18 Mar 2024

யாசக வாசகங்கள் & பரபரப்பைப் பஸ்பமாக்கிக் கடந்து போதல்

யாசக வாசகங்கள்

பேருந்து நிலையம் என்பது பயணியர்களும் யாசகக்காரர்களும் நிறைந்ததாகத்தான் இந்த 2023லும் இருக்கிறது. முன்பிருந்தே பேருந்துகள் வந்து பேருந்து நிலையங்கள் உருவானதிலிருந்து தற்போது புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என்று பேருந்து நிலையங்கள் ஒன்றுக்கொன்று தனிக்குடித்தனம் போன பிறகும் அப்படித்தான் இருக்கின்றது நிலைமை.

பசித்தவர்கள் பத்து ரூபாய் கேட்பதற்கு அதாவது யாசகமாகக் கேட்பதற்குத்தான் யோசிக்கிறார்கள். சரக்கு அடிப்பதற்காக யாசகம் கேட்பவர்களிடம் அந்த யோசனை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கனக்கச்சிதமாகத் தொழில்முறையாகப் பழகி விட்டாற் போல கேட்கிறார்கள். அதில் ஏதோ உரிமையும் அடங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. நாயே, ஒரு பத்து ரூபாய் கொடுக்க வக்கில்ல என்று சமயங்களில் திட்டவும் செய்கிறார்கள். இப்படி பையில் இல்லாத பத்து ரூபாய் வசவுகளை வாங்கிக் கொடுத்து விடுகிறது. யாசகம் செய்யாததற்கான பாவம் போலிருக்கிறது.

குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு யாகசம் கேட்கும் பெண்மணிகளும் இருக்கிறார்கள். பத்து வருடத்திற்கு முன்பு நான் பார்த்த ஒரு பெண்மணியின் உடம்பு, முகம் எல்லாம் தளர்ந்து விட்டது. இடுப்பில் உள்ள குழந்தை இன்னும் இரண்டு வயதோடு இருப்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

முடியாதவர்கள் உட்கார்ந்தபடி யாசகம் கேட்கிறார்கள். நோயாளிகளாகப் பட்டவர்கள் படுத்தபடியே யாசகம் கேட்கிறார்கள். இப்படிப் பலவகை யாசகக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஐயா, தர்ம மகாராஜா பணப்பைத் தொலைந்து விட்டது ஒரு நூறு ரூபாய் கொடுங்கள் யாசகம் கொடுங்கள் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். என்ன செய்வது? பையில் இருப்பதே நூறு ரூபாய். அதைக் கொடுத்து விட்டு யாசகம் கேட்பவராய் அலைவதைக் கற்பனை செய்து பார்க்கும் போது அது மாதிரியான நபர்களைக் கண்டும் காணாதது போலக் கடந்து வந்து பையைத் தொட்டுத் தடவி பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

*****

சோம்பேறியாக்கும் நாகரிக முறைகள்!

எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்களைப் பார்த்தால் கோபமாக வருகிறது.

ஏன் அவரவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் வேண்டத் தெரியாதா?

ஏன் இப்படி மற்றவர்களுக்காக வேண்டி அவர்களைச் சோம்பேறியாக்குகிறார்களோ?

நீங்கள் நல்லவர் என்று காட்டிக் கொள்ள மற்றவர்களைச் சோம்பேறியாக்குவதா என்ன?

*****

குழந்தை வளர்ப்பின் சூட்சமங்கள்

ஓரிரண்டு குழந்தைகளை வளர்ப்பது சிரமம். சிரமேமோ சிரமம்.

வீடு கொள்ளாது. நாடு தாங்காது.

நான்கைந்து சுலபம். ஆறெழு இன்னும் சுலபம். ஏழெட்டு சுலபமோ சுபலம். ஒன்பது பத்து என்றால் தொல்லை விட்டது. அதற்கு மேல் என்றால் அதிர்ஷடம்தான்.

இரண்டைத் தாண்டி விட்டால் யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்? கண்டு கொண்டால்தானே சிரமம். அது அதுவும் அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டு போய் விடும்.

ஒன்றோ, இரண்டோ என்றால் மெனக்கெட்டு நீங்கள்தான் வளர்க்க வேண்டும். அதுவாக வளர்ந்து கொள்ளட்டும் என்று விடுகின்ற மனம் வாய்க்காது.

நம் பாட்டன், முப்பாட்டன் குழந்தை வளர்த்த முறையில் என்ன சிரமம் இருக்கிறது சொல்லுங்கள்.

*****

பரபரப்பைப் பஸ்பமாக்கிக் கடந்து போதல்

தினசரிகளுக்கும் புலனாய்வு இதழ்களும் வேலையென்ன இருக்கிறது?

செய்தி அலைவரிசைகளுக்கு மட்டும் என்ன வேலையாம்? அண்மைச் செய்திகள் என்றும் பிரேக்கிங் நியூஸ் என்றும் போட்டுத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. அந்தத் தாக்குதலில் நாகசாகி, ஹிரோசிமாவில் வெடித்த குண்டுகளை விட கதிர்வீச்சுகளின் தாக்கங்கள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

இவை இல்லையென்றால் பரபரப்புச் செய்திகளுக்கு என்ன வேலை இருக்கிறது? பரபரப்பு செய்திகள் செத்துப் போய் அவற்றிக்குப் பாடை கட்ட வேண்டியதுதான். அப்படி ஒரு துர்பாக்கிய நிலைமை இந்தப் பூமிக்கு வந்து விடக் கூடாது.

அன்று பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரியைப் பற்றிய ஒரு பரபரப்புச் செய்தி.

முதலில் அந்தச் செய்தியைக் கேட்டப் பிறகு பிடிஎஸ் படிப்புக்குப் படித்து விட்டு போலீஸாகியிருப்பாரோ என்ற சந்தேகம்.

பல்லே இல்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டவரின் கதி என்னவாக இருக்கும்? – இப்படி ஒரு கேள்வி.

பிடுங்கிய பல் சொத்தையாகப் போய் விட்டால் அந்த அதிகாரியின் நிலைமை எப்படி இருக்கும்? இப்படியும் ஒரு சந்தேகத்துக்கு இடமான கேள்வி.

காசைப் பணத்தைப் பிடுங்குவதை விட்டு விட்டு இப்படியா பல்லைப் பிடுங்குவார்கள் என்றகேலிப் பேச்சுகளுக்குக் குறைவில்லை.

பிடுங்கிய பல்லை மாலையாக்கிக் கொள்வாரோ? பொக்கிஷமாகப் பெட்டியிலிட்டுப் பாதுகாத்துக் கோள்வாரோ? இப்படியெல்லாமா மனுஷாள்கள் இருப்பார்கள் என்ன?

இப்படிப் பல பல சந்தேகங்களோடும் கேள்விகளோடும் கேலிகளோடும் பரபரப்பைப் பஸ்பமாக்கிக் கடந்து போய்க் கொண்டிருக்க கற்றுக் கொண்டிருந்தன சனங்கள், இதை எழுதுகின்ற இவன் உட்பட.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...