30 Nov 2023

தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்

தி. ஜானகிராமனின் ஏழாவது நாவல் செம்பருத்தி. 1968 இல் நூல் வடிவில் வெளியான நாவல் இது.

தி.ஜா.வின் நாவல்களில் மிகவும் எதார்த்தமான நாவல் என்று இதைக் குறிப்பிட முடியும். அவரது ஒவ்வொரு நாவல்களிலும் பெண்கள் வசீகரிப்பவர்களாகவும் வாஞ்சையான தேவதைகளைப் போலவும் காட்சியளிப்பார்கள். இந்த நாவலில்தான் தி.ஜா. பெண்களை அத்தனை எதார்த்தங்களுடனும் படைத்துள்ளார். இந்த நாவலிலும் பெண்கள் வசீகரிக்கிறார்கள், தேவதைகளைப் போல இருக்கிறார்கள், சாதாரண மனுஷிகளாவும் இருக்கிறார்கள், சண்டை போடவும் செய்கிறார்கள், மன விகாரங்களை வெளிப்படுத்திக் கலங்கடிக்கவும் செய்கிறார்கள்.

ஒரு சம்சாரியின் மொத்த வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இந்த நாவல். நாவலை மூன்று அத்தியாயங்களாகப் பகுத்து சட்டநாதன் என்ற சம்சாரியின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு போகிறார் தி.ஜா.

சட்டநாதன் எனும் சம்சாரி குடும்பத்தை நிலைநிறுத்துவது முதல் அத்தியாயம். அவர் அடுத்த தலைமுறை வாரிசுகளுக்குத் தன் கடமைகளைச் செய்து முடிப்பது இரண்டாவது அத்தியாயம். முதுமையை எதிர்கொள்வது மூன்றாவது அத்தியாயம். இப்படி இந்த நாவலின் அத்தியாயங்களை ஒரு வசதிக்காகப் பகுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தி.ஜா. காட்டும் குடும்பச் சிடுக்குகளும், பொருளாதாரச் சிக்கல்களும், அவைப் பாத்திரங்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களும் நுட்பமானவை. மூன்று அத்தியாயங்களிலும் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களும் முக்கியமானவர்கள். அதுதான் நாவல் என்றும் சொல்லலாம். மூன்று பெண்களையும் மூன்று ஆண்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் சொல்லலாம் என்றாலும் நாவலின் பெரும்போக்கு சட்டநாதனை மையமாகக் கொண்டு சுழல்வதால் மூன்று அத்தியாயங்களிலும் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்கள் என்று சொல்வதும் பொருத்தமாகும்.

முதல் அத்தியாயத்தில் சட்டநாதனின் மூத்த அண்ணி ஆற்றாமையால் மன விகாரத்தை வெளிப்படுத்துபவளாக இருக்கிறாள். இரண்டாவது அத்தியாயத்தில் அந்த விகாரத்தை வெளிப்படுத்தும் பணியை இரண்டாவது அண்ணி குஞ்சம்மாள் ஏற்றுக் கொள்கிறாள். இந்த இரண்டு அத்தியாயங்களிலும் சட்டநாதனுக்குப் பெண்களின் மன விகாரங்களை எதிர்கொள்ள ஆறுதலாகவும் தேறுதலாகவும் நிற்கும் மனைவியான புவனா மூன்றாவது அத்தியாயத்தில் அவளே மன விகாரத்தை வெளிப்படுத்துபவளாகவும் மாறி விடுகிறாள்.

ஒரு சம்சாரிக்குக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதைத் தவிர வேறு என்ன பெரிய கடமை இருக்க முடியும்? சட்டநாதன் அப்படி ஒரு சம்சாரி. இதனைக் குடும்பத்தின் மூத்தப் பையன் செய்ய வேண்டும் என்ற ஒரு மரபு குடும்ப முறையில் உண்டு. சட்டநாதன் கடைக்குட்டி. கடைக்குட்டியின் தலையில் குடும்பத்தின் மொத்த பாரமும் விழுகிறது. மொத்த பாரத்தையும் இயல்பாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் அமைதியாகவும் எதிர்கொள்கிறார் சட்டநாதன்.

மூத்த அண்ணன் கோபாலசாமிக்கும் இரண்டாவது அண்ணன் முத்துச்சாமிக்கும் ஏழாம் வகுப்புக்கு மேல் ஏறாத படிப்பு சட்டநாதனுக்கு ஏறுகிறது. ஏறி என்ன பயன் என்பது போல அடுத்தடுத்துக் குடும்ப பாரங்கள் சட்டநாதனின் தலையில் விழும் போது படிப்பிற்கேற்ற வேலையைத் தேடாது குடும்பத்தின் ஒவ்வொரு பாரத்தையும் அதன் போக்கில் சுமக்க ஆரம்பித்து நிகழ்வுகளின் போக்கில் எதிர்கொள்கிறார்.

படிக்கும் காலத்தில் தான் ஆசைப்பட்ட தாண்டவ வாத்தியாரின் மகள் குஞ்சம்மாளை இரண்டாவது அண்ணன் முத்துச்சாமி கட்டிக் கொண்டு அண்ணியாக ஆக்குவதும், அப்படி ஆக்கிவிட்டு மார்கழி மாதத்துச் சீக்கு எனச் சொல்லப்படும் காலராவில் சாகும் தறுவாயில் சட்டநாதனுக்கு சண்பகவனத்தின் மகள் புவனாவைப் பெண்டாட்டியாகக் காட்டி விட்டுப் போய்ச் சேர்ந்து விடுவதும் சட்டநாதனுக்கு முதல் அத்தியாயத்தில் நிகழும் ஆற்றாமையும் ஆறுதலும் ஆகும்.

இரண்டாவது அண்ணன் முத்துச்சாமி நடத்திய கடையைச் சட்டநாதன் ஏற்று நடத்துகையில் இரண்டாவது அண்ணியான குஞ்சம்மாளின் அன்னியோன்யத்தையும் வேட்கையையும் ஏற்கவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் சட்டநாதனின் கிரகஸ்த வாழ்க்கையை நாவலின் முதல் அத்தியாயத்தில் நகர்த்திக் கொண்டு போகிறார் தி.ஜா.

மூத்த அண்ணன் கோபாலச்சாமி ஜாமீன் கையெழுத்துப் போட்டதற்காக மொத்த சொத்தையும் இழந்து பதினான்காயிரம் கடனையும் கொண்டு வந்து சேர்த்து விடும் போது இரண்டாவது அண்ணனின் குடும்பத்தோடு மூத்த அண்ணனின் குடும்ப பாரமும் சேர்ந்து கொள்கிறது சட்டநாதனின் தோள்களில். இந்த இரண்டு குடும்ப பாரங்களையும் இரண்டு தோள்களிலும் கூடுதலாக தனது குடும்ப பாரத்தை தலையிலும் என்று மூன்று குடும்ப பாரங்களையும் மளிகைக் கடை வியாபாரத்தைக் கொண்டு அநாயசமாகக் கடந்து வருவதாகச் சட்டநாதனை வடிவமைக்கிறார் தி.ஜா.

இரண்டாவது அண்ணன் சொன்னபடி புவனாவை மணம் முடித்துக் கொள்வதாகட்டும், அண்ணனின் மகளைத் திருமணம் செய்விப்பதாகட்டும், மூத்த அண்ணனின் மகளுக்குத் திருமணம் முடிப்பதாகட்டும், அதற்காகக் கூடுதலாகக் கடன் வாங்குவதாகட்டும் அனைத்திலும் சட்டநாதனை ஒரு தேர்ந்த சம்சாரியாகச் சரியாக நிலைநிறுத்திக் காட்டுகிறார் தி.ஜா.

சட்டநாதன் எவ்வளவு தன்னைச் சரியாக நிலைநிறுத்தினாலும் குடும்பச் சொத்தை விற்ற வகையில் சம்பந்தமில்லாமல் பிற்பாடு வரும் அறுபதினாயிரம் ரூபாய் குடும்ப உறுப்பினர்களின் மனதை உருமாற்றிப் போடுவதாக நாவலின் அடுத்தடுத்த முடிச்சுகளையும் உளச் சிக்கல்களையும் கொணர்ந்து,எல்லாம் சுபமாக முடியும் இடத்தில் சுபமின்மையை உருவாக்கும் இடத்தில் நாவலை அதன் அடுத்த தளத்திற்குக் கொண்டு போகிறார் தி.ஜா. மூன்று பெண்களிடமும் வெளிப்படும் மன விகாரங்களையும் ஆற்றாமைகளையும் அளவுக்கதிகமாக அப்போதுதான் எதிர்கொள்கிறார் சட்டநாதன்.

நாவலுக்கு முடிவுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கைக்கு எங்கே முடிவு இருக்கிறது? அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தத் தொடர்ச்சியானது சிக்குச் சிக்காகிக் கொண்டே போகும் முடிச்சுகளாகவும் அவிழ்ப்புகளாகவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இந்த நாவலில் தி.ஜா. காட்டும் குடும்ப உலகம்.

சட்டநாதனுக்கு ஒரு சம்சாரியாகக் குடும்பத்தைத் தாண்டிப் பெரிதாக வேறு எதையும் செய்யவில்லை என்ற ஏக்கமும் உண்டு. நாவல் நிகழும் காலகட்டத்தையும் தி.ஜா. துல்லியமாகச் சித்தரித்துள்ளார். 1930 லிருந்து 1960க்குள்ளான கால கட்டம்தான் அது. அப்போது சுதந்திரப் போராட்டம் நடக்கிறது. பொதுவுடைமைக் கருத்துகளின் தாக்கமும் அப்போது அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த இரண்டும் சட்டநாதனை ஓர் ஆற்றாமையைக் கொள்ள வைக்க காரணமாகும் காலப் பின்னணியையும் தி.ஜா. நாவலில் கொண்டு வருகிறார்.

காந்தியடிகள் பற்றியும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் பற்றியும், இரண்டாம் உலகப் போர் பற்றியும், போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பற்றியும், ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகள் வீசியதைப் பற்றியும் தி.ஜா. ஆங்காங்கே காலக்குறிப்பைக் காட்டிச் செல்கிறார். 06.09.1945 என்று பிள்ளைகளின் திருமணம் நடக்கும் ஓரிடத்தில் நாள்குறிப்பையும் தெளிவாகக் காட்டுகிறார். இந்தக் கால கட்டங்களில் குடும்பத்திற்காகச் செய்ததைத் தவிர சுதந்திரத்திற்காக எதையும் செய்யவில்லையே என்ற ஏக்கம் சட்டநாதனுக்கு இருப்பதை நாவலில் காட்சிப்படுத்துகிறர் தி.ஜா.

சுதந்திரத்திற்குப் பிறகும் தன் குடும்பம், பெண்டுகள், பிள்ளைகள் என்று இருந்து விட்டதைச் சட்டநாதன் யோசித்துப் பார்க்கிறார். எவ்வளவுதான் ஆதூரமாகவும் அரவணைத்துக் கொண்டு இருந்தாலும் மூன்று பெண்களின் மூலமாக அடைவது மன வேதனையாக மிஞ்சுவதையும் எண்ணிப் பார்க்கிறார். முடிவில் வானப்பிரஸ்தக் காலத்தில் சட்டநாதன் தனது மளிகைக் கடையைத் தன்னிடம் வேலை பார்த்த வேலையாட்களுக்கே எழுதி வைத்து விடுகிறார். இப்படி முடிவில் ஓர் லட்சியவாத மனிதராகச் சட்டநாதனை நிலைநிறுத்துகிறார் தி.ஜா.

சட்டநாதனுக்குப் பெரிதாக நண்பர்களோ, வெளியுலகத் தொடர்புகளோ இருப்பதில்லை. அவருக்கு இருக்கும் நட்புகளும் வெளியுலகத் தொடர்புகளும் மளிகைக்கடை வியாபாரம் மற்றும் உறவுகள் சார்ந்தது மட்டுமே. உறவுகள் என்று பார்த்தால் குடும்ப உறவுகள்தான். அதைத் தாண்டி வேறு வெளியுலக உறவுகளையும் அதிகம் அவர் ஏற்படுத்திக் கொள்வதில்லை.

இரண்டு அண்ணிகள், மனைவி என்று மூன்று பெண்கள் உருவாக்கிய நோக்கங்களும் தாக்கங்களும்தான் சட்டநாதனின் வாழ்க்கை. அவர் யாரையும் பிரிந்து விடப் பிரியப்படவில்லை. ஆனால் இரண்டு அண்ணிகளும் பிரிந்து கொண்டு போகிறார்கள். கடைசி காலக்கட்டத்தில் மனைவி புவனாவும் அவரை வருத்தும் போது சட்டநாதன் அமைதியாகவும் தனிமையாகவும் எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்.

குடும்பத்திற்காக வாழ்ந்து முடிவில் எல்லாவற்றையும் துறந்து விட்டாலும் மனைவியை மட்டும் துறக்காமல் தன்னை அவள் எவ்வளவு வெறுத்த போதும் அவளிடமே கரைத்துக் கொள்கிறார் சட்டநாதன். இப்படியாகச் சாதாரண சம்சாரி வாழ்க்கையை எடுத்துக் கொண்டு அதைத் தனக்கே உரிய பாணியில் முன்னெடுத்து சொல்லும் விதத்தில் ‘செம்பருத்தி’ எனும் இந்த நாவலை அசாதாரண நாவலாக்கி விடுகிறார் தி.ஜா.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...