11 Mar 2024

சிந்தனைச் சித்தனும் சுந்தரபுருஷனும் – ஒரு வாசகன் வாசிக்கிறான்!

சிந்தனைச் சித்தனும் சுந்தரபுருஷனும் – ஒரு வாசகன் வாசிக்கிறான்!

சிந்தனைச்சித்தனின் சிறுகதைகளைப் படிக்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேலாக 193 சிறுகதைகளை அநாயசமாக எழுதித் தள்ளியிருக்கிறார். அதற்கு மேல் அலுப்பு வந்து நாவல் பக்கம் போய் எழுபத்து ஆறு எழுதித் தள்ளியிருக்கிறார். சிந்தனைச்சித்தனைப் பொருத்தமட்டில் எனது பிரேமம் எல்லாம் சிறுகதைகளின் பக்கம்தான். எனக்கு வாசித்துத் தள்ள வேண்டும் என்ற ஆசை. ஆம் வாசித்துத் தள்ளத்தான் வேண்டும்.

ஒரு நாளுக்கு ஒன்றோ இரண்டோ வாசிப்பது பெரும்பாடாக இருக்கிறது. சில நாட்களில் ஓரிரண்டு வரிகள் நகர்வது இன்னும் பெரும்பாடாக இருக்கிறது. இரண்டாயிரம் சொச்சம் உள்ள புத்தகத்தைப் பத்து சதவீத கழிவு போக நாலாயிரத்து இருநூற்று பத்து கொடுத்து வாங்கி எத்தனை நாள் உபயோகமின்றி வைத்திருப்பது? அதுவும் ஒரு பக்கத்துக்கு ரெண்டு ரூபாய்க்கு மேல் மதிப்பு. இந்த எண்ணம்தான் என்னைச் சிந்தனைச்சித்தனை வாசிக்க உசுப்புகிறது.

நல்ல வேளையாக அவரது எழுபத்து ஆறு நாவல்களை பதின்மூன்று தொகுதிகளாக முப்பத்து இரண்டாயிரத்து நூறுக்குச் சலுகை விலையில் போட்டிருந்தார்கள். அதை வாங்காமல் போனேன். வாங்கியிருந்தால் வாழ்நாள் முழுவதும் படிக்க முடியாத ஆற்றாமையால் சூழ்ந்திருப்பேன்.

சிந்தனைச்சித்தனின் சம காலத்து எழுத்தாளர் இன்னொருவர் இருக்கிறார். சுந்தரபுருஷன் என்பது பெயர். இவருடைய எழுத்துகளை விறுவிறுவென்று வாசித்து விடுவேன். என்னவோ இவர் இப்படி எழுதியிருக்கிறார். அவர் அப்படி எழுதியிருக்கிறார். எல்லாம் ஒரே காலத்தில் நடந்த இரு விபத்துகள். ஒன்றில் அடிபட முடிகிறது. இன்னொன்றில் அடிபட யோசித்துக் கொண்டே நிற்க வேண்டியிருக்கிறது.

இவ்விரு எழுத்தாளர்களைப் பற்றியும் சிறு சிறு வாழ்க்கைக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவ்வளவு பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களைப் பற்றி சிறு குறிப்புகள்தானா கிடைக்கின்றன என்றால் அதுதான் வரலாற்றின் பெரும் பாக்கியம்.

சிந்தனைச்சித்தன் வீடில்லாமல் அலைந்தவர். நிலையாக அவரால் எந்த இடத்திலும் இருக்க முடிந்ததில்லை. ஊர் ஊராக அலைந்திருக்கிறார். அப்படி அலைந்தும் அவர் அவ்வளவு எழுதியிருக்கிறார். நிலையாக ஓர் ஊரில் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

சுந்தரபுருஷன் வாழ்க்கையானது சிந்தனைச்சித்தனின் வாழ்க்கைக்கு நேரெதிராக இருந்திருக்கிறது. சென்னைப் பட்டணத்தை விட்டு அங்கு இங்கு நகரவில்லை. அதுவும் திருவல்லிக்கேணிதான். அவருக்கு அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து பார்த்தால் வரும் தியாகராய நகரைக் கூட தெரியாது. ஆனால் அவர் மொத்த தமிழ்நாடு பற்றி, அதுவும் பத்தாது என்று உலகின் பல இடங்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். வாஷிங்டன் டிசி, மாஸ்கோ, தேம்ஸ் நதிக்கரை, கோலாம்பூர், டோக்கியோ பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். தான் அங்கெல்லாம் போனதில்லை என்பதையும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அவரது படைப்பு நேர்மை. அதற்காகத்தான் அவரைப் படிக்க வேண்டியிருக்கிறது.

சுந்தரபுருஷன் சுவாரசியமான எழுத்தாளர். படிக்க உட்கார்ந்தால் பக்கம் பக்கமாக ஏன் புத்தகம் புத்தமாகவே வாசித்து விட முடிகிறது. அப்படி ஓர் எழுத்து. சிந்தனைச்சித்தனைப் போலப் போரடிப்பது இல்லை.

இந்தச் சிந்தனைச் சித்தனை மட்டும் வாசிக்கவே முடியவில்லை. அது ஏன்? இது என்னுடைய நெடுநாளையக் கேள்வி.

கால அட்டவணைப் போட்டு படிக்க முடியாது. அப்படிப் போட்டுதான் இந்த இலக்கிய இத்தியாதிகளைப் படிக்க முடியுமோ? இருந்தும் அப்படியும் படித்துப் பார்த்தேன். அது ரொம்ப கொடுமையாகத்தான் இருந்தது. ஏன் இப்படி என்னைப் போட்டு நானே சுயவதை செய்து கொள்ள வேண்டும்?

எனக்குச் சில விசயங்கள் புரிபட ஆரம்பித்தன. எனக்கு இரண்டு மனம் இருப்பது புரிந்தது அப்போதுதான்.

ஒன்று ஒழுங்கான மனது. இன்னொன்று தறுதலை மனது.

ஒழுங்கான மனதை வைத்துக் கொண்டுதான் நான் பாடப்புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருந்திருக்கிறேன். இல்லையென்றால் ஒவ்வொரு வகுப்பிலும் கோட்டு அடித்திருந்தால் முப்பதோ நாற்பதோ வயதில் ஒரு இளநிலைப் பட்டத்தை வாங்கியிருப்பேன்.

தறுதலை மனதை வைத்து என்ன செய்து கொண்டிருந்தாய் என்றுதானே கேட்கிறீர்கள்? அதை வைத்துதான் இலக்கிய இத்தியாதிகளை மேய்ந்து கொண்டிருந்தேன். நுனிப்புல்லோ, அடிப்புல்லோ ஏதோ ஒரு மேய்ச்சல் அவ்வபோது நடக்கும்.

தறுதலை மனதின் வேகம் ஒழுங்கான மனதுக்கு வராது. தறுதலை மனது இருக்கிறதே, அது ஒரு நாளைக்கு 400 பக்கங்கள் படிக்கும். ஒழுங்கான மனதுக்கு 4 பக்கங்கள் ரொம்ப பெரிது.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. சிந்தனைச்சித்தனின் எழுத்துகளை ஊர் ஊராகச் சுற்றிய போது வாசிக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஐம்பது, நூறு, இருநூறு, நானூறு, எண்ணூறு, ஆயிரத்து அறுநூறு அதற்கு மேல் கடந்து மூவாயிரத்து இருநூறுக்குப் போக முடியாமல் இரண்டாயிரம் சொச்சத்தோடு முடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அவ்வளவுதானே சிறுகதைகள் விசயத்தில் சிந்தனைச்சித்தன் பண்ணியிருக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமா என்று தோன்றியது.

படித்து முடித்தாயிற்று என்றாலும் இதை ஆய்ந்து பார்க்காமல் அப்படியே விட்டு விட முடியுமா? ஒரு கீரையை ஆய்வது போல இலை, தண்டு, வேர், பூச்சி என்று ஆக்குவேறு ஆணி வேராக்க வேண்டாமா?

சுந்தரபுருஷன் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. இல்லாத இடத்தில் தேட என்ன இருக்கிறது என்று நினைத்திருக்க வேண்டும். அவருடைய எழுத்துகளை வீட்டில் இருந்த படியே படிக்க முடியாததற்கு அதுதான் காரணமாக இருக்க முடியும்.

சிந்தனைச்சித்தன் நிலையில்லாமல் அலைந்தவர். எங்கும் இல்லாததை எங்கெங்கோ தேடியவர். அவருடைய எழுத்துகளை அலைந்து அலைந்துதான் படிக்க வேண்டியிருந்தது. எழுத்தாளர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி வாழ்ந்தால்தான் அவர்களின் எழுத்துகளைப் படிக்க முடியும் போலிருக்கிறது.

இது நான் கற்றப் பாடம். உங்களுக்கு உதவுமா என்று பாருங்களேன். உதவினால் ஒரு ரெண்டு வார்த்தைக் கீழே எழுதிப் பதிவிடுங்கள். ரெண்டு வார்த்தை எழுதிக் கடிதம் போடுங்கள் என்று சொல்ல முடியுமா சொல்லுங்கள். அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? ரெண்டு வார்த்தை யோசித்துக் கொண்டு ரெண்டு மணி நேரம் பேசும் நமக்கு அதெல்லாம் முடியாது.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...