15 Feb 2024

கடன்காரராக்கும் கடன் அட்டைகளில் கவனமாக இருங்கள்! பற்றட்டைகளிடம் பற்றற்று இருங்கள்!

கடன்காரராக்கும் கடன் அட்டைகளில் கவனமாக இருங்கள்!

பற்றட்டைகளிடம் பற்றற்று இருங்கள்!

வங்கிகளின் அதிகபட்ச வட்டிவீதம் கடன் அட்டை அல்லது பற்றட்டை எனும் கிரெடிட் கார்டுக்குத்தான். நீங்கள் தனிநபர் கடன் வாங்கினாலும் அந்த அளவுக்கு வட்டி வீதம் இருக்காது. கடன் அட்டைகளுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு 45 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இருக்கின்றன.

குறைந்த வட்டி வீதத்தில் இருக்கும் தனிநபர் கடனை விட்டு விட்டு கடன் அட்டையை மக்கள் பயன்படுத்துவதற்குக் காரணம் கடனைப் பெறுவதில் உள்ள செயல்முறைகள் ஏற்படுத்தும் எரிச்சலும் மற்றும் கடன் அட்டைகள் தரும் சுலப வசதிகளும் எனலாம்.

தனிநபர் கடனை ஞாபகம் வைத்துக் கொண்டு தவணைத் தேதியில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் அல்லது தனது சம்பளக் கணக்கிலிருந்து மாதா மாதம் வங்கியே எடுத்துக் கொள்ளும் வசதியைச் செய்து கொள்பவர் கடனட்டையைப் பொருத்த வரையில் இத்தகைய ஒழுங்கைக் கடைபிடிப்பதில்லை. அவர் கடனட்டைக்கான தவணைத் தொகையைக் கட்ட மறந்து விடலாம். அல்லது ஞாபகத்தில் இருந்தாலும் குறைந்தபட்ச தொகையை மட்டும் கட்டிக் கொண்டே வரலாம். இந்த இரண்டுமே ஆபத்தானவை. இதனால் கடனட்டை உருவாக்கும் கடனில் சிக்கி மீள முடியாத நிலை கூட ஏற்படலாம்.

மேலும் சிறு சிறு செலவினங்களுக்கு எல்லாம் போய் தனிநபர் கடனோ, நகை அடகுக்கடனோ வாங்க வேண்டுமா என்பதில் மக்கள் காட்டும் அலட்சியமும் வங்கிகள் குறிப்பிட்டிருக்கும் காலக் கெடுக்குள் பணத்தைக் கட்டினால் வட்டி கூட கடனட்டையின் கடனுக்கு இல்லை என்று நினைப்பதும் கடனட்டையை நோக்கி கடனே என்று மக்கள் நகர ஒரு காரணம்.

கடனட்டைக்கான காலக்கெடுவிற்குள் எடுத்த பணத்தை வருங்காலத்தில் கட்ட முடியுமா என்பது வருங்காலத்துக்கே வெளிச்சம். வருங்கால வெளிச்சம் இருளாகிக் கட்ட முடியாத சூழ்நிலை வரும் போதுதான் கடனட்டையின் கோர முகம் தெரிய வரும்.

கடனட்டைக்கான கடனுக்கும் தனிநபர் கடனுக்குமான இன்னொரு வேறுபாட்டையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிநபர் கடனை வங்கிகள் அள்ளித் தெளிக்கும் கோலத்தில் வழங்கி விடாது. அவரது கடன் பெறுவதற்கான மதிப்பெண்ணை (சிபில் ஸ்கோர்) பார்க்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அவருடைய பொருளாதார நிலைமை இருக்கிறதா என்பதையும் பார்க்கும். கிரெடிட் கார்டு விசயத்தில் இவற்றையெல்லாம் வங்கிகள் கருத்தில் கொள்வதில்லை. முகவர்களை நியமித்து அவர்களுக்கு இலக்கைக் கொடுத்து விற்பனை செய்ய வைக்கின்றன. இதன் விளைவு யாருக்கு வேண்டுமானாலும் கடனட்டையை வழங்கி அவரை ஓட்டாண்டியாக ஆக்கலாம் என்ற சூழ்நிலையை உருவாக்குவதாக அமைகிறது. கடனட்டைப் பெறுபவர்கள் பணத்தைச் செலுத்தும் திராணியில் இருக்கிறார்களா என்பதெல்லாம் கடனட்டை வழங்குவோரால் ஆராயப் படுவதில்லை. இலக்கை அடைவதே அவர்களின் இலட்சியமாக ஆக்கப்படுகிறது.

வங்கிகளின் இலக்கும் சரியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்துபவர்களை விட திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் கடனட்டை வியாபாரம் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

கடனைத் திருப்பிச் செலுத்துபவரை விட திருப்பிச் செலுத்தாமல் கால தாமதம் செய்பவர்கள்தான் வங்கிகளின் லாபங்களை அதிகரிப்பவராவார். அவருக்குத்தான் அபராதம், கால தாமதக் கட்டணம் என விதித்து அதிகப் பணத்தை வங்கிகள் அறுவடை செய்ய முடியும். முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துபவர் அந்த வகையில் வங்கிகளுக்கு ஏமாற்றம் தரும் வாடிக்கையாளரே ஆவார்.

கடனட்டைக்கான கட்டணங்களை அறியாமலே பலரும் இந்த  அட்டைகளை ஒன்றுக்கு மேல் நான்கைந்து என வாங்கி வைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடனட்டைக்கான கட்டணங்கள் என்னென்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கடனட்டைக்கான கட்டணங்களாவன,

1)      ஆண்டுக்கட்டணம்,

2)      கால தாமதக் கட்டணம்,

3)      கால தாமதக் கட்டணத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டணம் (ஜி.எஸ்.டி),

4)      பணமெடுக்கும் இயந்திரத்தில் (ஏ.டி.எம்.) பணம் எடுத்தால் கட்டணம்,

5)      பணமெடுக்கும் இயந்திரத்தில் (ஏ.டி.எம்.) எடுக்கப்படும் கட்டணத்திற்கு பணமெடுக்கும் அன்றிலிருந்து விதிக்கப்படும் வட்டித்தொகை,

6)      எரிபொருள் (பெட்ரோல் அல்லது டீசல்)   போடும் போது செலுத்தும் கூடுதல் கட்டணம்

என்று பலவகைக் கட்டணங்கள் இருக்கின்றன.

கடனட்டைப் பயன்பாட்டில் வேறு சில இடர்பாடுகளும் இருக்கின்றன.

கடனட்டையில் செலவு செய்து விட்டு உரிய காலத்தில் தொகையைச் செலுத்தாமல் போனால் உங்களது கடன் பெறுமானத்திற்கான மதிப்பெண் (கிரெடிட் ஸ்கோர்) பாதிப்படையும். இதன் பாதிப்பு உரிய நேரத்தில் உங்களுக்குத் தேவையான கடனைப் பெறும் போது கழுத்துக்கு கத்தியை வைக்கும்.

கடனட்டைகள் மூலமாக நிறைய சலுகைகள் (ஆபர்கள்) கிடைப்பதாக நீங்கள் நினைக்கலாம். இந்தச் சலுகைகள் எல்லாம் அத்தியாவசியமும் தேவையும் இல்லாத ஆடம்பரப் பொருட்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் ஊன்றிக் கவனித்தால் புரியும்.

ஒரு கடனட்டையால் உருவாகும் கடன் இன்னொரு கடனட்டையை வாங்க வைக்கும். அதாவது இந்தக் கடனட்டையின் கடனை இன்னொரு கடனட்டையை வாங்குவதன் மூலமாகத் தீர்க்க நினைக்கும் மனோபாவம் என்று இதைக் குறிப்பிடலாம். கடனட்டையின் மோசமான சங்கிலித்தொடர் விளைவு இதுதான். ஒன்றை அடைக்க இன்னொன்று, அந்த இன்னொன்றை அடைக்க வேறொன்று என்று இந்தத் தொடர் சங்கிலித்தொடர் போல நீண்டு கொண்டு போனால் அந்தச் சங்கிலி கழுத்தைச் சுருக்கும் கயிறாகவும் மாறி விடலாம்.

ஆசைகள் நம்மை தூண்டுகின்றன. நமது ஆசைகளைப் புரிந்து கொண்டு சலுகைகளை வலைகளை வீசிப் பிடிக்கும் வேடர்களைப் போல வழங்க வியாபார நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. வலையில் சிக்காமல் வாழ்க்கை வானத்தில் சிறகடித்துக் கொண்டிருப்பது நம் மனச்சிறகுகளிடம்தான் இருக்கின்றன.

பணத் தேவைகளின் போது அவசரத்திற்கு யாரிடமும் கைமாற்று வாங்காமலும், கடன் வாங்காமலும், கௌரவத்துடன் செலவு செய்ய கடனட்டைகள் ஒரு வாய்ப்பாக இருப்பதாக நினைத்து இந்த அட்டையை வாங்குவர்களும் இருக்கிறார்கள். சரியாகப் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் அட்டைகள் உங்களைக் கௌரவத்தோடு வைத்திருக்கும். பணம் செலுத்துவதில் தவறினால் உங்கள் கௌரவத்தை இந்தக் அட்டைகள் சந்தி சிரிக்க வைத்து விடும்.

வருவாய்க்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுச் செயல்படுபவர் எனில் உங்களுக்குக் கடனட்டைகளே தேவையில்லை. இப்போது வாங்கும் பணத்தை வருங்காலத்தில் எப்படியும் செலுத்தி விட முடியும் என்ற அதீத தன்னம்பிக்கையோடு கடனட்டைகளை வாங்கி விட வேண்டாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

உங்கள் கவனத்தையும் ஆர்வத்தையும் உழைத்துச் சம்பாதிப்பதிலும் அந்தச் சம்பாத்தியத்துக்குள் சிக்கனமாக வாழ்வதிலும் காட்டினால் நீங்கள் கடனட்டையைப் பற்றியென்ன கடனைப் பற்றியே நினைக்க மாட்டீர்கள்!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...