17 Feb 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி திறன் மிகுந்தவர்களாக மாறுகிறார்கள்?

அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி திறன் மிகுந்தவர்களாக மாறுகிறார்கள்?

அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி திறன் மிகுந்தவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கான விடை எனக்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கிடைத்தது. மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் ஒரு போட்டியைக் காணும் பேறு கிடைத்தால் அதை என்னால் அறிய முடிந்தது. அதை நீங்களும் அறிந்து கொள்வது பயன் தரும் என்று நம்புகிறேன். இனி அந்தத் திறன்மிகு நிலைக்கான சம்பவங்களைப் பார்ப்போம்.

மாணவர்கள் அவ்வளவு ஏற்பாட்டோடு அந்தப் போட்டிக்கு வருகிறார்கள். காலை பத்து மணிக்குத் துவங்கும் போட்டிக்கு ஒன்பது மணிக்கே வந்து காத்திருக்கிறார்கள். போட்டியை நடத்த வேண்டிய ஏற்பாட்டாளர்களோ பத்தரை மணிக்கு வருகிறார்கள். அரை மணி நேரம் தாமதப்படுத்துவதன் மூலமாக மாணவர்களின் பதற்றத்தைப் போக்கிக் கொள்ள தியான நிலைக்கான நேரத்தைத் தருகிறார்கள். காத்திருப்பு மற்றும் பொறுமையின் அவசியத்தை உணர்த்துகிறார்கள்.

அந்தப் போட்டிக்காக மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வளவு திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை அங்கு குழுமியிருந்தவர்களைப் பார்த்த உடனே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் போட்டியை நடத்துபவர்களோ எந்த வித திட்டமிடலும் இல்லாமல் வந்து அங்கே திட்டமிட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப தயாராகும் நுட்பத்தை மாணவர்களுக்கு மறைமுகமாகக் கற்பிக்கிறார்கள்.

மணி சரியாகப் பத்து ஐம்பது ஆன போது, அதாவது பொறுமைக்கான சோதனை முடிந்த பிறகு போட்டியின் துவக்க நிகழ்வை ஒருங்கிணைப்பாளர்கள் ஆரம்பித்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு சொந்தக் கதை, சோகக் கதைகள். எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டுப் போட்டியை ஆரம்பிக்கும் போது மணியைப் பார்த்தால் மணி பனிரெண்டு ஆனது. நேரத்தை வளர்க்கும் கலையைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் இப்படியாக மாணவர்கள் கற்றுக் கொள்ள துணை நின்றார்கள்.

அன்றைய நாளில் ஐந்தாறு வகையான போட்டிகளை அவர்கள் நடத்தியாக வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு அறையை ஒதுக்கிப் போட்டியை நடத்தலாம். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு போட்டியாக நடத்திக் கொண்டு இருந்தார்கள். ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே என்ற அருமையான கோட்பாட்டை இப்படி மாணவர்களுக்குக் கொண்டு சேர்த்தார்கள். ‘ஒன்றே செய், நன்றே செய், அதை இன்று முழுவதும் செய்!’ என்ற ஓர்மை உணர்வையும் இதன் மூலமாக மாணவர்களுக்கு உருவாக்கினார்கள் போட்டியை நடாத்துபவர்கள் (மேற்படி சொல்லில் எழுத்துப் பிழையில்லை).

ஒவ்வொரு போட்டியை நடத்தும் முன்பும் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் எப்படி போட்டியை நடத்துவது என்று கலந்து கலந்து பேசினார்கள். பிறகு மாணவர்களிடம் குழப்பமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அதைப் பேசியும் காட்ட வேண்டும் என்றார்கள். அதே போல பேச்சுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அதைக் கட்டுரையாக எழுதியும் காட்ட வேண்டும் என்றார்கள். மாணவர்கள் குழம்பித்தான் போனார்கள். இப்படிக் குழப்பி விடுவதன் மூலமாக மாணவர்களைத் தெளிவை நோக்கி வருவதற்கான ஏற்பாடுகளைப் போட்டியாளர்கள் மறைமுகமாகச் செய்தார்கள்.

பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்த போட்டிகள் மதியம் இரண்டு மணி வரை நீண்டது. மாணவர்கள் பசியோடிருந்தாலும் அதைப் பற்றிய லஜ்ஜையில்லாமல் போட்டியில் பங்கேற்பதைப் பெருமையோடு கருதிக் காத்திருந்தார்கள். இதன் மூலமாக ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்ற வள்ளலாரின் கோட்பாட்டைப் பின்பற்ற போட்டியை நடத்துபவர்கள் உதவி செய்தார்கள். வள்ளலார் பசிப்பிணியைப் போக்க செய்த எந்த முயற்சியையும் அவர்கள் செய்யாமல் போனாலும், பசிப்பிணியை உணரச் செய்து அவர்களை வருங்காலத்தில் வள்ளலார்களாக ஆக்க முயன்றார்கள்.

மதிய உணவை எடுத்து வராத மாணவர்கள் அதைப் பெரிது படுத்தாது மாலை ஆறு மணிக்குப் போட்டி முடியும் வரை காத்திருந்தார்கள். ஒரு தவ வேள்வியைப் போலப் போட்டியில் கலந்து கொள்ளும் திறனை இதன் மூலம் மாவட்ட அளவிலான போட்டிகள் மாணவர்களிடம் உருவாக்குகின்றன என்பது இதில் முக்கியமானது.

ஒரு மாவட்ட அளவிலான போட்டி நடைபெறும் இடத்தில் குடிநீருக்கான ஏற்பாடுகள் கூட இல்லாமல் இருக்கிறது என்பதை உச்சகட்ட வேதனையாகப் பார்க்கக் கூடாது. அதைச் சோதனையாகத்தான் பார்க்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தே அனைத்து விதமான முன் தயாரிப்புகளோடும் வர வேண்டும் என்பதையும் செயல் முறையில் உணர்த்துகிறார்கள் போட்டியை நடாத்துபவர்கள் (மேற்படி சொல்லில் எழுத்துப் பிழையில்லை).

இந்தப் போட்டிகள் இந்த வேகத்தில் நடந்தால் எப்போது முடியும், எப்போது வீடு திரும்புவது என்ற வினாவைப் போட்டியை நடத்தியவர்களிடம் ஒரு சில பெற்றோர்கள் எழுப்பிய போது போட்டி நடைபெறும் இடத்தில் போதிய அறைகள் ஒதுக்கப்படவில்லை என்றார்கள் போட்டியை நடாத்துபவர்கள் (மேற்படி சொல்லில் எழுத்துப் பிழையில்லை). ஆனால் அங்கே பல அறைகள் பூட்டிக் கிடந்தன. இருந்தும் ஏன் இப்படி நாம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அங்குதான் போட்டி ஏற்பாட்டாளர்கள் கற்பிக்க விரும்பும் சூட்சமம் என்னவென்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெருகி வரும் மக்கள்தொகையால் இந்தியாவில் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை இதை விட வேறு எப்படி சிறப்பாக விளக்கி விட முடியும்?!

அத்துடன் நடுவர்களுக்கும் பற்றாக்குறை என்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் எல்லாவற்றுக்கும் பற்றாக்குறைதான். நடுவர்களுக்கு இருக்காதா என்ன? இந்தப் பற்றாக்குறை பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ள இதை விட வேறு அருமையான வாய்ப்பு எங்கு கிடைத்து விடும்?!

நடுவர்களில் ஒருவர் வினாடி வினா போட்டி பற்றி சொன்ன கருத்து இந்தியாவின் நிலையைப் படம் போட்டு. புடம் போட்டுக் காட்டக் கூடியது. அவர் நடுவராகக் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவிப்பு அவருக்கு முன்தின இரவு பத்து மணி வாக்கில்தான் சொல்லப்பட்டதாம். அதற்கு மேல் உட்கார்ந்து இரவு இரண்டு மணி வரை உட்கார்ந்து வினாடி வினாவிற்கான வினாக்களைத் தயார் செய்து வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். வருடந்தோறும் பல புத்தகங்களைத் தயாரித்து வினாடி வினாவிற்குத் தயாராகும் மாணவர்களுக்காக நடுவர் ஒருவர் வினாக்களைத் தயாரிக்க எடுத்துக் கொள்ளும் அளவு வெறும் நான்கு மணி நேரங்கள்தான். அதுவும் தூக்கம் அமத்தும் நள்ளிரவில். நள்ளிரவு என்றால் என்ன? அதற்காக நாம் சுதந்திரத்தை நள்ளிரவில் தந்த போது வேண்டாம் என்றா சொல்லி விட்டோம்? தயாரிப்புகள் மோசமாக இருந்தாலும் அதற்காகத் தரமாகத் தயாராக வேண்டும் என்ற உணர்வை மாணவர்களிடம் இளம் வயதிலேயே உருவாக்கி விடுவதற்கு இது எவ்வளவு அருமையான வாய்ப்பு!

மாலை ஆறு அல்லது ஆறரை மணி அளவில் போட்டிகள் முடிந்து, மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறிய போது மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. மாணவர்களும் சோர்ந்து போயிருந்தார்கள், அழைத்து வந்த பெற்றோர்களும் சோர்ந்து போயிருந்தார்கள். இனிமேல் அவர்கள் பேருந்தேறி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தங்கள் வீடுகளுக்குச் சென்றாக வேண்டும். எப்படியும் அதற்கு இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை ஆகலாம். இப்போது அவர்கள் முன் சவால்கள் கவனிக்கதக்கது. அவர்களது ஊருக்குச் செல்லும் பேருந்துகள் உடனடியாகக் கிடைக்கலாம், அவர்கள் பேருந்துகளைக் கூட்டம் காரணமாகத் தவற விடலாம், ஒருவேளை இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலயே தங்க நேரிடலாம். இப்படி எப்படியோ, எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும் அதை இன்பமாக அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இது எந்தச் சூழ்நிலையையும் இராணுவ வீரர்களைப் போல எதிர்கொள்வதற்கான ஆற்றலை மாணவர்களுக்கு நிச்சயம் தரும்.

எல்லாம் எதற்காக என்கிறீர்கள்? இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று மேலும் மாநில அளவிலும் வெற்றி பெற்றால் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். உள்நாட்டில் போட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்கே இவ்வளவு சிரமம் என்றால் வெளிநாட்டுப் பயணத்தில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும்? அந்தச் சிரமங்களை எல்லாம் இது போன்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதிலேயே மாணவர்கள் அனுபவித்து விட்டால், வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு கிடைக்கும் போது அங்கே உண்டாகும் அசௌகரியங்களை எதிர்கொள்ள அது நல்லதொரு பயிற்சியாக இருக்கும் அல்லவா!

இப்போது நாம் நிறைவுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? குலுக்குச் சீட்டு முறையில் இருக்கும். இப்படி இருப்பதன் நன்மைகளை நாம் குறைத்து மதிப்பிட விடக் கூடாது. வெளிநாட்டில் அறிவியல் பூர்வமாகப் போட்டிகளை நடத்தும் முறைகளிலிருந்து நாம் இப்படி நடத்துவன் மூலமாக பல நன்மைகளைப் பெறுகிறோம். உதாரணத்திற்கு ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு சிலர் வெற்றி பெறுவதால்தான் நாம் அவர்களை பல ஆண்டுகளுக்கு ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. அமெரிக்கா போன்றோ, சீனா போன்றோ ஐம்பது, அறுபது, நூற்றுக்கணக்கில் என்று வெற்றி பெற்றால் அவர்களை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமா? அது நம் பொது அறிவைப் பாதித்து, போட்டித் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குறைத்து விடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்காகத்தான் இந்தக் குலுக்குச் சீட்டு முறை.

நம் நாட்டில் ஒருங்கமைக்கத் தெரியாதவர்கள்தான் எல்லாவற்றையும் நிர்வாகமும் மேலாண்மையும் செய்கிறார்கள். இதனால் அனைத்து நிர்வாகங்களும் ஒழுங்கற்றும் திறனற்றும் காணப்படுகின்றன. இந்த ஒழுங்கின்மையையும் திறனின்மையையும் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள். இவற்றை எதிர்கொள்வதற்கு அதீத பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும். இப்படி எல்லாவற்றையும் அதீத சங்கடங்களோடும், அதீத ஒழுங்கின்மையோடும் எதிர்கொள்ளும் போது திறமையும் தானாகவே வந்து விடும். இப்படித்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் திறன் மிகுந்தவர்களாக மாறுகிறார்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...