6 Mar 2024

காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து வைக்க புகார்!

காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து வைக்க புகார்!

எனக்கு இரண்டு தாய்மாமன்கள். என் தாத்தா முதல் மாமாவுக்கு பல இடங்களில் அலைந்து திரிந்து பெண் பார்த்துத் திருமணம் செய்வித்தார். இரண்டாவது மாமாவுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று சொல்லி விட்டார். மாமா-2வானது அதுவாகப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டாலும் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தடலடியாக ஒரு போடு போட்டு விட்டார்.

என்னய்யா இப்படி சொல்லிட்டா எப்படி? பிற சாதி பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? தாத்தாவிடம் ஆளாளுக்கு இப்படி மல்லு கட்டினார்கள்.

அவன் எந்தச் சாதி பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வந்தாலும் சரிதான். தான் பண்ணி வைக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் தாத்தா. யாராவது மாமா-2வின் கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்தால், நீங்களே பார்த்து செய்து வைத்து விடுங்கள் என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதாகப் பேசுவார். பணத்திற்கு ஓகையூர் வயலை விற்றுத் தருகிறேன், செய்து வையுங்கள் என்று சொல்லி, கல்யாணப் பேச்சை எடுத்த ஆளை கதி கலங்க செய்து விடுவார்.

தாத்தா உயிரோடு இருந்த வரை மாமா-2வுக்குக் கல்யாணம் நடக்கவில்லை. தாத்தா பரலோகம் போன பிறகுதான் மாமா-2வுக்குக் கல்யாணம் நடந்தது.

ஏன் தாத்தா அப்படி இருந்தார் என்பதற்கு அவரிடம் வலுவான காரணம் இருந்தது. யாருக்குக் கல்யாணம் செய்து வைத்தால் ஒழுங்காகக் குடும்பம் நடத்துவானோ அவனுக்குத்தான் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பது தாத்தாவின் கொள்கை. தாத்தாவின் கொள்கையின்படி மாமா-2வுக்கு அந்தத் தகுதி கிடையாது. அவரது வார்த்தையில் சொன்னால் அருகதை கிடையாது. தான் திருமணம் செய்விக்க விரும்பவில்லையே தவிர, மாமா-2வே திருமணம் செய்து கொள்வதையும் அவர் தடுக்கவில்லை. மாமா-2 திருமணம் செய்து அதற்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

மாமா-2வும் அதற்காகக் கவலைப்படவில்லை. கல்யாணம் ஆகாமல் கல்யாண வாழ்வை எப்படி அனுபவிக்க வேண்டுமோ அப்படி அனுபவித்துக் கொண்டிருந்தது.

இப்போது எதற்கு இந்தச் சம்பவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்கிறீர்களா? நீங்கள் சேலம் மாவட்டத்திலிருந்து இப்படி ஒரு வித்தியாசமான செய்தியைக் கேள்விபட்டீர்களா? பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்று 25 வயது வாலிபரின் புகார் செய்தி அது. இன்றைய இளைஞர்களின் பொதுவான புகார்தானே இது என்கிறீர்களா? அவர் அக்கம் பக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் அந்தப் புகாரோடு நிறுத்திக் கொள்ளவில்லை. காவல் நிலையத்திலேயே புகார் கொடுத்து விட்டார் என்பதுதான் செய்தியை வித்தியாசமாக ஆக்குகிறது.

என் மாமா-2 இப்படி ஒரு புகார் செய்திருந்தால் தாத்தா என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன்.

எதற்கும் மசியாத ஆள் அவர். காவல் நிலையத்திற்குப் போய், அடி செருப்பால என்றுதான் முதல் வார்த்தையைப் பிரயோகித்திருப்பார். அடுத்ததாக இனி அந்த நாய் வீட்டுப் பக்கம் வரக் கூடாது என்று பயங்கர வாக்கியத்தைப் பிரயோகித்திருப்பார். காவலர்களைப் பார்த்து எது எதையோ தேடிக் கண்டுபிடிக்கிறீர்கள், இந்த எடுபட்ட பயலுக்கு ஒரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து கட்டி வையுங்கள். அந்தச் சம்பவத்துக்குத்  தப்பித்தவறி என்னைக் கூப்பிட்டு விடாதீர்கள் என்று சொல்லி விட்டு வந்திருப்பார்.

என் தாத்தாவை அடிக்கடி நான் நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம், என் தாத்தாவை அங்கே வைத்து என்னை இங்கே வைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் எல்லாம் என்னைப் பார்த்துத் திட்டுவதுதான். உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்கிறார்கள். என்னையும் தாத்தாவையும் சேர்த்தால் இரண்டு பேர்.

உங்களுக்கு இப்படி ஏதேனும் வித்தியாசமான சம்பவங்கள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். அதையும் கேட்டு வைப்போம்.

*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...