19 Mar 2024

திரையில் தொடங்கி அரசியலில் முடியும் எதிரிணைகள்!

திரையில் தொடங்கி அரசியலில் முடியும் எதிரிணைகள்!

இப்போது விஜய் – அஜித் ரசிகர்கள் இரு பிரிவாக இருப்பது போல மற்றும் ரஜினி – கமல் ரசிர்கள் இரு பிரிவாக இருப்பது போல எம்.ஜி.ஆர். – சிவாஜி ரசிகர்களின் கால கட்டம் அது. எம்.ஜி.ஆரைப் பிடிப்பவருக்குச் சிவாஜியைப் பிடிக்காது. அது என்னய்யா எப்போதும் அழுது வடிந்து கொண்டு என்று சிவாஜியைப் பற்றிய விமர்சனத்தை முன் வைப்பார்கள். சிவாஜி ரசிகர்கள் விட மாட்டார்கள், அழுவது என்றால் அதென்னய்யா கண்களை மூடிக் கொண்டு அல்லது ஏதோ ஒரு பக்கம் திரும்பிக் கொண்டு அழுவது என்று எம்.ஜி.ஆரைப் பற்றிய விமர்சனத்தை முன் வைப்பார்கள்.

மிகையாக நடித்தால் ஆயிற்றா என்று சிவாஜியைப் பற்றியும், கத்திச் சண்டை போட்டால் ஆயிற்றா என்றா எம்.ஜி.ஆரைப் பற்றியும் மாறி மாறி விமர்சித்துக் கொள்வார்கள். அவர்கள் விமர்சிப்பதைப் பார்க்கும் போது ரொம்ப ரசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். நாமும் யாராவது ஒருவர் பக்கம் சேர்ந்து விட வேண்டும் போலத் தோன்றும். அதற்குத் தகுந்தாற் போல அந்த ரசிகர்களின் கட்சி அபிமானமும் இருக்கும். சிவாஜி ரசிகர்கள் காங்கிரஸ் கட்சி. எம்.ஜி.ஆர் ரசிர்கள் தி.மு.க. பிற்பாடு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய போது அந்தக் கட்சிக்கு மாறிக் கொண்டார்கள். சிவாஜி ரசிகர்களும் அப்படியே. அவர் கட்சி தொடங்கிய போது அதில் மாறிக் கொண்டார்கள்.

சிவாஜிக்கு பராசக்தி என்ற ஒரே படத்தின் மூலம் கிடைத்த கதாநாயக அந்தஸ்து எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை. அவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் செய்து ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின்தான் அவருக்குக் கதாநாயக அந்தஸ்து கிடைத்தது.

எம்.ஜி.ஆரின் கதாநாயக அந்தஸ்து நிரந்தரமாக இருந்தது. சிவாஜியின் கதாநாயக அந்தஸ்து நிரந்தரமாக இல்லை. சிவாஜி ஒரு கட்டத்துக்கு மேல் அண்ணன், அப்பா, தாத்தா என்று துணைப்பாத்திரங்கள் எல்லாம் செய்தார். எம்.ஜி.ஆர் கடைசி வரை கதாநாயகன்தான். பாக்கியராஜின் அவசர போலீஸ் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்ததையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

எம்.ஜி.ஆருக்கும் சில கிளாசிக் படங்கள் இருந்தன. சிவாஜிக்கும் இருக்கின்றன. இப்போதும் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோயில்  போன்ற படங்கள் எக்காலத்துக்குமான கிளாசிக் படங்கள்தான். சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், தில்லானா மோகனாம்பாள், புதிய பறவை போன்ற படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

இப்போது இவற்றையும் நடந்த நிகழ்வுகளையும் தொகுத்துப் பாருங்களேன். எம்.ஜி.ஆர். – சிவாஜி இரண்டு பேருமே அரசியலில் இருந்தார்கள். கட்சி தொடங்கினார்கள். ஜெயித்ததென்னவோ எம்.ஜி.ஆர்.தான். பிற்காலத்தில் ஏன் கட்சி தொடங்கினோம் என்று சிவாஜி வருத்தப்பட்ட சம்பவங்கள் அதிகம். சிவாஜியின் ஜோடியாக நடித்த ஜெயலலிதா அரசியலில் பிரகாசித்த போது சிவாஜி ஒடுங்கிப் போய் இருந்தார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் கல்யாணம் என்று சொல்லப்பட்டு தமிழகமே அல்லோகலப்பட்ட சுதாகரன் – விஜயலெட்சுமி திருமணத்தில் சிவாஜி தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ஒரு திரைநடிகராகச் சிவாஜி எப்போதும் சிம்மாசனத்தில்தான் இருந்தார்.

ரஜினி – கமல் விசயத்திலும் இதே போன்ற காட்சிதான் நடக்கும் என்று எதிர்பார்த்தால் ரஜினி அரசியலே வேண்டாம் என்று விலகி விட்டார். கமல் மையமாக இருப்பதாகச் சொல்லி அரசியல் கட்சி தொடங்கி நடத்துகிறார். ஆரம்பத்தில் தனித்த நின்ற அவர் தற்போது கூட்டணிக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடந்த இன்னொரு அரசியல் காட்சியையும் நாம் கவனிக்க வேண்டும். ரஜினிகாந்தா? விஜயகாந்தா? அல்லது கமலஹாசனா? விஜயகாந்தா? என்று எதிரிணைப் பட்டியலில் வந்து போன விஜயகாந்த் கட்சி தொடங்கி, கூட்டணி அமைத்து, கட்சியைக் குடும்பப் பொறுப்பில் விட்டு விட்டு மறைந்து விட்டார்.

இதற்கு அடுத்த தலைமுறையில் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி விட்டார். அஜித் அரசியல் கட்சியெல்லாம் தொடங்க மாட்டார்கள் என்று கணிக்கிறார்கள். கணிப்பை மீறியதுதான் காலம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்கடுத்த சிம்பு – தனுஷ் எனும் எதிரிணையர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்பதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது? திரையில் தொடங்கி அரசியலில் முடியும் எதிரிணையர்களே தமிழகத்தின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதில் மிகையேதுமில்லை என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...