும், குறுக்கீடுகளும், எதிர்ப்புகளும் தாமாகவே நீங்கி விடுவதும் உண்டு. அவசரப்படுவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, பரபரப்பாவதாலோ அவை நீங்குவதில்லை என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு திட்டத்தின் செயலாக்கம் என்பது விதை விதைத்து மலர் மலர்வதைப் போலத்தான், கனிகளாகக் காய்த்துத் தொங்குவதைப் போலத்தான். அதற்கு நீங்கள் காத்திருக்கவும் வேண்டும், பொறுத்திருக்கவும் வேண்டும். உங்கள் மன வேகத்தை மலர்வதற்கு முன்பாக, கனிவதற்கு முன்பாகக் காட்டி விடக் கூடாது. ஒவ்வொன்றும் நிறைவேறுவதற்கு அதற்கே உரிய காலம் இருக்கிறது என்பதை அறிந்து பொறுத்திருக்க வேண்டிய நிலைமைகளும் இருக்கின்றன என்பதை அறிந்து நிதானமாகவும் ஆக்கப்பூர்வமான மனநிலையோடும் செயல்பட்டால் உங்கள் திட்டங்கள் அனைத்திலும் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அத்துடன்,

“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.”                          (குறள், 471)

என்ற குறட்பாவையும் மனதில் எழுதி வைத்துக் கொண்டு, இக்குறட்பாவை அவ்வபோது மனக்கண்ணால் பார்த்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...