12 Feb 2024

இந்தியாவின் மக்கள்தொகை சொல்லும் செய்தி

இந்தியாவின் மக்கள்தொகை சொல்லும் செய்தி

இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் சீனாவை மிஞ்சி விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சீனாவை மிஞ்சினால் உலகின் அதிக மக்கள் தொகை நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்து விடும்.

அதிக மக்கள் வளம் என்பது பெருமைபடத்தக்க அம்சம்தான். உலகின் சில நாடுகள் மக்கள் தொகை பெருக்கத்திற்காகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை எந்த ஊக்குவிப்பு முயற்சிகள் இல்லாமல் உயர்ந்திருக்கிறது.

குடும்ப கட்டுபாடு திட்டங்கள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டுப் பிறகு மிதமான போக்குக்கு மாற்றப்பட்ட நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. பெரும்பாலான மக்கள் இரண்டு குழந்தைகள் என்ற எண்ணிக்கைக்குக் கட்டுபட்டு, அந்த எண்ணிக்கையையும் ஒன்று என்ற நிலைக்குக் குறைத்து விட்ட நிலையில் இந்தியா இருக்கிறது. இருந்தும் இந்தியாவின் மக்கள் தொகை உலக அளவில் முதலிடம் பெறும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

உலகளவில் மக்கள் தொகையில் முதலிடம் பெற்று விட்ட இந்தியாவில் இருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மற்றும் குழந்தை பிறப்புக்கான சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படத் தக்கது. இவ்வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்த வசதிகள் வந்த பிறகும் குறைந்து விடாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா மேற்கொண்டு எப்படித் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டியதும் அது குறித்துத் தொலைநோக்காகச் சிந்திக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

140 கோடியைக் கடந்து விட்ட இந்தியா ஆரோக்கியமாக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கான விடை பலவீனமாக இருக்கிறது.

140 கோடியைக் கடந்து விட்ட இந்தியாவின் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கான விடையும் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறது.

140 கோடியைக் கடந்து விட்ட இந்தியாவின் செயல்திறன் சொல்லும்படி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கான விடையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவற்றில் இந்தியா கடக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. செயல்திறனிலும் முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறது.

கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் உயர்ந்த நிறுவனங்களின் இந்தியச் செயல் தலைவர்களைக் கொண்டோ, உலக வங்கியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்திய வம்சாவளியினரைக் கொண்டோ, இங்கிலாந்தின் பிரதமராக இருக்கும் வம்சாவளியினரைக் கொண்டோ இந்தியாவின் செயல்திறனை மதிப்பிடுவது பொருத்தமாக இருக்காது. இந்தியாவில் இருப்போரைக் கொண்டு இந்தச் செயல்திறனை மதிப்பிட வேண்டும். வெளிநாட்டுக்குச் சென்று விட்டவர்களின் செயல்திறன் அந்தந்த நாடுகளுக்குப் பயன்படுமே தவிர நம் இந்தியாவின் தனிப்பட்ட செய்லதிறனுக்குக் கைகொடுக்கப் போவதில்லை.

இந்தியாவில் இருப்போரின் செயல்திறனை அளவிட இங்கிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யும் வேலைகளையும் அதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தையும் கணக்கில் கொண்டாலே நமது தேசத்தின் செயல்திறன் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பது விளங்கி விடும்.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் உயர்கல்வி ஆராய்ச்சிகளின் முடிவுகள் உலக அளவில் ஏற்றுக் கொள்ளும் தரத்தில் இல்லாமல் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ உயர்கல்வி இருக்கிறது என்பதற்காக ஆய்வுகள் நடைபெறாமல் இருந்து விடக் கூடாது என்கிற தரத்தில்தான் இந்திய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.

இந்தியாவின் செயல்திறனை உயர்த்த வேண்டிய அரசு நிர்வாகங்கள் மெத்தனங்களும் கையூட்டுகளும் மலிந்ததாக இருக்கின்றன. இளைஞர்களின் செயல்திறனை உயர்த்த வேண்டிய அரசியல் தலைவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துப் பெருக்கம் செய்வதில் குறியாக இருக்கிறார்கள்.

விழிப்புணர்வைத் தர வேண்டிய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பொதுக்கூட்டங்கள் சாதிய உணர்வை வளர்த்தெடுப்பவையாகவும் குறுகிய நோக்கங்களை விரித்துக் கொண்டு செல்பவைகளாகவும் போலி வாக்குறுதிகள் வழங்கி ஏமாற்றுபவையாகவும் இருக்கின்றன.

மதுப் பழக்கத்தையும் போதைப் பொருட்களின் புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் அரசின் அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன. மதுப்பழக்கம் மற்றும் போதைப் புழக்கம் ஆகியவவற்றின் வளர்ச்சியை வார்த்தெடுப்பவையாகவும் இருக்கின்றன. இதனால் போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகும் ஒரு செயலிழந்த தலைமுறை உருவாகிக் கொண்டு இருக்கிறது. செயல்திறனை வளர்க்க வேண்டிய நிலையில் இந்தச் செயலின்மையை எப்படித் தடுப்பது என்பது அவிழ்க்க முடியாத புதிராக முன் நிற்கிறது.

எல்லா செயல்திறன் மாற்றங்களுக்கும் அடிப்படையான கல்வி இந்தியாவில் பாகுபாடான தன்மையோடு வழங்கப்படுகின்றது. பெருகி இருக்க வேண்டிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மாறாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் வியாபாரச் செழிப்போடு வேர் பரப்பி கிளை விரித்து விரிந்து நிற்கின்றன. செயல்திறனுக்கு அடிப்படையான கல்வியைப் பெற கல்விக்கடன் பெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. கல்விக்கடன்கள் நிதி நிறுவனங்களின் வட்டி வருமான செயல்திறனை ஊக்கப்படுத்தலாம், ஆனால் அது இளைஞர்களின் புதியன புனையும் செயல்திறனை மழுங்கடித்து விடுகின்றது.

சம்பாத்தியத்திற்கான வாய்ப்புகளும் வழிமுறைகளும் மட்டும் பிரதானப்படுத்தப்பட்டு அதற்கான வழியில் மக்கள் செல்ல ஆரம்பித்தால் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான வலுவின்றி, செயல்திறனற்றோர் நாட்டில் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

நாட்டு மக்களில் யாரையும் திறனற்றவர் என்று மதிப்பிட்டு விட முடியாது. ஆனால் செயல்திறனுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்படாத போது திறனுள்ளவர்களும் திறனற்றவர்களாகக் குன்றிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டு விடுவதுண்டு.

மக்களின் செயல்திறனை வளர்க்கும் கல்விக்கூடங்கள், பயிற்சி நிலையங்கள் போன்றவற்றைத் தரமானதாகக் கட்டமைக்க வேண்டும். செயல்திறன் சார்ந்த பயிற்சிகள் இலவசமாகவோ அல்லது மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தோடோ வழங்குவது ஒரு நாட்டுக்குச் செலவினமாகாது. அது மகத்தான முதலீடாகும்.

நாட்டை வழிநடத்தக் கூடிய தலைவர்கள் செயல்திறனுக்கும் செயல்திறனால் உருப்பெறப் போகும் புதுமை புனைவுகளுக்கும் நேர்மையாகப் பாடுபடுவர்களாக இருக்க வேண்டும். அவற்றின் உத்வேகத்தை அதிகம் பண்ணுபவர்களாக இருக்க வேண்டும். குறுகிய கால ஆதாயங்களைக் கருத்தில் கொள்ளாது நீண்ட கால வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை வளர்ப்பவர்களாகவும் அதற்காகப் பொறுமையாகப் பாடுபடுபவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.

நாட்டு மக்களை வழிநடத்தி தாங்களும் அவ்வழியில் நிற்பவர்களாகத் தலைவர்கள் உருவாக வேண்டிய கால கட்டம் இந்தியாவிற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதை விடுத்து இன்னும் சொத்துகளைக் குவித்து சுரண்டலைச் சாசுவதமாகச் செய்யும் ஊழலும் கையூட்டும் நிறைந்த நிர்வாகத்தைத்தான் தலைவர்கள் செய்வார்கள் என்றால் இன்னும் லட்சம் கோடி என மக்கள் தொகை பெருகினாலும் இந்தியா செயலற்ற நிலைக்குப் போய் முடங்குவதைத் தடுக்க முடியாது.

இந்தியா போன்ற பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் செழித்திருக்கும் ஒரு நாட்டைச் செயல்திறனில் முன்னேற்ற நேர்மையும் நியாயமும் கொஞ்சமேனும் தியாகமும் கொண்ட தலைவர்கள் உருவாக வேண்டும். மக்கள் நேர்மையும் நியாயமும் தியாகமும் கொண்ட தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பற்றாக்குறையுள்ள தலைவர்களே உருவாகிறார்கள் என்பது இந்தியாவின் தலையெழுத்தோ என்னவோ!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...