11 Apr 2024

உரிமைக்குரல்

உரிமைக்குரல்

அருந்ததி ஆத்தா படுத்த படுக்கையாகி விட்டது. ஊரில் எத்தனையோ பேருக்கு அது வைத்தியம் பார்த்திருக்கிறது. எல்லாம் கைவைத்தியம்தான். அது தற்போது பாட்டியாக இருப்பதால் பாட்டி வைத்தியம் என்றும் சொல்லலாம். மருத்துவர்களிடம் காட்டி ஊசிப் போடாத பல பெண்களுக்கு அருந்ததி ஆத்தாதான் அப்போது மருத்துவர். இப்போது அருந்ததி ஆத்தாவே ஊசி போட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை மருத்துவர் வந்து பார்த்து ஊசி போட்டு விட்டு மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து விட்டுப் போகிறார்.

எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன் பாத்தியா என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கேட்கிறது அருந்ததி ஆத்தா. காலம் அருந்ததி ஆத்தாவை உருக்குழைத்து விட்டது. முன்பு போல அதனால் சேலையைக் கட்ட முடியவில்லை. மேலே ஜாக்கெட்டும் கீழே பாவாடையும்தான் இப்போது அதன் உடை. சேலையைக் கட்டிக் கொசுவத்தைச் செருகிக் கம்பீரமாக இருக்கும் அதன் அந்தக் காலத்து நடை.

பெரும்பாலும் இப்போது ஆத்தா படுத்தே கிடக்கிறது. எப்போதாவது கம்பை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி ஒரு நடை. தெருவில் கொஞ்ச தூரம் ஒரு நடை. அதற்குள் சாலையில் குறுக்கும் மறுக்குமாக வேகமாகச் செல்லும் இரு சக்கர வாகனங்களைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் போய் முடங்கி விடுகிறது. நம்மள அடிச்சுப் போடுறதுக்குன்னே வண்டியில வருவானுவோ போலருக்கு என்ற அலுத்த குரலும் அதனிடமிருந்து வந்து விடுகிறது.

தெருவில் வருவோர் போவோரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டு மற்ற நேரங்களில் திண்ணையில் படுத்துக் கிடக்கிறது. அதன் குரலுக்கு காது கொடுப்போர் கம்மி. வேறு வேலையில்லை இந்தக் கிழவிக்கு என்று திட்டிக் கொண்டு போவோர் அதிகம்.

அண்மையில் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்  போவதாக அறிவிக்கப்பட்ட போது அருந்ததி ஆத்தாவுக்கும் ஆசை, அரசாங்கம் அறிவிக்கும் அந்தத் தொகையை எப்படியாவது வாங்கி மகனுக்கும் மருமகளுக்கும் கொடுத்து விட வேண்டும் என்று. அதுதான் இப்போது அந்தக் குடும்பத்தின் குடும்பத் தலைவி. உண்ண உடுத்த குறையில்லாத நிலைதான் என்றாலும் இன்னும் இரண்டு காசு வந்தால் அதற்கான தேவையுள்ள நிலையில்தான் இருக்கிறது அருந்ததி ஆத்தாவின் குடும்பம்.

ஊரில் பெண்கள் கிளம்பியதும் அதுவும் கிளம்பியது. ரொம்ப காலத்துக்குப் பிறகு இப்போதுதான் அது சேலையைக் கட்டிக் கொண்டு கம்பை ஊன்றிக் கொண்டு கிளம்பியது. யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தனியொரு ஆளாகப் போய் அதற்கு விண்ணப்பித்து விட வேண்டும் என்ற வைராக்கியமும் அதற்கு இருந்தது.

பணம்ன்னதும் பார்த்தியா கிழவிக்கு தெம்பு வந்துடுச்சே என்று ஊர் சனங்கள் பேச ஆரம்பித்து விட்டன. அருந்ததி ஆத்தா போவதை ஊரு சனமே வீட்டின் வெளியே நின்று வேடிக்கை பார்த்தது.

பாதி தூரம் போனதும் அருந்ததி ஆத்தா என்ன நினைத்ததோ திரும்பி வர ஆரம்பித்து விட்டது. என்ன கிழவி இப்படித் திரும்பி வருகிறதே என்று ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்ததும் என்னால நடந்து போக முடியலைப்பா, உசுரு போறதைப் போல இருக்கு, வலி குத்திக் குடையுது, போவ முடியாமப் போயி அதெ வாங்கி என்ன ஆவப் போவுதுண்ணு தோணுச்சு, அதாங் திரும்பிட்டேன் என்றது.

கிழவியை ஒரு மாதிரியாகப் பார்த்த எல்லாருக்கும் பாவமாகப் போய் விட்டது. வண்டியில் வைத்து அழைத்துப் போகட்டுமா என்று கேட்ட போது அதெல்லாம் வேண்டாம் என்று வீராப்பாக வீட்டை நோக்கி கம்பை ஊன்றியபடி முணகிக் கொண்டே வந்து விட்டது. இதைக் கேட்ட எல்லாருக்கும் இப்போது பரிதாபமாகப் போய் விட்டது. வீட்டிற்கு வந்ததும் மருமகள் அழைத்துப் போகட்டுமா என்ற கேட்ட போதும் வேண்டாம் என்று சொல்லி விட்டது. உடம்பு போனால் என்ன மனதில் இன்னும் சில வீராப்பு குறைந்து விடவில்லை அதுக்கு.

அப்புறம் என்ன நடந்தது என்றால், மதியம் வேலையை முடித்து விட்டு மகன் வந்த பிறகு மகனுடன் வண்டியில் போய் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தைக் கொடுத்து விட்டு வந்தது.

என்னமோப்பா மொதல்ல வாங்கணும்ன்னு தோணுச்சு. நடந்துப் பார்த்தா முடியலன்னப்போ வேண்டாம்ன்னு தோணுச்சு. இவன் வந்தா இவனெப் பாக்குறப்போ ஏதோ இவன் செலவுக்கு ஆகும்ன்னு பல்லைக் கடிச்சிட்டுப் போயிட்டு வரணும்ன்னு தோணுச்சு. அதாங் கௌம்பிப் போய் பண்ணிட்டு வந்துட்டேன். சருகாகக் கெடக்குற காலத்துலயும் எருவாக எதாச்சும் உபயோகம் இருக்கணும்ல்ல. படுக்க வெச்சு சோறு போடுறவனுக்கு கொடுக்க எங்கிட்டெயும் ஆயிரம் காசு இருக்கட்டும்ன்னு அரசாங்கக்காரன் கொடுக்குறதெ ஏன் விடணும்ன்னு தோணுச்சு. அதாங் போய்ட்டு வந்துட்டேன் என்றது அருந்ததி ஆத்தா. வண்டியில் போய் விட்டு வந்த வலியும் களைப்பும் அதன் உடலில் இன்னும் இருந்தது. தள்ளாத காலத்திலும் ஏதோ அலைக்கழிப்பு அதன் மனதிலும் இருந்தது.

*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...