5 Feb 2024

உங்களுக்கு மட்டும் ஏன் நினைப்பது நடப்பதில்லை?

உங்களுக்கு மட்டும் ஏன் நினைப்பது நடப்பதில்லை?

எல்லாரும் நினைக்கிறார்கள். ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்றோ, எதிலோ ஒன்றில் வெற்றி பெற வேண்டும் என்றோ, எதையோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றோ எல்லாருக்குள்ளும் ஒரு நினைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாருடைய நினைப்பும் நடந்தேறி விடுகிறதா என்ன? ஒரு சிலரது நினைப்பே நடந்தேறுகிறது. பலரது நினைப்பு வெறும் நினைப்பாகப் போய் விடுகிறது. அந்த நினைப்பிலேயே ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று பாடியபடி வாழ வேண்டியதாகப் போய் விருக்கிறது.

நினைப்பு என்பது தண்ணீரில் எழுதும் எழுத்தைப் போன்றது. அந்த எழுத்துக்கான ஆயுட்காலம் சில நொடிகள் கூட கிடையாது. ஆனால் ஒரு சிலரது நினைப்போ கல்வெட்டில் பதித்த எழுத்துகளைப் போல ஆயுட்காலத்தையும் கடந்து சாகாநிலையை அடைந்து விடுகிறது. ஒரு நினைப்புக்கு இப்படி இருவேறு துருவ நிலைப்பாடுகளை அடையும் சாத்தியம் இருக்கிறது.

கல்வெட்டில் எழுதுவது என்பது தண்ணீரில் எழுதிப் பார்ப்பதைப் போன்று சுலபமானது இல்லை. அதற்கொரு பாறையோ, சுவரோ அல்லது எழுதுவதற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அதைத் தேடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது அல்லது உருவாக்க வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக அந்தக் கல்வெட்டில் எழுதுவதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், எந்த முறையில் எழுத வேண்டும் என்றெல்லாம் யோசித்துத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.காலத்திற்கும் நிலைத்திருக்கும் ஒன்றை அசட்டையாக எழுதி விட முடியாது. ஏனோ தானோ என்றும் எழுதி விட முடியாது. அக்கறையும் கவனமும் அதிகமாகவே தேவைப்படுகிறது.

எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்கும் வரையில் நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சியைக் கைவிடாமல் தொடரவும் வேண்டியிருக்கிறது. எழுதி முடித்த பின் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றினாலும் திரும்பவும் நீங்கள் முயற்சியையும் உழைப்பையும் முதலிலிருந்து தொடங்க வேண்டியும் இருக்கிறது.

மொத்தத்தில் நினைப்பு என்பது ஒரு நினைப்பாகப் போய் விடுவதற்கும் நடந்தேறுவதற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் நினைப்பது வெறும் நினைப்பாக மட்டும் போய் விடாமல், நினைப்பது நடந்தேற வேண்டும் என்றால் நினைப்புக்கும் செயலுக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். நினைப்பது நடந்தேறுவது நினைப்பதன் செயல் வடிவத்தால்தான் என்பதால் இந்தத் தொடர்பை உருவாக்குவது முக்கியமானது.

படிநிலைகள் மூன்று

இதை அடுத்து நினைப்பதை நடந்தேறச் செய்ய இதில் மூன்று படிநிலைகள் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிநிலைகளாவன,

1) நேரத்தை ஒதுக்க வேண்டும்.

2) கவனத்தைச் செலுத்த வேண்டும்.

3) உழைப்பை வழங்க வேண்டும்.

நேரம் ஒதுக்குதலின் முக்கியத்துவம்

நீங்கள் எந்த நினைப்பு நடந்தேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நினைப்பு நடந்தேறுவதற்கான செயலைச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். இதென்ன பிரமாதம் என்று நீங்கள் சொல்லலாம். அது அப்படி ஒன்றும் பிரமாதமானதும் இல்லை. ஆனால் இதுதான் ஒரு நினைப்பு நடந்தேறுவதற்கான அடித்தளமான முக்கியமான படிநிலையாகும்.

நீங்கள் எந்தச் செயலைச் செய்வதற்கு நேரம் ஒதுக்குகிறீர்களோ அந்த நேரத்தில் அந்தச் செயலைத்தான் செய்ய வேண்டும். இதனால்தான் நேரத்தை அந்தச் செயலுக்காக ஒதுக்க வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் அந்தச் செயலுக்காக நேரத்தை ஒதுக்கி விட்டு அந்த நேரத்தில் அரட்டை அடிக்கவோ, அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்கவோ, அந்த நேரத்தில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கவோ, நாளைக்குக் கொஞ்சம் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்தி வைத்துக் கொண்டிருப்பதோ கூடவே கூடாது.

எந்தச் செயலுக்காக நேரத்தை ஒதுக்கினீர்களோ அந்தச் செயலுக்காக மட்டும் அந்த நேரம் முழுவதையும் பயன்படுத்த வேண்டும்.

கவனம் செலுத்துதலின் முக்கியத்துவம்

இந்தப் படிநிலையையும் நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். ஒரு செயலைக் கவனம் செலுத்தாமல் எப்படிச் செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் எந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறீர்களோ அப்போது அந்தச் செயலில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் இதில் உள்ள முக்கியமான கூறு.

நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்து கொண்டிருக்கலாம் அல்லது கடனே என்றும் செய்து கொண்டிருக்கலாம். உங்கள் உடல் மட்டும் இந்தச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கலாம். கவனச்சிதறலோடோ, அது பாட்டுக்கு அது நடந்து கொண்டிருக்கும் என்ற விட்டேத்தியான போக்கோடோ நீங்கள் ஒரு செயலைச் செய்வது அந்தச் செயலில் பல பின்னடைவுகளை உண்டாக்கி விடும். நீங்கள் நினைத்தது போலக் காரியம் ஆற்ற முடியாத ஒரு நிலையையும் உண்டாக்கி விடும். உங்கள் கவனம் முழுமையும் நீங்கள் நினைத்த நினைப்பானது நடந்தேறுவதில் இருக்க வேண்டும்.

உழைப்பை வழங்குவதன் முக்கியத்துவம்

நேரத்தை ஒதுக்கிக் கவனத்தைச் செலுத்தி ஒரு செயலைச் செய்வதென்றால் உழைப்பை வழங்காமல் எப்படி இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் நினைப்பு நடந்தேற எவ்வளவு உழைப்பு தேவையோ அவ்வளவு உழைப்பையும் வழங்க வேண்டும் என்பதுதான் இந்தப் படிநிலையில் உள்ள முக்கியத்துவம்.

பல நேரங்களில் நீங்கள் நினைப்பது போல இரண்டு மடங்கு உழைப்பு கூட உங்களது நினைப்பு நடந்தேற போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நான்கு மடங்கு, எட்டு மடங்கு, பதினாறு மடங்கு உழைப்பு என்று உங்கள் உழைப்பை வழங்கவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இங்கு நினைப்பது நடந்தேறுவதுதான் முக்கியமே தவிர இத்தனை மடங்கு கூடுதல் உழைப்பை வழங்க வேண்டுமா என்ற கேள்விக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

சில செயல்களைக் கண்காணிப்பதன் மூலமாக மட்டுமோ, மேற்பார்வை செய்து விட்டு விடுவதன் மூலமாக மட்டுமோ முழுமையாக முடித்து விட முடியாது. நீங்களும் இறங்கி உழைத்தாக வேண்டியிருக்கும். அது போன்ற நிலைமைகளில் இறங்கி உழைப்பதற்கு நீங்கள் தயக்கம் காட்டவே கூடாது.

முக்காரணிகளின் முக்கியத்துவம்

எந்த நினைப்பும் சாத்தியமாகக் கூடியதுதான். சாத்தியமாகக் கூடிய நினைப்புகள் ஒவ்வொன்றிலும் நேரம் – கவனம் – உழைப்பு என்ற இந்த மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.

சில நினைப்புகளை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் நடத்தி விட முடியும். அங்கு உங்களுக்கு நேரம் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். ஒரு சில நினைப்புகளை நிகழ்த்திக் காட்டுவதற்குள் ஆண்டுகள் பலவற்றைக் கடக்க வேண்டியிருக்கும். நேரம் இங்கு அதிகம் என்றாலும் நினைப்பை நடத்திக் காட்ட அவ்வளவு நேரம் தேவைதான்.

சில நினைப்புகளை நிறைவேற்றிக் காட்டிட சாதாரண, சுமாரான உங்களது இயல்பான கவனம் கூட போதுமானதாக இருக்கலாம். ஆனால் நுட்பமான ஒரு நிகழ்த்திக் காட்டலில் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கலாம். எப்படிக் கவனித்து எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் சில ஆண்டுகளைக் கூட செலவிட வேண்டியிருக்கலாம்.

சில நினைப்புகளை நீங்கள் கண்ணசைவில் செய்து முடித்து விடக் கூடிய வல்லமை பெற்றவராக இருக்கலாம். நீங்கள்தான் இறங்கி உழைக்க வேண்டும் என்ற நிலையில்லாமல் இருக்கலாம். ஒரு சில நினைப்புகள் உங்கள் உழைப்பை உறிஞ்சி எடுத்து விடலாம். நினைத்ததை நடத்திக் காட்ட உங்களையே உருக்கி ஊற்றக் கூட வேண்டியிருக்கலாம். இந்த வேறுபாடுகளை செயலுக்குச் செயல் இருக்கும் மாறுபாடுகளை நீங்கள் வெகு கவனமாக உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பல மடங்கும் கொடுக்க வேண்டியிருக்கும்

உங்களது நினைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் இறங்கி விட்டால் நேரம் – கவனம் – உழைப்பு என்ற இந்த மூன்று காரணிகளும் எந்தெந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை அவ்வளவு துல்லியமாகக் கூறி விட முடியாது. எவ்வளவு தேவையோ அதைத் தாண்டியும் சில சமயங்களில் கொடுக்க வேண்டி வரலாம். நீங்கள் நினைப்பது நடந்தேறுவதுதான் முக்கியம் என்று நினைத்தால், நினைப்பது நடந்தேறும் வரைக்கும் அம்மூன்றையும் நீங்கள் அளவின்றிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கும்.

உங்கள் நினைப்பிற்கு வல்லமை வேண்டும் என்று நினைத்தால் நேரம் – கவனம் – உழைப்பு ஆகிய இந்த மூன்றையும் பலமடங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை மனதிற் கொண்டே உங்கள் நினைப்பை நிறைவேற்ற இறங்குங்கள். அப்படி இறங்கும் பட்சத்தில் உங்களால் மட்டும் ஏன் உங்கள் நினைப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை. நினைப்பதெல்லாம் உங்களுக்கு அப்போது நடந்தேறும். நினைப்பது முடியும் என்பது உங்களைப் பொருத்த வரையும் எப்போதும் நிஜமாகும்.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...