11 Feb 2024

கவிமணியின் கவிதைகள் – எளிமையிலிருந்து பிறக்கும் அதிசயங்கள்!

கவிமணியின் கவிதைகள் – எளிமையிலிருந்து பிறக்கும் அதிசயங்கள்!

என்னதான் பானிபூரியும், டில்லி அப்பளமும் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் மிக அதிகமாக விற்கப்பட்டாலும் சில நல்ல புத்தகங்களும் அபூர்வமாக விற்கப்படுகின்றன. அப்படி இந்த வருட (2024) திருவாரூர் புத்தகக் கண்காட்சியில் கிடைத்த ஒரு நல்ல புத்தகம் ‘கவிமணியின் கவிதைகள் – முழுவதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு’.

நாட்டில் நிறைய கவிமணிகள் உலவுவதால் நான் எந்த கவிமணியைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லி விடுவது பாதுகாப்பானது. கவிமணி தேசிய விநாயகத்தைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

முனைவர் அ.கா.பெருமாள் மற்றும் முனைவர் எஸ். ஸ்ரீகுமார் ஆகியோர் கவிமணியின் மொத்த கவிதைகளையும் முயன்று தொகுத்து இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைச் செண்பகா பதிப்பகம் (யங்மைண்ட் பப்ளிஷர்ஸ்) வெளியிட்டிருக்கிறார்கள். 2018இல் வெளிவந்த பதிப்பு. மறுபதிப்பு கண்டதா என்று தெரியவில்லை. கிட்டதட்ட 2018இல் வெளிவந்த புத்தகத்தை ஆறு ஆண்டுகள் கழித்து நான் வாங்கியிருக்கிறேன். கவிமணியின் புத்தகத்திற்கே இந்த கதிதான் என்றால் தமிழ்நாட்டின் மற்ற கவிஞர்களது புத்தகங்களின் விற்பனை எப்படி இருக்கும் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளும், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளும் இருப்பதால் திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற புத்தகங்கள்தான் கவிதைகள் வரிசையில் நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்கள் எனச் சொல்லலாம். இவ்வித போட்டிகள் இல்லையென்றால் இந்தக் கவிஞர்களின் புத்தகங்களும் சீந்துவாரில்லாமல் போய் விடும். போட்டிகளும் பரிசுகளும் மட்டுமே தமிழ்ச் சமூகத்தை உந்திக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் பிற்காலத்தில் சம்பவங்கள் நிகழும் என்பதை உணர்ந்துதான் பாரதியார் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று பாடினாரோ என்னவோ! பாரதிதாசன் ‘இருண்ட வீடு’ என்பதைப் பாடி வைத்தாரோ என்னவோ! வள்ளுவர் ‘மன்புக்கு மாய்வது மண்’ என்றாரோ என்னவோ!

பள்ளி ஆசிரியர் தொடங்கி, கல்லூரி ஆசிரியர்கள் வரையிலும், மாணவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையிலும் நாட்டில் கவிதை புத்தகங்கள் என்றால் அந்த மூன்று புத்தகங்களை மட்டும்தான் கவிப்புத்தகங்களாக நினைக்கிறார்கள். மற்றபடி ஆங்கில அகராதி, சமையல் குறிப்பு புத்தகங்கள், பஞ்சாங்கம், ஒரே நாளில் ஜோதிடம் கற்பது எப்படி, ஒரு நிமிடத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி? போன்ற புத்தங்களைத்தான் புத்தகங்களாகவும் கருதுகிறார்கள்.

கவிமணியின் கவிதைகளைப் பொருத்த மட்டில், ‘மலரும் மாலையும்’ என்ற ஒரு புத்தகம் மட்டும்தான் இதற்கு முன்பு என்னிடம் இருந்தது. அது பூம்புகார் பதிப்பக வெளியீடு. நான் அதை வாங்கிய போதே இருபது ஆண்டுகளுக்கு முந்தைய பதிப்பாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்குத்தான் கவிமணியின் புத்தகங்களே விற்பனை ஆகின்றன. இப்போது அவரது மொத்த கவிதைகளும் அடங்கிய தொகுப்பு – ஆசிய சோதி, மருமக்கள் வழி மான்மியம், உமர்கய்யாம் பாடல்கள், கீர்த்தனங்கள், குழந்தைப் பாடல்கள், அவரது அனைத்துத் தனிப்பாடல்கள் உட்பட அனைத்தும் அடங்கிய தொகுப்பு கிடைத்ததில் இந்த உலகத்தை வாங்கி விட்டதான ஒரு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி. தமிழ் புத்தக உலகில் எதற்கெல்லாம் மகிழ வேண்டியிருக்கிறது என்பதை நினைத்தால் ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.

ஒரு முக்கால் நூற்றாண்டுக்கு முற்பட்ட எழுத்துகள் என்றாலும் கவிமணியின் பாடல்களை விரும்பக் காரணம் அந்தக் கவிதைகளில் இருக்கும் எளிமைதான். கவிமணியின் எளிமையை வேறெந்த கவிஞர்களிடமும் காண முடியாது. புலமைச் செருக்கு கொஞ்சம் கூட வெளிப்படாத நயமான கவிதைகள் அவருடையன. கவிமணிக்குப் பிறகு அப்படிப்பட்ட கவிதைகளை நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரிடம்தான் காண முடியும். நாமக்கல் கவிஞரைச் சொல்வதற்குக் காரணம்,

“சூரியன் வருவது யாராலே

சந்திரன் திரிவது யாராலே”

எனத் தொடரும் பாடலும் நான் முதல் வகுப்பு படித்த போது அறிமுகமாகி விடும். இப்போதைய முதல் வகுப்பு அறிமுகங்கள் வேறு. எல்லாம் தாறுமாறு தக்காளிச் சோறு வகையறா.

இந்த நூலை ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். கவிமணியின் கவிதைகளை முறையாகத் தொகுத்திருக்கிறார்கள். கவிதைகள் குறித்த ஏராளமான பின்குறிப்புகளைத் தந்திருக்கிறார்கள். நூலின் இறுதியில் கவிமணியின் அரிய புகைப்படங்கள் பல உள்ளன. கவிமணியின் வாழ்க்கைக் குறிப்பைப் பார்க்கும் போது அவர் ஒரு கவிஞர் மட்டுமல்லர், ஓர் ஆய்வாளர், நாட்டாறு வழக்காற்றியலில் ஆர்வமுள்ளவர், கல்வெட்டு இயல் அறிஞர், ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்தவர், வரலாற்றியல் அறிஞர், தமிழ் லெக்சிகனில் பங்களித்தவர் என்பதெல்லாம் புலப்படும். வாழ்வியலில் காந்தியவாதி, மொழிப்போர் வீரர், கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டோடு இணைக்க குரல் கொடுத்தவர் என்ற தகவல்களும் தெரிய வரும்.

நாங்கள் பள்ளியில் பயின்ற காலத்தில் முதல் வகுப்பிலேயே ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ பாடல் மூலமாகக் கவிமணி அறிமுகமாகி விடுவார். பாரதியார் எல்லாம் பிற்பாடுதான் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆகுவார்.  

“உடலின் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்”

என்ற பாடல் இப்போதும் எனக்கு வேதம் போன்று காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியின் மறு ஆக்கம் போலத் தெரிந்தாலும் கவிமணியின் வரிகளில் அந்தப் பாடலைப் பாடும் போது எவ்வளவு வலிமையான உண்மையை எவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார் என்பது புரிய வரும். உண்ட உடன் ஒரு டசன் மாத்திரைகளைப் போடும் தலைமுறையை அவர் போன தலைமுறையிலேயே கணித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இரும்புச் சத்து மாத்திரை என்கிறார்கள், போலிக் ஆசிட் மாத்திரை என்கிறார்கள், விட்டமின் மாத்திரைகள் என்கிறார்கள், அல்பெண்டோசொல் மாத்திரையைப் போடு என்கிறார்கள். சத்துணவை உண்ணும் பள்ளிக் குழந்தைகளுக்கே இவ்வளவு மாத்திரைகளை இந்தக் காலத்தில் போட வைக்க வேண்டியிருக்கிறது.

“காலை மாலை உலவி நிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் போவானே!”

என்ற பாடல் வரிகள் நடைபயிற்சியின் அவசியத்தை அப்போதே சொல்லி விட்டது இல்லையா! பாரதி ஒரு வகை தீர்க்கதரிசி என்றால் என்னைப் பொருத்த வரையில் கவிமணி இந்த வகையில் தீர்க்கதரிசி. இப்போது நடைபயிற்சிக்குச் சங்கங்களே உருவாகி இருக்கின்றன இல்லையா!

அதே பாடலில்,

“தூய காற்றும் நன்னீரும்

சுண்ட பசித்த பின் உணவும்

நோயை ஓட்டி விடும் அப்பா

நூறு வயதும் தரும் அப்பா”

எனும் வரும் வரிகளில் வரும் ‘அப்பா’ என்ற சொல்லில் இருக்கும் நயம் இருக்கிறதே. கவிமணி அளவுக்கு ‘அப்பா’ என்ற சொல்லை அவ்வளவு நயமாகப் பயன்படுத்திய கவிஞர் வேறு யாருமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பாடல் உணர்த்தும் கருத்தை விட்டுவிட்டு, ‘அப்பா’ என்கிற நயத்தை அப்பப்பா என்று சொல்கிறேனே என்று நினைக்காதீர்கள். விளக்கமோ, விவரிப்போ, கூடுதல் உணர்த்தலுக்கான அவசியமோ எதுவுமே தேவைப்படாத வரிகள் என்பதால் நான் வரிகளின் நயத்தை மட்டும் சொல்கிறேன். மேலும் இந்த விசயத்தில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நயமாக எடுத்துச் சொல்லிதான் மாற்ற முடியும். அதை நன்குணர்ந்தவர் கவிமணி. இவ்வகை உணர்த்தல்தான் கவிமணியின் மீதான என் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.

இந்தப் பாடலில்,

“ஆளும் அரசன் ஆனாலும்

ஆகும் வேலை செய்வானேல்

நாளும் நாளும் பண்டிதர்கை

நாடி பார்க்க வேண்டாமே.”

என்ற வரிகளும் உண்டு. ஆனால் இந்த வரிகள் பாடநூலில் இடம் பெறாதது. ஆனால் கட்டாயம் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய வரிகள். சர்க்கரை நோயையும் கொழுப்புநோயையும் இப்படி ஒரு பிடி பிடித்து விடுகிறார் கவிமணி.

மற்றபடி கவிமணியின் கவிதைகளுக்கு உரை எழுதித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றோ, விமர்சனம் மூலமாகத்தான் ஆய்ந்து தெளிந்து கொள்ள வேண்டும் என்றோ அவசியம் எதுவும் இல்லை. அவ்வளவு எளிமை அவரது கவிதைகள். அவருக்கு இருந்த கல்விப் புலமைக்கும், ஆய்வு வளமைக்கும் புலமைச்செருக்கைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் மிக எளிமையான யாவருக்கும் புரியும் சொற்களையே பயன்படுத்தினார். சொல்ல வேண்டிய செய்திகளையும், உணர்த்த வேண்டிய கருத்துகளையும் மிக நேரடியாகவே சொல்கிறார் மற்றும் உணர்த்துகிறார். அநாவசிய அணி அலங்காரங்களில் கூட அவர் சிக்கிக் கொள்வதில்லை. கவிதையோடு நயமாகப் பொருந்தும் இடங்களில் மட்டுமே அவர் பயன்படுத்துகிறார். அவையும் மிக இயல்பாகப் பொருந்திப் போகும் வகையிலேயே இருக்கின்றன.

கவிமணியின் கவிதைத் தொகுப்பைக் கொடுத்தால் ஒரு சிறு குழந்தையும் படித்துப் புரிந்து கொள்ளும். ஆனால், இங்கு ஒரு கவிஞர் எப்படி அடையாளம் காணப்படுகிறார்? பெரியவர்கள் படித்தாலும் புரிந்து கொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்றுதானே. இதனால்தான் கவிமணி எனக்குத் தனித்துத் தெரிகிறாரோ என்னவோ!

*****

1 comment:

  1. அன்புத் தம்பி, தங்களது ரிக்கார்ட் டான்ஸ் சிறுகதையினை வாசிக்கும் வாய்ப்பு தற்போதுதான் வாய்க்கப்பெற்றது.

    ஊரினைப் பற்றிய விவரணை, கண்முன்னே தெருக்களையும் அது சார்ந்த காட்சிகளையும் யதார்த்தமாக விரியச் செய்திருப்பது அருமை. மேலும் சாமானிய மனிதர்களுகடைய நடவடிக்கைகளும், அந்த ரிக்கார்ட டான்ஸ் சார்ந்த அவர்களின் ஊகங்களும் வெகு இயல்பாக கதை வழி கடத்தப்பட்டுள்ளது.

    பொதுவாக கணவன் மனைவி இடையே நிலவும் ஒருவித மெல்லிய அயர்ச்சியை துல்லியமாக காட்டும் விதமாக அந்த குழுவிற்கு தன்னிச்சையாக மின்சாரத்தினை வழங்கும் கணவனை இழந்த பெண்ணின் வழி உணர்த்தியிருப்பது வெகு சுவாரஸ்யம்.

    இறுதியில் குழந்தை சாதாரணமாகக் கேட்கும் கேள்வி, நம்மிடையே பலக் கேள்விகளை எழுப்பி விடுகிறது.

    வாழ்த்துகள் தம்பி💐

    ReplyDelete

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...