ரசிகர்கள் எனும் மனித விட்டில்கள்!
மிக எளிதாகத் திரைப்படம்
மூலமாக அரசியலுக்கு வந்து விட முடிவது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு
அடுத்தபடியாக ஆந்திராவிலும் இப்படி நடந்திருக்கிறது என்றாலும் தொடர்ச்சியாக அப்படி
நடக்கவில்லை. அமெரிக்காவிலும் இப்படி நடந்திருக்கிறது என்றாலும் அங்கும் தொடர்ச்சியாக
இல்லை. ஆனால் தமிழகம் இதைத் தொடர்ச்சியாகச் செய்து உலகின் பல பகுதிகளுக்கு ஓர் ஆச்சரிய
முன்னுதாரணமாக இருக்கிறது.
தமிழகம் திரைவெறி பிடித்த
ரசிகர்களால் நிரம்பியிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்திய தமிழக முதல்வர்களைக் கணக்கில்
எடுத்துக் கொண்டால் திரையுலகோடு தொடர்பற்ற முதல்வர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள்.
அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் தங்கள் அரசியலுக்குத் திரையுலகைப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் திரையுலகைப் பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள். சிவாஜி
கணேசன், விஜயகாந்த், கமலஹாசன் போன்றோரின் அரசியல் பிரவேசங்களோடு தற்போதைய விஜய்யின்
அரசியல் பிரவேசம் வரை இந்தப் பாதையைப் பயன்படுத்தித்தான் தற்போது வரை தலைவர்களின் அரசியல்
பிரவேசம் நிகழ்கிறது.
எதிர்காலத்தில் இந்தப் போக்கு
திரையுலகிலிருந்து மேலதிக அரசியல்வாதிகளை உருவாக்கக் கூடும். சூர்யா, தனுஷ், சிம்பு
என்று அரசியலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். அதற்கேற்ப அவர்கள் நற்பணி
மன்றங்களையும், ரசிகர் மன்றங்களையும் ஆரம்பித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.
அரசியலுக்கு இந்தத் துறையிலிருந்து
இவர் வரலாம், அந்தத் துறையிலிருந்து அவர் வரக் கூடாது என்று வரையறைகளை உருவாக்கி விட
முடியாது. குற்றப் பின்னணியுடன் தண்டனைகளுக்கு ஆளானவர்கள் மட்டுமே குறிப்பிட்ட காலம்
தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்ட ரீதியான வரையறை மட்டுமே தற்போது உள்ளது.
அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான
நிறைய வாய்ப்புகள் மக்களுக்கு இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஏன் திரை பிம்பங்களையே தங்கள்
தலைவர்களாக வரித்துக் கொள்கிறார்கள் என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. மக்கள் அதுவும்
குறிப்பாகத் தமிழக மக்கள் ஒரு வித பிம்பக் கவர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதே இதன்
பின்னுள்ள எதார்த்தமாக இருக்கிறது. தமிழர்களுக்கு இப்போது இரண்டு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது.
ஒன்று போதைக் கவர்ச்சி. மற்றொன்று திரையுலக பிம்பக் கவர்ச்சி. இந்த இரண்டு கவர்ச்சிகளுக்காகவும்
எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு மோசமான சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து விட்டன.
ஈன்றாள் பசி கண்ட போதும் சான்றோர் பழிக்கும் வினைகளைச் செய்ய மறுத்த தனயன்கள் மாறி
விட்டார்கள். மது அருந்த பணம் கொடுக்காத தாயைக் கொல்வதற்கும் தயாராக இருக்கும் தனயன்கள்
தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.
தங்களுக்கு விருப்பமான நாயகர்கள்
படங்கள் வெளியாகும் போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வாகனத்தின் மீதேறி சாககம்
செய்து உயிரை இழக்கும் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள். திரைப்படக் காட்சியின் உந்தூக்கத்தால்
திரையரங்கைக் கிழித்தெறியும் வெறிபிடித்த இளைஞர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
ஏன் தமிழகத்தில் மட்டும்
இளைஞர்கள் இப்படி இருக்கிறார்கள்? சிறியவர் முதல் பெரியவர் வரை திரைநாயகரோடு தங்களைத்
தொடர்புபடுத்திக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்?
ஒரு வகை மசாலாத்தனம் தமிழர்களை
ஆட்கொண்டிருக்கிறது. அது அவர்களை ஆழமாக யோசிக்க முடியாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தோன்றிய நீதிக்கட்சி, திராவிட இயக்கம் போன்றவற்றின் போக்கை அனுமானித்தால்
தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் இந்தியாவிலேயே முதன்மையாக இருந்திருக்க வேண்டும். ஆழமாக
வாசிப்பவர்கள் தமிழகத்தில்தான் மிகுதியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் ஒரு தரமான
புத்தகம் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதே தலைகீழாக நின்று தண்ணீர் அருந்தும்
காரியத்துக்கு நிகரானது.
மெத்த படித்தவர்களும் ஆழமாகச்
சிந்திப்பவர்களும் தமிழகத்தில் இல்லையா? அநேகமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
மெத்த படித்தவர்களும், ஆழமாகச் சிந்திப்பவர்களும் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்கள்
அல்லது வெளிநாடுகளுக்கு வழிந்தோடுகிறார்கள். இங்கு இருப்பவர்கள் புத்தகத்தின் மூலமாக
உலகைப் புரிந்து கொள்பவர்களாக இருப்பதை விடவும் திரைப்படம் மூலமாக உலகைக் கட்டமைத்துக்
கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு நிகழ்வை ஆழமாகக் கேள்வி
கேட்கும் குணம் இன்னும் தமிழர்களுக்குப் போதாமையாகத்தான் இருக்கிறது. நிலைமை இப்படி
இருக்க ஒரு திரைப்படத்தை விமர்சனப் பூர்வமாக அணுகும் போக்கு தமிழகத்தில் மிக குறைவாகவே
இருக்கிறது. அவர்கள் திரைப்படத்தை அப்படியே நம்புகிறார்கள். ஒருவர் தீவிரவாதி என்றாலும்
அவருக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு எவ்வளவு விசாரணைகள், விவாதங்கள் நடைபெறுகின்றன
என்கிற எதார்த்தத்தை யோசிக்க மறுக்கிறார்கள். ஆனால் திரையில் நாயகர்கள் தலையைக் கொய்து
எறிவதை எதார்த்தம் போல அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த அளவுக்குத் தனிமனித கோபத்தை
இவர்கள் எப்படி அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே புரியாத புதிர்.
தமிழக மக்களின் மனநிலையை
மற்றும் சூழ்நிலையைத் திரையுலகம்தான் கட்டமைக்கிறது என்றால் அதை அறிவுப்பூர்வமாகக்
கட்டமைப்பதில் தமிழ்த் திரையுலகம் பின்தங்கி விட்டது. நிச்சயமாக அறிவுப்பூர்வமாகக்
கட்டமைக்க வேண்டிய தேவையும் திரையுலகிற்கு இல்லை. அதற்குத் தேவையான வணிக லாபத்திற்காகவே
அது இயங்கிக் கொண்டு இருக்கிறது. திரையுலகைச் சேர்ந்தவர்களும் அவர்களது லாபக் குறைவைத்தான்
விவாதிக்கிறார்கள், பேசு பொருளாக ஆக்கிறார்கள், லாபக் குறைவிற்காகத்தான் போராடுகிறார்கள்.
கட்டற்ற நிலைமையில் விற்கப்படும் திரையரங்க நுழைவுச்சீட்டுகள் குறித்து அவர்கள் கண்டு
கொள்வதே இல்லை.
மக்களின் மனோபாவமும் மிக
விசித்திரமாக இருக்கிறது. ஒரே இரவில், ஒரே பகலில் மாற்றத்தை உண்டு பண்ணி விடும் பிம்ப
மனோநிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். மாற்றம் என்பது நடைமுறையில் சிறிது சிறிதாகத்தான்
வரும், அதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்துவதன் மூலமாகத்தான்
கிடைக்கும் என்பதை ஏற்க மறுப்பவர்களாக இருக்கறிர்கள்.
எதார்த்தத்திலும் நடைமுறையிலும்
மக்களுக்கு நிறைய ஏமாற்றங்களும், விரக்திகளும் இருக்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.
அதற்கான தீர்வு தனிமனித கோபத்தை நீட்சிப் படுத்திக் காட்டி சமாதானமடையச் செய்யும் திரையுலக
பிம்பங்கள் அல்ல. அறிவுப்பூர்வமாக அணுகி அதைத் தீர்க்கும் வழிமுறைகளைப் படிப்படியாக
முன்னெடுப்பதே ஆகும்.
மக்கள் யாரை வேண்டுமானாலும்
தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவர் மக்களோடு பழகியவராக, மக்களது வினாக்களை
எதிர்கொள்பவராக, மக்களோடு மக்களாக களத்தில் நிற்பவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள்
ஒரு திரையுலக நாயகருக்கு இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நட்சத்திர தகுதியோடு மக்களிடமிருந்து
விலகியவர்களாகவே இருக்கிறார்கள். தங்களது மிகை நடிப்பின் மூலம் அல்லது எதார்த்தத்திற்கு
ஒவ்வாத காட்சிகள் மூலம் மக்களை ஒரு கவர்ச்சி வளையத்திற்குள் வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் கவர்ச்சி வளையத்தை நம்பி அதில் சிக்கிச் சின்னாபின்னமாகும் விட்டில்களாக
மக்கள் இன்னும் எத்தனை காலம்தான் இருப்பார்களோ? மனித விட்டில்கள்தான் ரசிர்கள் என்ற
பெயரில் அலைகிறார்களோ?!
*****
No comments:
Post a Comment