10 Feb 2024

திருவாரூர் புத்தகக் கண்காட்சி – 2024 – ஒரு பின்னடைவுச் சம்பவம்!

திருவாரூர் புத்தகக் கண்காட்சி – 2024 – ஒரு பின்னடைவுச் சம்பவம்!

சென்ற ஆண்டிலிருந்து மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சி திருவாரூரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவாரூருக்கு இது இரண்டாவது புத்தகக் கண்காட்சி.

முதல் புத்தகக் கண்காட்சியை விட இரண்டாவது புத்தகக் கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும். ஆனால் இரண்டாவது புத்தகக் கண்காட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

நான் பக்கத்து மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்குப் போயிருக்கிறேன். அந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளோடு ஒப்பிடுகையில் திருவாரூர் புத்தகக் கண்காட்சியை ஒழிசல் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாவட்ட அளவில் இப்படி புத்தகக் கண்காட்சி திருவாரூரில் நடைபெறுவதை பெருமைமிகு அறிவு அடையாளமாகப் பார்க்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த விதமான மாற்றுக் கருத்துமில்லை. இப்படி ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறா விட்டாலும் அது குறித்த அக்கறை ஏதுமின்றிதான் திருவாரூர் மாவட்டம் இயங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து எவ்வளவு பாராட்டினாலும் வாழ்த்தினாலும் தகும். அதற்காக ஒப்புக்குச் சப்பாணி என்பதாக, கடனே என்று நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எப்படி கொஞ்சமேனும் எதிர்கருத்து கூறாமல் இருக்க முடியும்?

திருவாரூர் புத்தகக் கண்காட்சியின் புத்தக அரங்குகள் எண்ணிக்கையில் குறைவுதான். எண்ணிக்கைக் குறைவு ஒரு பொருட்டில்லை. அந்த எண்ணிக்கை குறைந்த அரங்குகளிலும் பல அரங்குகள் காலியாக இருப்பதை எப்படி பொருட்படுத்தாமல் இருக்க முடியும்?

நிரம்பியிருந்த புத்தக அரங்குகளைப் போலவே வளையல், மணி, தோடு விற்கும் அரங்குகளும், ஊறுகாய், ரசப்பொடி விற்கும் அரங்குகளும், சாவிக்கொத்து விற்கும் அரங்குகளும் நிரம்பியிருந்தன. ஒரு புடவை விற்கும் அரங்கம் கூட இருந்தது. புடவையில் இருப்பதும் நூல்தான், புத்தகத்தின் பெயரும் நூல்தான் என்பதால் இப்படியா என்னவோ! இப்படித்தான் திருவாரூர் புத்தகக் கண்காட்சி அரங்குகளை நிரப்பியிருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு மத்தியில் ஒரு பொருட்காட்சியாக அமைந்துவிட்டது இந்த வருட புத்தகக் கண்காட்சி.

புத்தகக் கண்காட்சி அரங்கிற்கு அருகிலேயே விழா அரங்கை அமைத்திருந்தார்கள். சென்ற வருடம் இந்த விழா அரங்கத்தைப் புத்தகக் கண்காட்சி அரங்கத்திற்குப் பின்னே அமைத்திருந்தார்கள். இந்த வருடம் இரண்டு அரங்கமும் சமம் என்பதாகக் காட்டுவதைப் போல என்னவோ பக்கத்துப் பக்கத்தே அமைத்திருந்தார்கள்.

விழா அரங்கில் எந்நேரமும் ஏதேனும் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. பிள்ளைகள் புத்தக வாசிப்பைப் பற்றிப் பொளந்து கட்டும் வகையில் பேசிக் கொண்டிருந்தார்கள். புத்தக வாசிப்பை அவ்வளவு சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு சிலாகித்துப் பேசிய அந்தப் பிள்ளைகளாவது புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டு ஒரு புத்தகம் வாங்கியிருப்பார்களா என்பது சந்தேகந்தான். ஆனால் அவர்கள் கண்காட்சிக்கு வருவோர் கட்டாயம் ஒரு புத்தகமாவது வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் மேடைப் பேச்சுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது என்பதால் அதை பொருட்படுத்தவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது.

கல்லூரி மாணவர்கள் திரைப்பாடல்களை அரங்கில் பாடினார்கள். திரைப்படமும் ஓர் இலக்கிய வடிவம்தானே. புத்தக் கண்காட்சியிலும் திரைப்படம் குறித்த புத்தகங்களும் விற்கத்தானே செய்கின்றன. கல்லூரி மாணவிகள் வடிவேலு வசனத்துடன் குத்துப்பாடல்களைக் கலந்து கட்டி ஆடி அரங்கைத் தெறிக்க விட்டார்கள். அந்த ஆட்டத்தைப் பார்த்து கண்காட்சியில் இருந்த புத்தகங்கள் கூட ஆட்டம் போட்டிருக்கலாம். அவ்வபோது உப்புச்சப்பில்லாத பட்டிமன்றங்களையும் நடத்திக் கொண்டிருந்தார்கள். இவற்றை அந்தந்த கல்லூரியிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் மட்டும் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

புத்தகக் கண்காட்சிக்கு வந்த குழந்தைகள் ஐஸ்கிரீமையும், நொறுக்குத் தீனிகளையும் கைகளில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். சரி, அவர்கள் குழந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள். கண்காட்சிக்கு வந்த பெரியவர்கள் கையிலும் ஒரு புத்தகத்தைப் பார்ப்பது வஷிஷ்டர் வாயால் வாழ்த்தை வாங்குவது போலிருந்தது. முன்பாவது புத்தகக் கண்காட்சிக்கு வந்ததற்கு அடையாளமாக ஓர் ஆங்கில அகராதியையாவது வாங்கிக் கொண்டு போவார்கள். இப்போது ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள் காண கையில் அலைபேசி இருப்பதால் அதையும் யாரும் வாங்குவதில்லை போலும்.

பத்து ரூபாய் புத்தகங்கள் விற்கும் அரங்குகளே காற்று வாங்கிக் கொண்டிருந்தன. பத்து ரூபாயில் புத்தகங்கள் போட்டால் ஆயிற்றா? அதில் படிப்பதற்கான சுவாரசியங்கள் வேண்டாமா என்றால் விலையைப் பார்த்து வாங்குபவர்களுக்கு அப்படிப்பட்ட அரங்குகளும் தேவையாகத்தான் இருக்கின்றன. அந்த அரங்குகளும் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததுதான் கொடுமை.

யூடீயூப்பைப் பார்த்து சமைக்கும் ஒரு தலைமுறை உருவாகி விட்டதால் சமையல் குறிப்புப் புத்தகங்களும் அதிகம் விற்பனையானதான தகவலில்லை. அலைபேசியிலேயே செயலி மூலமாக சாதகம், சோதிடம் பார்த்துக் கொள்ள முடிவதால் அந்த வகைப் புத்தகங்களுக்கும் பெரிய அளவில் விற்பனையில்லை.

திருவாரூர் மக்கள் இப்படி இருந்தால் அடுத்தப் புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் அமைக்க பதிப்பாளர்கள் நிச்சயம் தயங்கவே செய்வார்கள். சென்ற ஆண்டின் தயக்கம்தான் இந்த ஆண்டில் பல அரங்குகளை வெறிச்சோட வைத்திருக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் பல அரங்குகளில் பானிபூரியும், சோன்பப்டியும், டில்லி அப்பளமும்தான் விற்க வேண்டியிருக்கும். முறுக்கு, அதிரசம் போன்ற தமிழ்நாட்டுப் பண்டங்களுக்கு வேலையில்லாமல் போய் விடும்.

எனக்கென்னவோ திருவாரூர் மாவட்டம் தீவிர வாசிப்பாளர்கள் இல்லாமல் தடுமாறும் மாவட்டமாகத் தோன்றுகிறது. அதன் பிரதிபலிப்புதான் இந்த ஆண்டு வெகு சுமாராக நடந்திருக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி. இதில் உள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால் வாசகர்களைத் தீவிரமானவர்களாக யாரும் உருவாக்க முடியாது. அவர்களாகத்தான் தீவிரமாக உருவாக வேண்டும். அப்படி உருவாகுவதற்கு இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் வாய்ப்பாக அமைய வேண்டும். இந்தப் புத்தகக் கண்காட்சியின் போக்கைப் பார்த்த போது சோதா வாசகர்களை உருவாக்கக் கூட இதன் ஏற்பாடுகளும் திட்டமிடலும் போதாது.

ஓர் அடிப்படையான உண்மை என்னவென்றால், வாசகர்களால் புத்தகக் கண்காட்சியும், புத்தகக் கண்காட்சிகளால் வாசகர்களும் பரஸ்பரம் பலன் பெறுவதாக இருக்க வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் அந்த இரண்டும் திருவாரூரில் நடக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

*****

2 comments:

  1. அனைத்தும் உண்மை.... பொலந்து விட்டீர்கள்,...

    ReplyDelete

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...