8 Feb 2024

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோம்! குழந்தைகளுடன் உரையாடல்களைத் துவக்குவோம்!

குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவோம்!

குழந்தைகளுடன் உரையாடல்களைத் துவக்குவோம்!

நாம் குழந்தைகளிடம் சரியாகப் பேசுகிறோமா? விவாதிக்கிறோமா? அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோமா? அவர்களோடு நேரம் செலவழித்து விளையாடுகிறோமா? அவர்களும் நாமுமாகச் சேர்ந்து புத்தகங்களை வாசிக்கிறோமா? அவர்களுக்குப் பள்ளியில், சமூகத்தில் நேர்ந்தவை பற்றி விசாரிக்கிறோமா? நமக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோமா?

அவர்களோடு சேர்ந்து சிரித்திருக்கிறோமா? ஒன்றாகக் கூடி தேநீர் பருகியிருக்கிறோமா? சேர்ந்து அமர்ந்து உணவு உண்டிருக்கிறோமா? இரவு வானின் நிலவை, நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோமா?

அவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தும் போது என்ன செய்கிறார்கள் என்பதை அருகில் இருந்து கவனித்திருக்கிறோமா? அவர்களும் நாமுமாகச் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்திருக்கிறோமா? அவர்களுக்கென ஒரு கதை சொல்லியிருக்கிறோமா?

அவர்களோடு நடைபயிற்சி செல்கிறோமா? அவர்களை அழைத்துக் கொண்டு போய் கடைகளில் பொருட்கள் எப்படி வாங்குவது என்பது குறித்த அனுபவத்தை அளித்திருக்கிறோமா?

பணத்தை எப்படியெல்லாம் சேமிப்பது, எப்படியெல்லாம் சிக்கனமாகச் செலவு செய்வது என்பது குறித்துச் சொல்லியிருக்கிறோமா? உணவுப் பொருட்களை வீணாக்காமல் உண்பது குறித்து உரையாடலைத் துவக்கியிருக்கிறோமா? அது குறித்து அவர்கள் சொல்லும் கருத்துகளை உள்வாங்கியிருக்கிறோமா? அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி வெளியில் அழைத்துச்  சென்றிருக்கிறோமா?

இவற்றில் நாம் எத்தனை செய்திருப்போம்? இன்னும் கூட குழந்தைகளோடு நாம் தொடர்புகளைப் பல்வேறு விதங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கலாம். அப்படி ஏதேனும் செய்திருக்கிறோமா?

ஆனால் நாம் குழந்தைகளுக்காக உழைக்கிறோம். அவர்களுக்காகப் பணம் சேர்க்கிறோம். அவர்களுக்காகக் கடன் வாங்குகிறோம். நகைகளை விற்று, சொத்துகளை விற்று பெரிய பெரிய பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். அவர்களுக்காகப் பாடாய்ப் படுகிறோம். இனி நம் வாழ்க்கையே அவர்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் நம் குழந்தைகளாகிய அவர்களுக்காகக் கஷ்டப்படுகிறோம். அவர்களுக்காகவே வாழ்கிறோம். இவற்றில் எதுவும் பொய்யில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அவர்களுக்கான தோழர்களாக நாம் இருந்திருக்கிறோமா? அவ்வபோது அதாவது தேவைப்படும் போது அக்கறையான வழிகாட்டியாக இருப்பது தெரியாமல் ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறோமா? அவர்கள் மடி சாய விரும்பும் தேவதைகளாக இருந்திருக்கிறோமா?

இவ்வளவு கேள்விகளை எதிர்கொண்ட பிறகு நீங்கள், குழந்தை வளர்ப்பில் எல்லா விசயங்களும் நம்முடைய கட்டுபாட்டில் இல்லை என்று சொல்ல நினைப்பது உண்மைதான். ஆனால் நம்முடைய கட்டுபாட்டில் இல்லாத விசயங்கள் குறித்து அவர்களோடு உரையாடலாம், விவாதிக்கலாம், ஆரோக்கியமான கருத்துப் பகிர்வைச் சாத்தியப்படுத்தலாம்.

குழந்தைகளை எதையும் பேசத் தெரிபவர்களாக வளர்க்க வேண்டும். எது குறித்தும் அவர்கள் தங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். வெகு முக்கியமாகத் தமக்கு நேரும் துன்பங்களையும் துயரங்களையும் பேசுவதற்குப் பயம் இல்லாதவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் வன்கொடுமைகள் நிகழ்ந்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பேசுவதே வலிமையான ஆயுதம். தங்களை வெளிபடுத்திக் கொள்ளும் பேச்சுக்கு நாம் அவர்களோடு உரையாடும் அக்கறையான உரையாடல்களே ஆதூரம். இதற்காகவேனும் பெற்றோர்கள் குழந்தைகளோடு தோழமையோடு பழகுவதும் பேசுவதும் அவசியமாகிறது.

குழந்தைகளை நாம் கட்டுபடுத்தக் கூடாது. அதே நேரத்தில் சுய கட்டுபாடு எவ்வளவு முக்கியம் என்பதை நம்முடைய நடத்தைகளாலும் நாம் அவர்களோடு நிகழ்த்தும் உரையாடல்கள் மூலமாகவும் உணர்த்த வேண்டும். சில சிக்கலான நிலைமைகளைப் பற்றிக் கூறி அதாவது கற்பிதமாகக் கூறி, இந்தச் சூழலில் நீ எப்படி நடந்து கொள்வாய் என்று அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும். அவர்கள் சுயாதீனமாகத் தங்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் அந்த நிலைமைகளில் நியாயமற்ற இரக்கமற்ற முறையில் நடந்து கொள்வது போலக் கருத்துகளைச் சொல்லலாம். அதைக் கேட்ட உடனே அவர்களை நெறிபடுத்தவோ அறிவுரை வழங்கி குற்ற உணர்வுக்கு ஆளாக்கவோ கூடாது.

அவர்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள், அதற்கான பின்னணிகள், காரணங்கள், உளவியல் தாக்கங்கள் என்ன என்பதை அவர்களது உரையாடல் மூலமாகவே வெளிக்கொணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள நினைக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு நம் மீது நம்பிக்கையையும் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும். அதன் பிறகும் நாம் அறிவுரையான ஓர் உரையாடலுக்குச் சட்டெனத் தாவி விடாமல் வேறெப்படி எல்லாம் சிக்கலான நிலைமைகளில் நடந்து கொண்டிருக்கலாம் என்ற அவர்களது கற்பனையையும் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் நம் உரையாடலை முன்னகர்த்திக் கொண்டு போக வேண்டும்.  

இதன் மூலமாக நாம் மனதில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால், ஒரு சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் தவறாக நடந்து கொள்வதைப் போன்ற பேச்சை முன் வைத்தாலும் அவசரப்பட்டு அதைத் தவறென்று முத்திரை குத்தி விடக் கூடாது. அவர்கள் ஏன் அப்படிச் செயல்பட நினைக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை அவர்களிடம் பேசிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் மறுபடியும் மேற்சொன்னதையே கீழே வலியுறுத்துவதாகத் தெரிந்தாலும் குழந்தைகளின்  உரையாடல்களில் இது முக்கியமானது.

அவர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திய பிறகு இந்தச் சூழ்நிலையில் இப்படி ஏன் நடந்து கொள்ளக் கூடாது என்று சரியான நிலைபாட்டை ஒரு சந்தேமாக வெளிப்படுத்துவது போல வெளிப்படுத்த வேண்டும். அந்த நிலைபாட்டை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மீண்டும் சரியான சந்தர்ப்பங்கள் அமையும் போது இதே உரையாடலை மீண்டும் துவக்கி அவர்களது மனநிலையைத் தெரிந்து கொண்டு விவாதித்துப் பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் பலமுறை பேச நாம் சலிப்போ அலுப்போ கொள்ளக் கூடாது.

சில நேரங்களில் சரியான கருத்துகள் என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் குழந்தைகள் அல்லல்படுவார்கள். அது போன்ற கருத்துகளை அவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது விளையாட்டோடு விளையாட்டாக எடுத்துக் கூறலாம். அவர்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதார்த்தமாகப் பேசுவது போல எடுத்துச் சொல்லலாம்.

குழந்தைகள் உங்களது சரியான கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அவசரப்பட்டு விடக் கூடாது. அவர்களோடு நேரம் செலவழிக்க நமக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கின்றன. நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அந்தச் சரியான கருத்தை மீண்டும் எடுத்துச் சொல்வதற்கேற்ற சந்தர்ப்பங்களும் வாழ்வில் வந்து சேரவே செய்கின்றன. அவ்வளவு பொறுமையாகக் காத்திருந்தே அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சரியான கருத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

குழந்தைகள் குறித்த தமிழகப் பெற்றோர்களின் கனவுகள் எல்லாம் படிக்க வைப்பது, வேலைக்கு அனுப்புவது, கை நிறைய சம்பாத்தியத்தைச் செய்ய வைப்பது என்பதாகவே இருக்கின்றன. இவை ஒன்றும் நிறைவேற்ற முடியாத கனவுகள் அல்ல. பல கல்விக்கூடங்கள் இவற்றைப் பெற்றோர்களுக்காக நிகழ்த்தித் தருவதற்கான பணங்காய்ச்சி வணிக மரங்களாக ஆகி விட்டன. இங்கே முக்கியமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால் பெற்றோர்கள் நினைக்கின்ற அத்தனை கனவுகளும் நிரம்பிய பிறகு பிள்ளைகள் தங்களுடைய வாழ்வில் வெறுமையையும் விரக்தியையும் உணர்ந்தால் அதன் பின்புலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளோடு உரையாடாத மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்காத பால்யங்களே பிள்ளைகளின் மனதில் நிறைந்திருக்கின்றன என்பதுதான்.

வாருங்கள் பெரியவர்களே மற்றும் பெற்றோர்களே! குழந்தைகளோடு பேசுவோம். அவர்களோடு ஆரோக்கியமான அரட்டைகளைத் தொடங்குவோம். இஷ்டம் போலக் கலந்துரையாடல்கள் செய்வோம். அவர்களுக்காக நேரம் செலவழிப்போம். குழந்தைகளுக்காகப் பணம் செலவழிப்பதை விட அவர்களோடு நேரம் செலவழிப்பதே அவர்களைப் பொறுப்பான சமூக அங்கத்தினர்களாகவும் மனித நேயமுள்ள கடமை உணர்வுள்ள மனிதர்களாகவும் மாற்றும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...