1 Jan 2024

சும்மா இருப்பதன் சூட்சம ரகசியம்!

சும்மா இருப்பதன் சூட்சம ரகசியம்!

சும்மா இருப்பதே சுகம் என்பார்கள்.

எப்போதும் எல்லாவற்றிலும் சும்மா இருப்பது சுகமா என்றால், அப்படி எல்லா சூழ்நிலைகளுக்கும் பொதுப்படையாகப் பொதுமைபடுத்திக் கொள்ளும் வாக்கியமில்லை அது.

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எதையாவது செய்வதை விட எதுவும் செய்யாமல் இருப்பது சுகமானது. அச்சூழ்நிலைகள் எதுவென்று அறிந்து கொள்வது முக்கியமானது. அதை அறிவதே சும்மா இருப்பதன் சுகத்தை அறிந்து கொள்ளும் சூட்சம ரகசியமாகிறது.

நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் செய்வன மற்றும் செய்ய வேண்டாதன (Dos and Don’ts) என்று சொல்வார்களே. அதில் உள்ள செய்ய வேண்டாதன (Don’ts) என்பதற்கு இணையாகப் பொருள் கொள்ளக் கூடியதே சும்மா இருக்கும் சுகமான செயல் எனலாம்.

பதற்றமும் பரபரப்பும் நிறைந்த சூழலில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகத் தெரியாத நிலையில் அதே பதற்றத்திலும் பரபரப்பிலும் ஏதோ ஒரு முடிவை எடுப்பதை விட சும்மா இருப்பதே நல்லது. சும்மா இருப்பது என்றால் நிகழ்கின்ற நிகழ்வைக் கவனித்துக் கொண்டே சும்மா இருப்பது. அப்படிச் செய்வதன் மூலமாக நடப்பது குறித்த ஒரு தெளிவான நிலையை அடைய இயலும். பதற்றமான சூழ்நிலையில் மேலும் பதற்றமாகச் செய்வதன் மூலமாக நிலைமைச் சிக்கலடைவதை இது தடுக்கும்.

உணர்ச்சிகரமான நிலைமைகளில் சும்மா இருப்பது மிகவும் பொருத்தமானது. பெரும்பாலான சிக்கல்களும் பிரச்சனைகளும் உணர்ச்சிகரமான நிலைமைகளில் ஏற்படக் கூடியன. அது போன்ற நேரங்களில் சும்மா இருந்து விடுவதன் மூலமாக நிலைமை மேலும் சிக்கலாகாமல், பிரச்சனைகள் மேலும் பெரிதாகாமல் தடுத்து விட முடியும்.

உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று என்ன பேசுகிறோம் என்று புரியாமல் விபரீதமாக எதையாவது பேசி விடுவது. மற்றொன்று ஏன் கோபப்படுகிறோம் என்பது புரியாமல் கோபப்பட்டு விபரீதமாக எதையாவது செய்து விடுவது. இது போன்ற உணர்ச்சிவசப்படுபவர்கள் சும்மா இருப்பதன் மூலம் இருவகைப் பிரச்சனைகளையும் ஏற்படாமல் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக உணர்வுக் கட்டுபாடு என்பது சீரான வாழ்வுக்கு அவசியமாக இருக்கிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது ஒரு சிரமமான சவால் நிறைந்த காரியம். இதை சும்மா இருத்தல் சுகம் என்ற முறையால் மிக எளிதாகச் சாதித்து விட முடியும். ஒருவரால் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த இயலாது என்றால் அது போன்ற நேரங்களில் சும்மா இருப்பது எவ்வளவு நல்லது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. இதனால் அநாவசிய எதிர்வினைகளைத் தனக்குத் தானே ஒருவர் ஏற்படுத்திக் கொள்வதைத் தடுத்துக் கொள்ள முடியும்.

எப்போது கோபப்படுவோம், எரிச்சல் அடைவோம், விரக்தி அடைவோம், கொந்தளிப்பு அடைவோம் என்று பெருவெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்தச் சும்மா இருத்தலைப் பயன்படுத்தலாம்.

மன இறுக்கமான மற்றும் மன அழுத்தமான நிலைமைகளுக்கு இந்த வாக்கியம் அருமருந்து எனலாம். விபரீதமான முடிவுகளை எடுக்கும் நிலைமைகள் என்று மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம் சார்ந்த நிலைமைகளைக் குறிப்பிடலாம். அது போன்ற நேரங்களில் சும்மா இருப்பதன் மூலமாக எந்த விதமான விபரீதமான முடிவுகளை நோக்கிச் செல்வதைத் தடுத்தாட் கொள்ள முடியும்.

இப்படி சும்மா இருப்பது சுகம் என்பதை எதிர்மறையான அத்தனை சூழ்நிலைகளிலும் பயன்படுத்தி வெற்றிக் கொள்ள முடியும். அதாவது எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு அதிகமாக வினையாற்றாமல் இருந்தாலே சூழ்நிலை மேலும் எதிர்மறையாக ஆவதைத் தடுக்க முடியும். எதிர்மறை நிலைகளில் எதையும் செய்ய வேண்டாம் (Don’t) என்பதற்கான பொதுவான சூத்திரமே சும்மா இருப்பதே சுகம் என்பதாகும்.

காரியம் ஆற்ற வேண்டிய நிலைகளில் காரியம் ஆற்றாமல் சும்மா இருப்பதற்கு அந்தச் சூத்திரம் ஒரு போதும் உதவாது. இதனால் எந்தச் சூத்திரத்தை எப்போது பயன்படுத்த வேண்டும் என அறிந்து அந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பது அறியலாகும்.

எப்போது சும்மா இருப்பது சுகமோ அப்போதுதான் சும்மா இருக்க வேண்டும். எப்போது செயலாற்ற வேண்டுமோ அப்போது சும்மா இருக்காமல் செயலாற்றத் தொடங்க வேண்டும். எப்போது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சம ரகசியம் அடங்கியிருக்கிறது. இந்தச் சூட்சம ரகசியத்தை எப்போதும் புரிந்து கொள்ளுங்கள்.

எப்போது நிலைமை சரியில்லையோ, நீங்கள் வினையாற்றினால் தவறாகும் என்று தோன்றுகிறதோ அப்போது சும்மா இருங்கள். எப்போது நிலைமை சரியாகி நீங்கள் வினையாற்றினால் சிறப்பாக இருக்கும் என்ற நிலைமை உண்டாகிறதோ அப்போது செயலாற்றத் தொடங்கி விடுங்கள்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...