1 Mar 2024

ஹீரோ மாபியாக்கள்!

ஹீரோ மாபியாக்கள்!

முதலில் ஒரு காதல் படம் நடிக்கிறார்கள்.

அடுத்ததும் காதல் படம்தான் நடிக்கிறார்கள்.

அதற்கு அப்புறம் சண்டை படம் ஒன்றிரண்டு நடிக்கிறார்கள்.

அப்புறம் என்ன?

ஒரு ரௌடி படம்,

ஒரு தாதா பாடம்,

ஒரு மாபியா படம்,

ஓர் அரசியல் படம்

அதற்கு மேல் காத்திருக்க முடியாது

நேரடியாக முதல்வர் படம்தான்.

 

இயக்குநர்கள் கதைகளைத் தேர்வு செய்த காலம் மலையேறி விட்டது. பந்துலு மகாபாரதத்திலிருந்து கர்ணன் கதையைத் தேர்வு செய்து விட்டு, அந்தப் படத்திற்கு கதைநாயகனாகச் சிவாஜியை நடிக்க வைக்கப் போவதாகச் சொன்ன காலம் ஒன்று உண்டு. கதைக்குள் நடிகர்களை உட்கார வைத்த காலகட்டம் அது.

ரஜினிக்காக முதல்வன் கதையைத் தயார் செய்து அதில் அர்ஜூனைத்தான் நடிக்க வைக்க முடிந்தது ஷங்கரால். இயக்குநர் ஒரு கதையைத் தயார் செய்தாலும் நடிகர்கள் அதை பலவிதமாக மாற்றி விடுகிறார்கள்.

கதைநாயகர்கள் கேட்பதற்கேட்ப இயக்குநர்கள் கதைகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கதைநாயகர்கள் தலை கொய்யும் கதைகளைக் கூடவே கதையையும் கொய்யும் கதைகளைத்தான் கேட்கிறார்கள். பீஸ்ட் படத்தில் ஒரு வெட்டுதான். தலை பந்து போல பறந்து போய் விழுகிறது. உடனே ரஜினிக்கும் தலை கொய்யும் ஆசை இருக்காதா என்ன? ஜெயிலரில் தலையை வெட்டி முண்டத்தைத் தனியாகப் போடுகிறார். கமல் மட்டும் இளித்தவாயரா என்ன? விக்ரம் படத்தில் தலையில்லாமல் முண்டத்தை உட்கார வைக்கிறார்.

இப்படியே போனால் அடுத்த கட்டம் நரபலிதான் என்று அதையே விஜய்யின் லியோ படத்திற்குக் கதையாகத் தயார் செய்கிறார் லோகேஷ். அடப் பாவிகளா! நீங்கள் எங்கிருந்தடா கதைகளைத் தயார் செய்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் நரபலியைத் தூக்கி இன்னொரு சமூகத்தில் ஒட்ட வைத்து, தலையைக் காலி பண்ணுவதற்காக என்னென்ன வேலை செய்கிறீர்கள்? இதற்கெல்லாம் சேர்த்து எங்கள் தலை அஜித் ஒரு புதுப்படத்தில் ஒரு சம்பவத்தைச் செய்யாமலே விட்டு விடுவார்? இதைப் பார்த்தாவது திருந்தித் தொலையுங்களேன் போதை மாபியாக்களா!

கொரியனிலிருந்து கடத்திய கதைகளைக் கேட்டு அலுத்துப் போய், போதைப்பொருள் கடத்தும் கதைகளைக் கேட்கிறார்கள். இந்தக் கதைநாயகர்கள் அப்படி ஏதும் தொழில் செய்கிறார்களோ என்னவோ?

இவர்கள்தான் வரி செலுத்துவது என்றால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுபவர்கள் ஆயிற்றே! வெளிநாட்டு ஊர்திகளை இறக்குமதி செய்து அதற்கு வரி ஏய்ப்பு செய்வதில் கில்லாடிகளாயிற்றே. எதற்கும் காவல் துறையும் உளவுத்துறையும் இவர்களை உன்னிப்பாகக் கவனிப்பது நல்லது.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...