7 Mar 2024

எது சரியான செலவு அணுகுமுறை?

எது சரியான செலவு அணுகுமுறை?

ஒரு ரூபாயைச் சேமிப்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்குச் சமம். ஒரு ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தினாலும் அப்படித்தான். அதுதான் பண சாமர்த்தியம். நாம் சாமர்த்தியமாக மிச்சப்படுத்தும் பணம் நிஜமாக மிச்சமாகிறதா, இன்னும் அதிகம் செலவு வைக்கிறதா, மிச்சமானது வீணாகிறதா என்பதை மிச்சம் செய்த பின்னும் தொடர்ந்து சென்று ஆய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் எது சரியான செலவு அணுகுமுறை என்பது தெரிய வரும். நாம் சரியாகத்தான மிச்சம் செய்கிறோமா அல்லது தவறாக மிச்சம் செய்கிறோமா என்பதும் புரிய வரும்.

இதை எப்படி ஆய்ந்து பார்ப்பது? கீழே உள்ள வழிமுறைகள் உங்கள் தொடர் ஆய்வுக்கு உதவும்.

மொத்தமாக வாங்குவதா?

சில்லரையாக வாங்குவதா?

மொத்தமாகப் பொருட்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும். மொத்தமாக வாங்கிய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்துகிறோமா என்பதைப் பொருத்துதான் அந்தப் பணம் மிச்சமாகிறதா என்பதைக் கணிக்க முடியும். மொத்தமாக வாங்குவதால் சில பொருட்கள் பயன்படுத்தப்படாமல் காலம் கடந்து காலவதியாகி விடும் சாத்தியமும் இருக்கிறது. இப்போது மிச்சப்படுத்திய பணம் வீணாகி அநாவசியமாகி விடும்தானே?

தேவையான அளவு சில்லரையாக வாங்கினால் சிறிது கூடுதல் பணம் செலவானாலும் அதை முழுமையாகப் பயன்படுத்தி விடுவதால் அதில் எவ்வித பண இழப்பும் இல்லை.

ஆகவே எந்தெந்த பொருட்களை மொத்தமாக வாங்க வேண்டும், எந்தெந்த பொருட்களைச் சில்லரையில் வாங்க வேண்டும் என்பது குறித்த தெளிவு அவசியமாகிறது. இந்தத் தெளிவின்படி பொருட்களை வாங்குவதுதான் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சூட்சமம்.

மலிவு விலையில் வாங்குவதா?

கத்திரிக்காய் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கி வற்றல் போடலாம். எலுமிச்சை மலிவாகக் கிடைக்கும் காலங்களில் வாங்கி ஊறுகாய் போடலாம். மலிவாகக் கிடைக்கும் காலங்களில் வாங்கினாலும் பொருளின் தரத்துக்கு எந்த வித பழுதும் இல்லாமல் வாங்க வேண்டும். மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக பூச்சிக் கத்திரிக்காய்களாக வாங்கி வற்றல் போடுவதில் என்ன புத்திசாலித்தனம் இருக்க முடியும்?

கத்திரிக்காய்க்குப் பொருந்தும் இந்த மலிவு உத்தி அத்தனைப் பொருட்களுக்கும் பொருந்தும். மலிவு விலை பொருளொன்று வாங்கி அது தொடர்ந்து பழுதாகி அதற்கான பழுது நீக்கச் செலவு அதிகரித்துக் கொண்டே போனால், தரமான பொருளைச் சரியான விலையில் வாங்குவதுதானே சரியாக இருக்க முடியும்.

மலிவு விலைப் பொருட்களின் தரம் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலிவு விலையில் பொருட்களை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. ஆக இந்த விசயத்தில் தரமான பொருட்களைச் சற்றுக் கூடுதலான விலையில் வாங்குவதுதான் பணத்தை மிச்சப்படுத்துவதாக இருக்க முடியும்.

குருட்டாம் போக்கான கணக்கில் வாங்குவதா?

சில நேரங்களில் என்றில்லை பல நேரங்களில் குருட்டாம் போக்கான கணக்கில் பொருட்களை வாங்குவது உண்டு. உதாரணமாக வாடகைச் செலவினத்தைக் கருத்தில் கொண்டு மகிழுந்து (கார்) வாங்குபவர்கள் இருக்கிறார்கள். பிறகு எரிபொருள் செலவினத்தைப் பார்த்து மகிழுந்தை அதிகம் பயன்படுத்தாமல் போட்டு விடுபவர்கள் உண்டு.

வீட்டு வாடகையைக் கருத்தில் கொண்டு அதற்காகவே வீடு வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.

வீடு, மகிழுந்து இவற்றின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவினங்களை எடுத்துக் கொண்டால் தேவைக்கேற்ப வாடகையாக அமர்த்திக் கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்.

உதாரணமாக வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பணி நிமித்தம் மாறுதல் ஏற்படும் போது நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் வீடு குறித்த கவலையில்லாமல் உங்கள் மாறுதல் இடத்திற்கு அருகே இன்னொரு வீட்டை வாடகையில் அமர்த்திக் கொள்ள முடியும். அப்படி அமர்த்திக் கொண்டால் நீங்கள் சென்று வர உங்களுக்கு வாகன வசதி கூட தேவையில்லாமல் போய் விடும்.

இங்கே எது புத்திசாலித்தனம் என்பது வேறுபடுகிறது அல்லவா!

எவ்வளவு பொருட்களை வாங்குவது?

சிக்கனமாக இருப்பதாக நினைப்பவர்கள், பொருட்களை வாங்குவதில் பணத்தை மிச்சம் செய்பவர்கள் என்று நாம் கருதுபவர்களின் வீட்டைப் பார்த்தால் ஏகப்பட்ட பொருட்கள் நிரம்பியதாக இருக்கிறது. அவ்வளவு பொருட்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தால் அப்படியும் இருப்பதில்லை. நண்பர்கள் வாங்கினார்கள், உறவினர்கள் வாங்கினார்கள் அதனால் வாங்கியது என்று ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். அந்தஸ்து, கௌரவம் என்று ஏதேதோ நினைத்துக் கொண்டு வாங்கியிருக்கிறார்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை பொருளை வாங்கும் போது அதற்கு பராமரிப்புச் செலவு இருப்பதைக் கணக்கில் கொண்டே வாங்குங்கள். இக்காலத்தில் பாலையோ, தயிரையோ, குளிர்பானங்களையோ, தோசை மாவையோ வைப்பதற்காக குளிர்சாதனப்பெட்டி வாங்க வேண்டிய அவசியமே இல்லை. தெருவுக்குத் தெரு மளிகைக்கடைகள் வந்து விட்டக் காலத்தில் அவற்றை அவ்வபோது தேவைக்கேற்ப இருப்பு வைக்காமல் வெகு சுலபமாக வாங்கிக் கொள்ள முடியும்.

இப்போது யோசித்துப் பாருங்கள்!

ஒரு குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் அதற்கான மின்சாரச் செலவினம், பராமரிப்புச் செலவினம் என்று இரு வித செலவினங்களும் இல்லை. அது வீணாக உங்கள் வீட்டின் ஒரு மூலையை அடைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. குளிர்சாதனப் பெட்டி விசயத்தில் இதுதான் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான முடிவா என்றால் அந்த முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும் உங்கள் குடும்பத்தின் தேவைக்கேற்ப.

தேவை எனக் கருதினால் வாங்குவதா?

உங்களுக்குத் தேவையென்றால் அவசியம் தேவை எனும் நிலையில் உள்ள பொருட்களை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அவசியம் தேவை எனும் கருதும் நிலையில் உள்ள பொருட்களை அல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

தேவைக்கேற்ப ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். அநாவசியமாக ஒரு பெரிய வீட்டையோ, அடுக்கடுக்காக வீட்டு மனைகளையோ நீங்கள் கட்டவோ, வாங்கிக் குவிக்கவோ வேண்டியதில்லை. இந்தச் செயலைக் குறிப்பாக கடன் வாங்கிச் செய்ய வேண்டியதே இல்லை. அது உங்களை மாதாமாதம் கடனுக்கான தவணைத்தொகைக்காக நெருக்கடியான நிலையில் வைத்திருக்கும். உங்கள் உடல் நலனையும் மன நலனையும் பாதித்து விடும். அதற்கான மருத்துவச் செலவினம் நீங்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாத நிலையில் இருந்தால் நீங்கள் ஒரு பெரிய வீட்டைக் கட்டுவதோ, வீட்டு மனைகளை வாங்கிப் போடுவதோ – அதைச் செய்ததன் மூலமாகப் பணத்தைச் சேர்க்கவோ, பணத்தை மிச்சம் பண்ணவோ செய்யவில்லை என்பது காலம் கடந்துதான் புரியும்.

எதுதான் சரியான அணுகுமுறை?

இப்போது சொல்லுங்கள் சரியான செலவின அணுகுமுறையில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் யோசித்து விட்டீர்கள் என்பதற்காக அது சரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. யோசித்து ஒன்றைச் செய்து விட்டீர்கள் என்பதற்காகவும் அது சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. யோசனைக்குப் பின்னும் செயலுக்குப் பின்னும் மறு ஆய்வு கட்டாயம் செய்ய வேண்டும். அந்த மறு ஆய்வில் தவறுகள் புலப்பட்டால் அதைக் கட்டாயம் சரி செய்து கொள்ளத்தான் வேண்டும்.

ஆக இது இத்தோடு நின்று விடும் செயல்முறை அல்ல. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் செயல்முறை என்பதைப் புரிந்து கொண்டால் நீங்கள் சில ஆண்டுகளில் சரியான செலவின முறைக்கு வந்து விடுவீர்கள். ஆம், சரியான செலவின அணுகுமுறைக்கு வர உங்களுக்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். அது பத்தாண்டுகளாகக் கூட இருக்கலாம்.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...