சிறுகதை வாசிப்புக்கான சிறிய பட்டியல்
நான்
அநேகப் புத்தகங்களை வாசித்து முடித்து விட்டது போல நினைத்துக் கொள்பவர்கள் பலர். அப்படி
நினைத்துக் கொள்பவர்கள் என்னிடம் தமிழ்ச் சிறுகதைகளை / புதினங்களை / காப்பியங்களை
/ சிற்றிலக்கியங்களை எங்கிருந்து வாசிக்கலாம் என்று கேட்பதுண்டு. அவர்களிடம் என்னுடைய
வாசிப்புக் குறைவைக் காட்டிக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக்
கொண்டாலும் படித்த வரை ஒரு பட்டியல் தரக் கூடாதா என்று கேட்பார்கள்.
நானும்
வாசித்த வகையில் முதல்படியாக அப்படி சிறுகதைக்கான ஒரு பட்டியல் தரலாம் என்று யோசிக்கிறேன்.
இதை நீங்கள் முழுமையான பட்டியலாகக் கருதி விடக் கூடாது. என்னுடைய வாசிப்புத் தரம்,
வாசிப்புப் பிடித்தம் குறித்த ஒரு பட்டியலாகத்தான் கருதிக் கொள்ள வேண்டும். இருப்பினும்
ஒரு வாசகரின் வாசிப்பனுபவம் என்று அடிப்படையில் இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவலாம்.
தமிழ்ச் சிறுகதை வாசிப்புக்கான அடிப்படைப் பட்டியலாகவும் கொள்வதற்கான முகாந்திரமாகவும்
இப்பட்டியல் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்பட்டியலில் கூடுதலாக ஒரு சிலரைச் சேர்க்கலாம்.
இப்பட்டியலில் உள்ளவர்களைக் குறைத்து விட்டு வேறு ஒரு பட்டியலைத் தயாரிக்க முடியாது
என்று கருதுகிறேன்.
தமிழ்ச்
சிறுகதைகள் என்பவை உரைநடை வளர்ச்சியின் விளைவாக எழுந்தவை. உரைநடையின் புனைவிலக்கியம்
என்றும் இதனைச் சொல்லலாம். அதற்கு முன்பும் கதைகள் உலவிக் கொண்டுதான் இருந்தன. ராஜா
– ராணிக் கதைகள், வேதாளம் – விக்கிரமாத்தியன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன்
கதைகள், மரியாதைராமன் கதைகள் என்று பலவிதமான கதைகள் உண்டு. இவைத் தவிர செவிவழிக் கதைகள்,
கிராமியக் கதைகள், நாடோடிக் கதைகள், அனுபவக் கதைகளும் பல உண்டு. பாட்டிச் சொல்லும்
கதைகளுக்கும் தாத்தாக்கள் சொல்லும் கதைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவற்றிற்குச்
சிறுகதைக்கான அந்தஸ்தை வழங்க தற்கால தமிழ் விமரிசகர்கள் ரொம்பவே யோசிப்பார்கள்.
பெருங்காப்பியங்களான
ராமாயணமும் பாரதமும் அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிறு சிறு சம்பவங்களைக் கொண்ட சிறுகதைகளாகச்
சொல்லப்படுவதுண்டு, சிறுகதைகளாகச் சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. தீவிர வாசகர்கள் அவற்றைக்
கதைகளின் பட்டியலில் வைத்து சிறுகதைகளின் பட்டியலிலிருந்து விலக்கலாம். அப்படி விலக்கினாலும்
சொல்லப்படும் முறையால் அவை சிறுகதையாவதைப் புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ தெளிவுபடுத்தும்.
எழுத்தாளர்களிலிருந்து
தொடங்கும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியானது வ.வேசு.ஐயர் மற்றும் மகாகவி பாரதியாரிடமிருந்து
துவங்குகிறது. இருப்பினும் சிறுகதைகளை நவீனத்துவமாகத் திருப்பியப் பெருமை புதுமைப்பித்தனிடமிருந்தே
துவங்குகிறது எனலாம்.
புதுமைப்பித்தனிடமிருந்து
துவங்கி ஒரு பட்டியலைத் தர வேண்டுமானால் அதுவும் சுருக்கமான அதே நேரத்தில் முழுமையான
ஒரு பட்டியலைத் தர வேண்டும் என்றால் சிறுகதை ஆசிரியர்களின் பெயரில் ஒரு பட்டியலைப்
பின்வருமாறு பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.
1) புதுமைப்பித்தன்
சிறுகதைகள்
2) கு.ப.ராஜகோபாலன்
சிறுகதைகள்
3) தி.ஜானகிராமன்
சிறுகதைகள்
4) மௌனி
சிறுகதைகள்
5) லா.ச.ராமாமிருதம்
சிறுகதைகள்
6) கு.அழகிரிசாமி
சிறுகதைகள்
7) அசோகமித்ரன்
சிறுகதைகள்
8) சுந்தர
ராமசாமி சிறுகதைகள்
இவர்களின்
குறிப்பிட்ட சில கதைகளைச் சொல்லிச் சொல்லலாம் என்றாலும் நீங்கள் இவர்களை முழுமையாக
இவர்கள் எழுதிய அனைத்துச் சிறுகதைகளையும் படித்து முடிப்பதுதான் சரியானது என்று நினைக்கிறேன்.
ஒரு முழுமையான பார்வைக்கு அதுவே உங்களை வழிநடத்தும்.
இவைத்
தவிர வேறு சிறுகதை ஆசிரியர்களின் பட்டியலையும் தரலாம் என்றாலும் அவற்றில் இவர்களிடமிருந்து
பெறப்பட்ட ஏதோ ஒரு தாக்கத்தையும் வீச்சையும் நீங்கள் எப்படியோ கண்டுபிடித்துவிட முடியும்
என்று நினைக்கிறேன். அதாவது இவர்களின் தொடர்ச்சி அல்லது இவர்களிடமிருந்து மாறுபட்ட
முயற்சி என்ற வகையில் நீங்கள் அவற்றை வகைபடுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்ச்
சிறுகதைகளைத் துவங்கி வாசிப்பவருக்கு ஒரு வகையில் இந்தப் பட்டியல் போதுமானதுதான். இவர்களிடமிருந்து
துவங்கி மென்மேலும் தற்கால சிறுகதை ஆசிரியர்களின் பல சிறுகதைகளை வாசிக்கத் துவங்கி
விடலாம். இவர்களை வாசித்து விட்டாலே உங்களது சிறுகதை உலகம் விரிவடைந்து விடும். கூடவே
தமிழ்ச் சிறுகதைகளின் அடிப்படைப் பரப்பும் புரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் பல
சிறுகதைகளைத் தேடத் துவங்கி விடுவீர்கள். அப்படி எவ்வளவு தேடுவீர்கள், எவ்வளவு கதாசிரியர்களிடம்
போய் நிற்பீர்கள் என்பதற்குக் கணக்குக் கிடையாது என்பதால் மேற்படியான சிறிய பட்டியலோடு
நான் நிறுத்திக் கொள்கிறேன். பட்டியலை உங்களின் வாசிப்பார்வத்துக்கும் தேடலுக்கும்
ஏற்ப விரிவு செய்து கொள்ளுங்கள்.
*****
நன்று
ReplyDelete